search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Domestic Violence"

    • தாய்க்காக நேரமும், பணமும் செலவிடுவது குடும்ப வன்முறை ஆகாது என மும்பை கோர்ட் கூறியுள்ளது.
    • வழக்கு தொடர்ந்த பெண்ணின் சித்ரவதையின் அடிப்படையில்தான் திருமணம் முறிந்துள்ளது என்றார் நீதிபதி.

    மும்பை:

    மகாராஷ்டிர அரசின் தலைமை செயலகத்தில் பணிபுரியும் பெண் ஒருவர், கடந்த 1993-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அவரது குடும்ப வாழ்க்கை 2014-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

    இதற்கிடையே, பெண்களைப் பாதுகாக்கும் குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் கணவர் மற்றும் அவரது உறவினர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பெண் கடந்த 2015-ம் ஆண்டு மும்பை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். ஆனால் அந்த கோர்ட்டு அவரது மனுவை நிராகரித்தது.

    இதனால் அவர் மும்பை கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அதில் அவர், எனது கணவர் கடந்த 1993-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை வெளிநாட்டில் இருந்தார். அப்போது அவர் தாயின் சிகிச்சைக்காக தொடர்ந்து பணம் அனுப்பினார். அவருடன் அதிக நேரத்தைச் செலவழித்தார். இது எனது திருமண வாழ்க்கையில் மோதலுக்கு வழிவகுத்தது என கூறியிருந்தார்.

    இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆசிஷ் அயாச்சி தீர்ப்பில் கூறியுள்ளதாவது:

    1993-ம் ஆண்டில் திருமணம் செய்துகொண்ட தம்பதியினர் 2014-ம் ஆண்டு விவாகரத்து பெற்றுள்ளனர். பெண்ணின் சித்ரவதையின் அடிப்படையில் தான் அவர்களின் திருமணம் முறிந்துள்ளது. திருமண வாழ்க்கையில் கணவர் எதிர்கொண்ட போராட்டங்கள், தற்கொலை முயற்சிகள் போன்ற ஆதாரங்கள் அதில் கொடுக்கப்பட்டுள்ளது.

    பெண்ணின் கணவர் அவரது தாய்க்கு நேரத்தையும், பணத்தையும் செலவு செய்கிறார் என்று குறை கூறுவதை குடும்ப வன்முறையாகக் கருதமுடியாது. குடும்ப வன்முறைக்கு ஆளானார் என்பதை அவர் நிரூபிக்கத் தவறிவிட்டார். பெண்ணின் கூற்றுகளுக்கு ஆதாரம் இல்லை என முடிவு செய்து இந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என தெரிவித்தார்.

    குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களை பாதுகாக்கும் வகையில் 807 தங்குமிடங்கள் மற்றும் 700-க்கும் மேற்பட்ட மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
    பெண்களுக்கு எதிராக குடும்பத்தினரால் இழைக்கப்படும் அநீதிகளை தடுப்பதற்கு கொண்டு வரப்பட்ட பெண்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் உத்தரபிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அங்கு 65,481 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    நாட்டிலேயே குறைந்த எண்ணிக்கையில் குடும்ப வன்முறை வழக்குகள் பதிவான மாநிலமாக டெல்லி விளங்குகிறது. அங்கு 65,481 வழக்குகள் பதிவாகி உள்ளன. இந்த தகவல் குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு களின் எண்ணிக்கையை மேற்கோள்காட்டி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.

