search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Economic crisis"

    • பாகிஸ்தான் மக்கள் கட்சி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
    • அந்நாட்டு பாராளுமன்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    பாகிஸ்தானில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஜனாதிபதி ஆசிஃப் அலி சர்தாரி தனது பதவிக்காலம் முடியும் வரை தனக்கு சம்பளம் வேண்டாம் என்று தெரிவித்து இருக்கிறார். அந்நாட்டில் நிலவும் மோசமான நிதி நெருக்கடி காரணமாக இந்த முடிவை தான் எடுத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

    68 வயதான சர்தாரி பாகிஸ்தான் நாட்டின் 14-வது ஜனாதிபதியாக கடந்த ஞாயிற்று கிழமை (மார்ச் 10) பதவியேற்றார். அந்த வகையில் நிதி நிலையை கருத்தில் கொண்டு, நாட்டின் கருவூலத்திற்கு மேலும் சுமையை ஏற்றுவதை தவிர்க்கும் வகையில் இந்த முடிவை எடுத்து இருப்பதாக பாகிஸ்தான் மக்கள் கட்சி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

    பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி ஆரிஃப் ஆல்வி சம்பளமாக மாதம் ரூ. 8 லட்சத்து 46 ஆயிரத்து 550 பெற்று வந்தார். இந்த தொகை 2018-ம் ஆண்டு நடைபெற்ற அந்நாட்டு பாராளுமன்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாகும். பாகிஸ்தானின் பணக்கார அரசியல் தலைவர்களில் ஒருவராக தற்போதைய ஜனாதிபதி சர்தாரி விளங்குகிறார்.

    • மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.
    • பொருளாதார நெருக்கடியால் தவித்த மக்கள் தற்போது மின் தடையால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

    கொழும்பு:

    இலங்கை முழுவதும் மின்தடை ஏற்பட்டதால் மக்கள் கடும் அவதியடைந்தனர். மின் வினியோக பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின்சார சப்ளையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

    நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியது. இதனால் மக்கள் விடிய விடிய தூங்காமல் தவித்தனர். மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.

    பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சார வினியோகத்தை சீர் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கையில் மின்சார அமைப்பு தெரிவித்தது.

    பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்த இலங்கை, அதிலிருந்து மீண்டு வந்தது. இதற்கிடையே இலங்கையில் மின் வினியோக பாதையில் கோளாறு காரணமாக மின்தடை ஏற்படுகிறது.

    ஏற்கனவே பொருளாதார நெருக்கடியால் தவித்த மக்கள் தற்போது மின் தடையால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

    • இலங்கையில் கடந்த 2021-ம் ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.
    • மக்கள் போராட்டத்தால் ராஜபக்சே குடும்பத்தினர் ஆட்சியை இழந்தனர்.

    கொழும்பு:

    இலங்கையில் கடந்த 2021-ம் ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் பற்றாக்குறையால் மக்கள் அவதியடைந்தனர். மக்களின் போராட்டங்களால் ராஜபக்சே குடும்பத்தினர் ஆட்சி அதிகாரத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டனர்.

    பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் பண வீக்கம் வரலாறு காணாத வகையில் அதிகரித்தது. இதுதொடர்பாக இலங்கை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.

    இந்நிலையில், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மகிந்த ராஜபக்சே, கோத்தபய ராஜபக்சே, பசில் ராஜபக்சே ஆகியோரும் பொறுப்பு என இலங்கை உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.

    பக்சே சகோதரர்கள் கையாண்ட தவறான பொருளாதாரக் கொள்கைகளால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும், இலங்கை மத்திய வங்கி முன்னாள் கவர்னர் அஜித் நிவாத் உள்பட பலரும் நெருக்கடிக்கு காரணம் என குறிப்பிட்டுள்ளது.

    • தற்போது நிலவும் வறட்சியால் பயிர் செய்வதற்கு நீர் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
    • விவசாயிகளுடன் இணைந்து போராட்டங்களில் ஈடுபட்டு வன்முறையை தூண்ட சில குழுக்கள் திட்டமிட்டனர்

    கொழும்பு:

    இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். கடந்த ஆண்டு மே மாதம் பெரிய அளவில் போராட்டம் வெடித்தது. அதிபர் மாளிகையை மக்கள் கைப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ராஜபக்சே குடும்பத்தினர் அரசாங்க பதவிகளை ராஜினாமா செய்தனர்.

