search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "high fees"

    • ரூ.700 கட்டணம் வசூல் செய்வதற்கு பதிலாக ரூ.2000 வரை வசூல்
    • உரிமையாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை

    ஆலங்காயம்:

    ஆயுத பூஜை மற்றும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் நெருங்கி வரும் சூழலில் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது.

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி டோல்பிளாசா அருகில் போக்குவரத்து துறை ஆணையர் சண்முகசுந்தரம் உத்தரவின் பேரில் வேலூர் துணை ஆணையர் நெல்லையப்பன் மேற்பார்வையில் வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வெங்கட்ராகவன்( வாணியம்பாடி), அமர்நாத் (ஆம்பூர்) ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது பெங்களூரிலிருந்து சென்னை நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற ஆம்னி சொகுசு பஸ்களை நிறுத்தி திடீர் சோதனை நடத்தினர்.

    வழக்கமாக ரூ.700 கட்டணம் வசூல் செய்வதற்கு பதிலாக ரூ.2000 வரை கூடு தலாக அதிக கட்டணம் வசூல் செய்து வந்ததும்,சரக்கு வாகனங்கள் போல் பஸ்சின் மீது பொருட்கள் ஏற்றிச் சென்றது, சுற்றுலா வாகனம் என அனுமதி பெற்று பயணிகளை ஏற்றி பயன்படுத்தி வந்தது என அனுமதிக்கு புறம்பாக இயக்கி வருவது கண்டறியப்பட்டது. 4 ஆம்னி பஸ்களை பறிமுதல் செய்து வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

    மேலும் பஸ்களின் உரிமையாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி அதன் மீதான நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது.

    • தொடர் விடுமுறையால் சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள்
    • கூடுதலாக வசூலித்த பணம் பயணிகளிடம் திருப்பி அளிக்கப்பட்டது

    வேலூர்

    பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகாரையடுத்து ஆம்னி பஸ்களில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.

    சுதந்திர தினத்தையொட்டி தொடர் விடுமுறை இருந்ததால் பொதுமக்கள் பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர். ரெயில்சேவை, அரசு போக்குவரத்து சேவை கிடைக்காததால் பலர் தனியார் போக்குவரத்து சேவையை பயன்படுத்தினர். அதன்படி பலர் ஆம்னி பஸ்களில் சொந்த ஊருக்குச் செல்ல ஆர்வம் காட்டினர்.

    ஆனால் பயணிகளிடம் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை வசூலிக்காமல் சில தனியார் பஸ்கள் கூடுதலாக வசூலித்தனர்.

    இதுகுறித்து அரசுக்கு பல்வேறு புகார்கள் சென்றது. இதையடுத்து சென்னையில் இது தொடர்பாக குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் பஸ்களில் சோதனை செய்தனர். அப்போது கூடுதல் கட்டணம் செலுத்தியவர்களுக்கு பணம் திரும்ப பெற்று அவர்களிடம் ஒப்படைத்தனர்.

    அதேபோல வேலூர் சரக துணை போக்குவரத்து ஆணையர் இளங்கோவன் உத்தரவின் பேரில், ராணிப்பேட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம் தலைமையில், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் செந்தில்வேலன் (வேலூர்), காளியப்பன் (வாணியம்பாடி, திருப்பத்தூர்), துரைச்சாமி (ஓசூர்), மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சிவக்குமார் (ராணிப்பேட்டை), மாணிக்கம் (வேலூர்) உள்ளிட்டோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் கடந்த 12 மற்றும் 13-ந் தேதிகளில் பள்ளிகொண்டா சுங்கச்சாவடி உள்ளிட்ட சுங்கச்சாவடிகள் அமைந்துள்ள இடங்களில் ஆம்னி பஸ்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

    சுமார் 130 ஆம்னி பஸ்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 27 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை அளிக்கப்பட்டது. மேலும், 7 ஆம்னி பஸ்கள் ரூ.19 ஆயிரத்து 400 கூடுதல் கட்டணம் வசூலித்ததாக தெரிய வரவே, அந்தக் கட்டணம் பயணிகளுக்கு திருப்பி அளிக்கப்பட்டது.

    இணக்க கட்டணமாக ரூ.42 ஆயிரத்து 500, பல்வேறு வரிகள் ரூ.2 லட்சத்து 62 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.

    இந்த ஆய்வு விடுமுறைக்கு பின்னர் மீண்டும் நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஊட்டியில் வாகன நிறுத்தும் இடங்களில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீசனை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் ஊட்டிக்கு வந்து செல்கிறார்கள். ஊட்டி நகரில் நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் (என்.சி.எம்.எஸ்.), அசெம்பிளி ரூம்ஸ், திபெத்தியன் மார்க்கெட், ஏ.டி.சி. திடல் அருகே உள்ள காந்தி மைதானம் உள்பட பல்வேறு இடங்களில் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு, சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து வருகின்றனர். இதில் ஒரு சில வாகன நிறுத்துமிடங்களில் கார், வேன், பஸ்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் வந்து உள்ளன.

    இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசாருக்கு பல்வேறு புகார் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நீலகிரி மாவட்ட போலீசார் சார்பில், ஊட்டியில் உள்ள வாகன நிறுத்தும் இடங்களில் சுற்றுலா பயணிகளுக்கு தெரியும் வகையில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. அதில், சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு கட்டண வசூல் செய்யும் இடங்களில் வாகனங்கள் 24 மணி நேரம் நிற்கலாம். கார் மற்றும் ஜீப்புக்கு ரூ.50, வேன் மற்றும் மினி பஸ்சுக்கு ரூ.100, பஸ்சுக்கு ரூ.150-ம் கட்டணமாக வசூலிக்க வேண்டும். நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூல் செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் ஊட்டியில் உள்ள ஒருசில வாகனம் நிறுத்தும் இடங்களில் கார் மற்றும் ஜீப்புகளுக்கு ரூ.60-ம், பஸ்சுக்கு ரூ.180-ம் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த ரசீதுகளும் வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்படுகிறது. வாகன நிறுத்தும் இடங்களின் முன்பகுதியில் புதியதாக வைக்கப்பட்டு உள்ள அறிவுப்பு பலகையை சுற்றுலா பயணிகள் பார்த்து விட்டு, கட்டணம் வசூலிப்பவரிடம் நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால் கூடுதல் கட்டணமே வசூலிப்பதாக பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

    இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:- நீலகிரி மாவட்ட போலீசார் சார்பில், ஊட்டியில் உள்ள வாகன நிறுத்தும் இடங்களில் கட்டணம் நிர்ணயம் குறித்த அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. ஒரு சில இடங்களில் அந்த பலகைகள் மறைக்கப்பட்டு உள்ளது. சில பார்க்கிங் உரிமையாளர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதால், சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். நிர்ணயம் செய்யப்பட்டதை விட பஸ்சுக்கு ரூ.30 கூடுதலாக வசூலிப்பதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே, அதிக கட்டணம் வசூலிப்பவர்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதுகுறித்து பார்க்கிங் நிர்வாகிகள் கூறும்போது, ஜி.எஸ்.டி. வரியுடன் சேர்த்து கட்டணம் வசூலிக்கப்படுவதாக தெரிவித்தனர். 
    ×