    உத்தர பிரதேசத்துக்கு அடுத்தபடியாக 38,381 வழக்குகளுடன் ராஜஸ்தான் இரண்டாவது இடத்தையும், 37,876 வழக்குகளுடன் ஆந்திரப் பிரதேசம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. கேரளா (20,826), மத்தியப் பிரதேசம் (16,384), மகாராஷ்டிரா (16,168), அசாம் (12,739), கர்நாடகா (11,407), மேற்கு வங்காளம் (9,858), ஹரியானா (7,715) போன்ற மாநிலங்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

    நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் படி, குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் மொத்தம் 2 லட்சத்து 95 ஆயிரத்து 601 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை கையாள்வதற்கு 6 ஆயிரத்து 289 நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களை பாதுகாக்கும் வகையில் 807 தங்குமிடங்கள் மற்றும் 700-க்கும் மேற்பட்ட மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதுபோன்ற மையங்கள் போதுமான எண்ணிக்கையில் இருந்தாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக அடிப்படை கட்டமைப்புகள் இல்லை என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது.

    சமூகத்தின் கண்கள் என வர்ணிக்கப்படும் பெண்கள் உலகம் தோன்றிய காலம் முதலே தங்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான போராட்டத்தில்தான் வாழ்க்கையை ஓட்டி வருகின்றனர்.
    இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதையும் சமீபத்தில் ‘மீ டூ’ என்ற பெரும் புயல் ஒன்று தாக்கி ஓய்ந்திருக்கிறது. ஆண்டாண்டு காலமாக பணித்தலங்களிலும், சமூகத்திலும் தங்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமைக்கு எதிராக பெண்கள் வெகுண்டெழுந்ததன் விளைவுதான் அந்த சூறாவளியாக சுழன்றடித்தது.

    சமூகத்தில் நல்லவர் போல வேடமிட்டு திரியும் பல பெருந்தலைகளின் பொய் முகங்கள் இந்த புயலில் அடித்து செல்லப்பட்டு உண்மை முகம் வெளிப்பட்டன. ஆணாதிக்க சமூகத்துக்கு சவுக்கடி கொடுத்தது மட்டுமின்றி, மங்கையர் அனுபவித்து வரும் துயர்களுக்கு எதிரான விழிப்புணர்வையும் ஏற்படுத்தியதில் ‘மீ டூ’ இயக்கம் பாராட்டு பெற்றது.

    ஏராளமான பெண் பிரபலங்கள் பகிரங்கமாக பாலியல் புகார் கூறிய போது, உலகறிந்த மகளிருக்கே இந்த நிலை என்றால், ஊரறியா பெண்டிரின் நிலைமை எப்படியிருக்கும்? என்ற கேள்வி எழுந்தது. பெண்களுக்கு வெளியில் எங்குமே பாதுகாப்பு இல்லை என்ற எண்ணமும் தோன்றியது.

    ஆனால் வெளியிடங்களை விட பெண்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டிய வீட்டில்தான் அவர்களுக்கு அதிக பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக கண்டறியப்பட்டு உள்ளது. இதற்கு உதாரணமாக சமீபத்திய 2 நிகழ்வுகளை கூற முடியும்.

    ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த கடீரா என்ற இளம்பெண் கடந்த 13 ஆண்டுகளாக தனது சொந்த தந்தையால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு 2 குழந்தைகளுக்கு தாயாகி இருக்கிறார். இடையில் சிலமுறை கருக்கலைப்பும் செய்திருக்கும் அவர், தற்போது தந்தையின் கொடூரத்தை உலகறியச்செய்து தண்டனை பெற்றுத்தருவதற்காக கோர்ட்டுகளின் படியேறி வருகிறார்.

    அடுத்ததாக மதுரை பெத்தானியாபுரத்தை சேர்ந்த 4 வயது சிறுமியின் நிலை இன்னும் மோசமானது. இரவில் குடிபோதையில் வரும் அவளது தந்தை பெல்ட்டால் அடிப்பது, கடிப்பது, ஊசியால் குத்துவது என தனது பாலியல் வக்கிரங்களை சிறுமியிடம் காட்டியுள்ளார். மாதர் சங்கத்தினரின் தலையீட்டால் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

    மேற்படி சம்பவங்கள் அனைத்தும் ஒரு பானை சோற்றுக்கு ஒருசோறு பதம் என்பது போலத்தான். ஏனெனில் சமீபத்தில் ஐ.நா. வெளியிட்டு இருக்கும் அதிர்ச்சிகரமான ஆய்வு முடிவொன்று இதைத்தான் உறுதி செய்திருக்கிறது.