    பின்னர் அதிபராக பொறுப்பேற்ற ரணில் விக்ரமசிங்கே, பொருளா தார மீட்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    இலங்கை தற்போது பொருளாதார நெருக்கடியில் இருந்து மெல்ல மீண்டு வருகிறது. இந்நிலையில் இலங்கையில் மீண்டும் மக்கள் போராட்டம் வெடிக்கும் அபாயம் உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இலங்கையின் அமைச்சரவை கூட்டத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்கே பேசும்போது, "கடந்த ஆண்டு மே மாதம் 9-ந் தேதி நடந்தது போன்ற பொது அமைதியின்மையை உருவாக்க சில குழுக்கள் முயற்சித்ததாக உளவுத்துறை அறிக்கைகள் அளித்துள்ளது" என்று தெரிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக அமைச்சர் பந்துல குணவர்தன கூறும்போது, "தற்போது நிலவும் வறட்சியால் பயிர் செய்வதற்கு நீர் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி எதிர்க்கட்சியினர் பிரச்சி னைகளை ஏற்படுத்தினர்.

    விவசாய அமைச்சர் வீட்டை சுற்றி வளைக்க முயற்சிகள் செய்யப்பட்டன. வறட்சியால் ஏற்படும் தண்ணீர் நெருக்கடியை பயன்படுத்தி வன்முறையை தூண்டும் நடவடிக்கைகளில் சிலர் இருப்பதாக புலனாய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. விவசாயிகளுடன் இணைந்து போராட்டங்களில் ஈடுபட்டு வன்முறையை தூண்ட சில குழுக்கள் திட்டமிட்டனர்" என்றனர்.

    • கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பணவீக்கம் 5.8 சதவீதமாக இருந்தது.
    • இலங்கையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பண வீக்கம் ஒற்றை இலக்கத்துக்கு வந்துள்ளது.

    கொழும்பு:

    இலங்கையில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.

    அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் பற்றாக்குறையால் மக்கள் அவதியடைந்தனர். இதனால் மக்களின் போராட்டங்களால் ராஜபக்சே குடும்பத்தினர் ஆட்சி அதிகாரத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டனர்.

    அதன்பின் அதிபராக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்கே, நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். இலங்கைக்கு இந்தியா உதவிகளை வழங்கியது.

    பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் பண வீக்கம் வரலாறு காணாத வகையில் அதிகரித்தது. கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பணவீக்கம் 5.8 சதவீதமாக இருந்தது. அதன்பின் கடந்த ஆண்டு செப்டம்பரில் 69.8 சதவீதமாக உயர்ந்தது.

    பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் பண வீக்கம் குறைய தொடங்கியது.

    இந்நிலையில் இலங்கையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பண வீக்கம் ஒற்றை இலக்கத்துக்கு வந்துள்ளது.

    கடந்த ஜூன் மாதம் 12 சதவீதமாக இருந்த பண வீக்கம், ஜூலை மாதம் 6.3 சதவீதமாக குறைந்துள்ளது.

    இது இலங்கை அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விவர அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக இலங்கை மத்திய வங்கி கூறும்போது, பண வீக்கம் மேலும் மிதமானதாகவும், நடுத்தர காலத்தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவை சுற்றி ஸ்திரமாகவும் இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளது. இதையடுத்து இலங்கை, பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • கடற்கரை அருகே இலங்கை அகதிகள் வந்திருப்பதாக அப்பகுதி மீனவர்கள் தனுஷ்கோடி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • இலங்கை அகதிகள் 4 பேரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்ட வருகிறார்கள்.

    ராமேசுவரம்:

    இலங்கையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக் கடி காரணமாக பெட்ரோல், டீசல் போன்றவற்றிற்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது. அன்னிய செலாவணி இருப்பு குறைந்ததால் வெளிநாடுகளில் இருந்த அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமல் அந்த நாட்டு அரசு திணறியது.

    இதன் காரணமாக அரிசி முதல் காய்கறி வரை அனைத்து உணவுப்பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்தது. இதனால் அங்கு வாழ்வாதாரம் இழந்தும், வாழ வழியின்றியும் இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வருவது தொடர்ந்து அதிகரித்துள்ளது.

    இதுவரை 265 பேர் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர். இவர்கள் மண்டபம், ராமேசுவரம் உள்ளிட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலை ராமேசுவரம் கோதண்டராமர் கோவில் பகுதி கடற்கரை அருகே இலங்கை அகதிகள் வந்திருப்பதாக அப்பகுதி மீனவர்கள் தனுஷ்கோடி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள் இலங்கை வவுனியா பகுதியைச் சேர்ந்த பிரதீப்குமார் (வயது 36), அவரது மனைவி மேரி (34), மகள்கள் கிருத்திகா (7), கிருஷ்மா (4) என்பது தெரிய வந்தது. அவர்கள் 4 பேரும் மன்னார்வளைகுடா பகுதியில் இருந்து ரூ.1 லட்சம் பணம் கொடுத்து இன்று அதிகாலை 1 மணிக்கு தமிழகம் வந்ததாக தெரிவித்தனர்.