    அதாவது பெண்கள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான இடமாக அவர்களது சொந்த வீடே இருப்பதாக ஐ.நா.வின் போதைப்பொருள் மற்றும் குற்றத்தடுப்பு அமைப்பு கண்டுபிடித்து உள்ளது. அதற்கு ஆதாரமாக சில புள்ளி விவரங்களை அந்த அமைப்பு வெளியிட்டு இருக்கிறது.

    அதன்படி உலக அளவில் கடந்த ஆண்டு மட்டும் சுமார் 87 ஆயிரம் பெண்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இதில் 34 சதவீதம் பேர் தனது துணைவராலும், 24 சதவீதம் பேர் பெற்றோர் அல்லது குடும்ப உறுப்பினர்கள் போன்ற உறவுகளாலும் படுகொலை செய்யப்பட்டு இருக்கின்றனர்.

    குறிப்பாக ஒரு மணி நேரத்துக்கு 6 பெண்கள் என நாளொன்றுக்கு சராசரியாக 137 பெண்கள் குடும்ப அங்கத்தினரால் கொலை செய்யப்பட்டு உள்ளனர். இப்படி கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்படும் பெண்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் பலமடங்கு அதிகரித்து இருக்கிறது.

    இந்தியாவிலும் இத்தகைய குடும்ப வன்முறைக்கு பலியாகும் பெண்களின் எண்ணிக்கை அபரிமிதமாகவே இருக்கிறது. இங்கு 15 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் 27 சதவீதம் பேர் குடும்பத்தினரால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான ஆய்வு முடிவுகள் தெரிவித்தன.

    தேசிய குடும்ப நல ஆய்வு என்ற பெயரில் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அந்த ஆய்வு முடிவுகளின்படி, 15 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 3-ல் ஒருவர் இத்தகைய வன்முறையில் சிக்கியிருக்கிறார். இந்த வன்முறை சம்பவங்கள் நகர்ப்புறங்களை விட (23 சதவீதம்) கிராமங்களிலேயே அதிகமாக (29 சதவீதம்) இருக்கிறது.

    திருமணமான பெண்களில் 31 சதவீதத்தினர் உடல், உணர்வு மற்றும் பாலியல் ரீதியாக தங்கள் துணையால் (கணவர் மற்றும் முன்னாள் கணவர்) துயர்களை அடைகின்றனர். இதில் 27 சதவீதத்தினர் உடல் ரீதியாகவும், 13 சதவீதத்தினர் உணர்வு ரீதியாகவும் துன்பங்களை அடைவதாக அந்த ஆய்வு முடிவுகள் தெரிவித்தன. தங்கள் வாழ்க்கை துணையால் வன்முறைக்கு ஆளாகும் பெண்களில் 3-ல் ஒருவருக்கு உடல் ரீதியான காயங்கள் உண்டாகிறது.

    திருமணமாகாத பெண்களை பொறுத்தவரை தாய் அல்லது மாற்றாந்தாய் மூலம் 56 சதவீதத்தினரும், தந்தை அல்லது சித்தப்பா மூலம் 33 சதவீதம் பேரும், சகோதர-சகோதரிகள் மூலம் 27 சதவீதம் பேரும் துயர்களை சந்திக்கின்றனர். மேலும் உறவினர் (27 சதவீதம்), முன்னாள் அல்லது இந்நாள் ஆண் நண்பர் (18 சதவீதம்), நண்பர் அல்லது அறிமுகமானவர் (17 சதவீதம்) மற்றும் குடும்ப நண்பர் (11 சதவீதம்) போன்றவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர்.