    அகதிகளாக வந்தவர்கள் கூறுகையில், வறுமையின் காரணமாகவும், தொடர்ந்து அங்கு வாழ வழியில்லாமல் போனதாலும் இங்கு வந்து தஞ்சமடைந்து உள்ளோம். தமிழகத்தில் ஏதாவது பிழைப்பு தேடி குடும்பம் நடத்தலாம் என்ற நம்பிக்கையுடன் முடிவு செய்து பிளாஸ்டிக் படகில் ரூ.1 லட்சம் பணம் கொடுத்து வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    மேலும் எங்களை போன்று ஏராளமானவர்கள் தமிழகம் வரத்துடிக்கிறார்கள். ஆனால் படகுக்கு கொடுக்க பணம் கிடைக்காததால் வாழவும் முடியாமல், தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளவும் முடியாமல் தவித்து வருவதாக கண்ணீருடன் கூறினர்.

    தொடர்ந்து இலங்கை அகதிகள் 4 பேரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்ட வருகிறார்கள். கடந்த 2022 ஆண்டு முதல் இன்றைய தேதி வரை இலங்கையில் இருந்து 269 பேர் அகதிகளாக இந்தியா வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வறுமையின் காரணமாக அங்கு வாழ வழியின்றி தமிழகத்திற்கு வந்தோம்.
    • காலையில் படகு ஓட்டிகள் வந்து தனுஷ்கோடி கடலோர கரைப்பகுதியில் இறக்கி விட்டு சென்றதாகவும் கண்ணீருடன் தெரிவித்தனர்.

    ராமேசுவரம்:

    இலங்கையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக பெட்ரோல், டீசல் போன்றவற்றிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

    அன்னிய செலாவணி இருப்பு குறைந்ததால் வெளிநாடுகளில் இருந்த அத்தியவாச பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமல் அந்த நாட்டு அரசு திணறியது.

    இதன் காரணமாக அரிசி முதல் காய்கறி வரை அனைத்து உணவுப்பொருட்களின் விலையும் விண்ணை தொட்டன. இதனால் அங்கு வாழ்வாதாரம் இழந்தும், வாழ வழியின்றியும் இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வருவது அதிகரித்துள்ளது.

    இதுவரை 257 பேர் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர். இவர்கள் மண்டபம், ராமேசுவரம் உள்ளிட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலை ராமேசுவரத்தை அடுத்த தனுஷ்கோடி கடலோரப் பகுதியான அரிச்சல் முனை கடற்கரை பகுதியில் இலங்கை அகதிகள் வந்திருப்பதாக அப்பகுதி மீனவர்கள் ராமேசுவரம் கடலோர காவல் படை குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அவர்கள் அரிச்சல் முனை பகுதியில் இருந்த 8 பேரை மீட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் இலங்கை யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்த ரூபன் மனைவி மரியா (வயது 35), மகன்கள் அபிலாஷ் (16) அபினாஷ் (14),சோதனை (8), அதுபோலே யாழ்பாணம் பகுதி அனைகோட்டை குலவாடி பகுதியை சேர்ந்த கணேசமூர்த்தி மகன் விஜய் குமார் (50), இவரது மனைவி தர்சிகா (34), மகன்கள் அஸ்நாத் (15), யோவகாஷ் (11) இப்பகுதியை என தெரியவந்தது

    வறுமையின் காரணமாக அங்கு வாழ வழியின்றி தமிழகத்திற்கு வந்ததாகவும், இங்கே வந்தால் ஏதாவது பிழைப்பு தேடி குடும்பத்தை வழிநடத்தலாம் என்று முடிவு செய்து யாழ்ப்பாணம் கடலோரப் பகுதியில் இருந்து பிளாஸ்டிக் படகில் இரண்டு லட்சம் ரூபாய் பணம் கொடுத்ததாகவும், இலங்கை யாழ்ப்பாணம் கடலோரப் பகுதியில் இருந்து நேற்று மாலை புறப்பட்டதாகவும் இன்று காலையில் படகு ஓட்டிகள் வந்து தனுஷ்கோடி கடலோர கரைப்பகுதியில் இறக்கி விட்டு சென்றதாகவும் கண்ணீருடன் தெரிவித்தனர்.

    தொடர்ந்து இலங்கை அகதிகள் 8 பேரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்ட வருகிறார்கள். கடந்த 2022 ஆண்டு முதல் இன்றைய தேதி வரை இலங்கையில் இருந்து 265 பேர் அகதிகளாக இந்தியா வந்துள்ளனர். 

    • முதல் கட்டமாக 1.2 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.9,800 கோடி) வழங்கப்பட உள்ளது.
    • நடுத்தர கால பொருளாதார சவால்களை உடனடியாக சமாளிக்க உதவும்.

    பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்ததால் மக்கள் அவதி அடைந்துள்ளனர். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வர பாகிஸ்தான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இதில் சர்வதேச நாணய நிதியத்திடம் (ஐ.எம்.எப்.) கடன் வழங்கும்படி கோரிக்கை விடுத்தது. கடன் வழங்க ஐ.எம்.எப். பல்வேறு நிபந்தனைகளை விதித்ததையடுத்து பேச்சு வார்த்தை நடத்தி வந்தது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.24 ஆயிரம் கோடி) கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது.

    முதல் கட்டமாக 1.2 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.9,800 கோடி) வழங்கப்பட உள்ளது. மீதமுள்ள தொகை அடுத்த 9 மாதங்களில் வழங்கப்படும். இது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கூறும்போது, இந்த கடன் உதவி பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் முயற்சிகளில் ஒரு முக்கிய படியாகும். இது நடுத்தர கால பொருளாதார சவால்களை உடனடியாக சமாளிக்க உதவும்" என்றார்.

    • பாகிஸ்தானில் வரும் மாதங்களில் கடுமையான உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக ஐ.நா. சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
    • 22 நாடுகளில் கடுமையான உணவு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று ஐ.நா. சபை தெரிவித்து உள்ளது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அந்நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு குறைந்து வருவதால் இறக்குமதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதனால் உணவு பொருட்கள், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. மேலும் கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. பாகிஸ்தானில் அரசியல் கொந்தளிப்பும் நிலவி வருவது அந்நாட்டை மேலும் சிக்கலில் தள்ளி உள்ளது.

    இந்த நிலையில் பாகிஸ்தானில் வரும் மாதங்களில் கடுமையான உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக ஐ.நா. சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இது தொடர்பாக ஐ.நா. சபை வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பாகிஸ்தானில் 2022-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் விளைவுகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் கொந்தளிப்பு தீவிரமடைந்துள்ளதால் கடுமையான உணவு பாதுகாப்பின்மை அடுத்த மாதங்களில் உயரக் கூடும்.கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் விளைவுகளால் நிலைமை மோசமாசி உள்ளது. இது விவசாய துறையில் பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தியது. உணவு உற்பத்தி, உணவு கிடைப்பது, வாழ்வாதார சாத்தியக் கூறுகளை பாதித்தது.

    பொருளாதார நெருக்கடியால் உணவு மற்றும் பிற முக்கிய பொருட்களை குடும்பங்கள் வாங்கும் சக்தி குறைந்து இருக்கின்றன. வெளிநாட்டு கையிருப்பு பற்றாக்குறை, பணத்தின் மதிப்பு குறைந்து வருவது ஆகியவை நாட்டின் முக்கிய உணவு மற்றும் எரிசக்தி விநியோகங்களை இறக்குமதி செய்வதற்கான திறனை குறைக்கின்றன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த அறிக்கை வருகிற ஜூன் முதல் நவம்பர் மாதம் வரையிலான காலத்தை உள்ளடக்கியது. ஏற்கனவே பாகிஸ்தானில் உணவு பற்றாக்குறை ஏற்படும் என்று ஐ.நா. சபை தெரிவித்திருந்த நிலையில் மீண்டும் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

    அதே போல் ஆப்கானிஸ்தான், நைஜீரியா, சோமாலியா, தெற்கு சூடான், ஏமன், ஹைட்டி, சூடான் புர்கினா பாசோ, மாலி உள்பட 22 நாடுகளில் கடுமையான உணவு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று ஐ.நா. சபை தெரிவித்து உள்ளது.

    • உணவு, எரிபொருள், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பால் பாகிஸ்தான் சின்னாபின்னமாகி வருகிறது.
    • பண வீக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் பாகிஸ்தான் மத்திய வங்கி திணறி வருகிறது.

    லாகூர்:

    பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகிறது.

    உணவு, எரிபொருள், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பால் பாகிஸ்தான் சின்னாபின்னமாகி வருகிறது. பண வீக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் பாகிஸ்தான் மத்திய வங்கி திணறி வருகிறது.

    மேலும், கையிருப்பு டாலர்களும் குறைந்து வருவதால் பாகிஸ்தான் திவால் நிலையை எட்டிவிட்டது. அதேவேளை, பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பாகிஸ்தான் நாடியுள்ளது.

    1.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு பல்வேறு விதிகளை விதித்துள்ளது. கடனை பெற சர்வதேச நாணய நிதியம் விதித்த விதிகளை பின்பற்ற பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது.

    இந்நிலையில், பாகிஸ்தானுக்கு கடன் வழங்க சீனா முன்வந்துள்ளது. 700 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பணத்தை சீனா பாகிஸ்தானுக்கு வழங்க உள்ளது. இதற்கான ஒப்புதலை சீன அரசு வழங்கியுள்ளது.

    சீனா கடனாக வழங்கும் இந்த பணம் இந்த வாரத்திற்குள் பாகிஸ்தான் மத்திய வங்கியில் செலுத்தப்பட உள்ளது. சீனாவின் இந்த நிதியுதவி பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் பாகிஸ்தானுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • அரசு ஊழியர்களை வேலை நீக்கம் செய்து அரசுக்கான செலவை குறைக்க பிரதமர் லிஸ் டிரஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    • இங்கிலாந்தை கடனில் இருந்து மீட்க அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.

    லண்டன்:

    இங்கிலாந்தில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் புதிய பிரதமராக பதவியேற்ற லிஸ்டிரஸ், பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    இந்த நிலையில் இங்கிலாந்தில் 2 லட்சம் அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    அரசு ஊழியர்களை வேலை நீக்கம் செய்து அரசுக்கான செலவை குறைக்க பிரதமர் லிஸ் டிரஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    பிரிட்டன் பொருளாதார ஆராய்ச்சி நிறுவனமான இன்ஸ்டிடியூட் பார் பிஸ்கல் ஸ்டடீஸ் என்ற அமைப்பு, இங்கிலாந்தை கடனில் இருந்து மீட்க அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.

    இங்கிலாந்து பாராளுமன்றத்தில் விரைவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் 5 பில்லியன் பவுண்ட் சேமிப்பை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இதில் அரசுக்கான செலவுகளை குறைக்கும் ஒரு பகுதியாக அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த ஆண்டு மட்டும் சுமார் ஒரு லட்சம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் மற்ற ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இருக்காது என்றும் தெரிகிறது.

    அடுத்த ஆண்டிலும் பண வீக்கம் அதிகரித்தால் மேலும் ஒரு லட்சம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் லிஸ் டிரஸ்சின் இந்த நடவடிக்கையால் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    • நாம் கடன் வாங்கி தேயிலை இறக்குமதி செய்வதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
    • மின்சார செலவை மிச்சப்படுத்துவதற்காக இரவு 8.30 மணிக்கெல்லாம் சந்தைகளை மூட வேண்டும் என ஏற்கனவே அவர் தெரிவித்து இருந்தார்.

    இஸ்லாமாபாத்:

    அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து வருவதால் பாகிஸ்தானில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வீண் செலவுகளை குறைக்க அந்நாடு திட்டமிட்டு வருகிறது.

    குறிப்பாக இறக்குமதி மூலம் ஏற்படும் பொருளாதார இழப்பை அந்நாட்டு அரசு சரி செய்ய திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் பொருளாதார பாதிப்பில் இருந்து மீள பொதுமக்கள் டீக்குடிப்பதை குறைத்துக்கொள்ள வேண்டும் என அந்நாட்டு மந்திரி ஆஷான் இக்பால் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பாகிஸ்தான் உலகின் மிகப்பெரிய தேயிலை இறக்குமதி நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. கடந்த நிதியாண்டில் 8000 கோடி ரூபாய் இந்த தேயிலை இறக்குமதிக்காக செலவிடப்பட்டுள்ளது. இந்த தொகை நாம் கடன் வாங்கிய தொகையாகும். நாம் கடன் வாங்கி தேயிலை இறக்குமதி செய்வதை தவிர்க்க வேண்டும். இதற்கு பாகிஸ்தான் மக்கள் தினம் டீக்குடிப்பதை 1 அல்லது 2 கப் அளவில் குறைத்துகொள்ள வேண்டும்.

    இவ்வாறு இக்பால் தெரிவித்துள்ளார்.

    இக்பாலின் இந்த கருத்துக்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதேபோல் அவர், பாகிஸ்தான் வணிகர்கள் மின்சார செலவை மிச்சப்படுத்துவதற்காக இரவு 8.30 மணிக்கெல்லாம் சந்தைகளை மூட வேண்டும், அவ்வாறு செய்வது நாம் பெட்ரோல் இறக்குமதி செலவை குறைக்க உதவும் என ஏற்கெனவே கூறியிருந்தார்.

    ×