    இப்படி வீட்டில் அரங்கேறும் வன்முறையை சந்திக்கும் இந்திய பெண்களின் துயரப்பட்டியல் நீளுகிறது. இந்தியாவை பொறுத்தவரை வரதட்சணை பிரச்சினை, ஆணவக்கொலை, குழந்தை திருமணம், பாலியல் அத்துமீறல் போன்ற குற்றங்களால் வீட்டுக்குள்ளே பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது. கல்வியறிவு இல்லாத பாமரர்கள் முதல் கற்றறிந்த அறிஞர்கள் வரை பெண்களை இரண்டாம் தர மக்களாகத்தான் பார்க்கின்றனர். வீட்டுக்குள் அடைபட்டு கிடந்த பெண்கள் வெளியே வந்து வியத்தகு சாதனைகள் பல புரிந்த போதும், அவர்களுக்கு எதிரான குற்ற செயல்கள் இன்னும் குறைந்தபாடில்லை.

    சமூகத்தின் கண்கள் என வர்ணிக்கப்படும் அவர்கள் உலகம் தோன்றிய காலம் முதலே தங்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான போராட்டத்தில்தான் வாழ்க்கையை ஓட்டி வருகின்றனர். நாகரிகமும், கலாசாரமும் எவ்வளவுதான் உலகை நவீனத்துவத்தை நோக்கி நகர்த்தினாலும் பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் என்னவோ மனிதகுலம், இன்னும் பின்தங்கி இருப்பதாகவே கூற முடியும். இதில் வீட்டு அங்கத்தினர்களாலும் அவர்களது பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவது வேதனை அளிப்பதாகவே இருக்கிறது.

    அன்பு, அரவணைப்பு, பாதுகாப்பு, மன்னிப்பு, நட்பு போன்ற பண்பு நலன்களால் உருவாக்கப்பட்டது தான் வீடு. அதை விடுத்து வெறும் நான்கு சுவர்களால் மட்டும் கட்டப்பட்ட ஒரு மாளிகையை வீடு என்று கூற முடியாது. அது வெறும் உயிரற்ற கட்டிடமாகவே இருக்க முடியும்.

    - வினி ஜெசிகா, விரிகோடு.
    குழந்தைகளுக்கு அவர்கள் நான்கு வயதாக இருக்கும் போதே பாலியல் வன்முறைகளின் சில கூறுகளை அவர்களுக்கு விளக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
    பெண்குழந்தையைப் பெறுவதே மடியில் நெருப்பைக் கட்டிக் கொண்டு நடப்பதற்கு சமம் என பாட்டிமார் கூறும் கூற்று இன்றைய நேயமற்ற சமூகத்தில் நிதர்சனமாகியிருக்கிறது.

    உலகெங்கும் பல்லாயிரம் குழந்தைகள் பாலியல் வன்முறையினால் உயிரையும் இழக்கின்றனர் என்பது அதிர்ச்சியளிக்கும் செய்தியாகும். பெரும்பாலான பாலியல் வன்முறைகள் பெரும்பாலும் வீட்டின் நான்கு சுவர்களுக்குள்ளேயே மறைக்கப்பட்டு விடுகின்றன. “வெளியே சொன்னால் நம் குழந்தைக்குத் தான் அவமானம்” எனும் கவலையும், பாலியல் வன்முறையில் ஈடுபட்டவர் குடும்பத்தின் நெருங்கிய நபர் எனும் நிர்பந்தமும் இத்தகைய பாலியல் வன்முறைகள் சட்டத்தின் முன் வராமல் செய்து விடுகின்றன.

    குழந்தைகளுக்கு அவர்கள் நான்கு வயதாக இருக்கும் போதே பாலியல் வன்முறைகளின் சில கூறுகளை அவர்களுக்கு விளக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள். மிக முக்கியமாக எது “நல்ல தொடுதல்”, எது “மோசமான தொடுதல்” எது “பாலியல் தொடுதல்” என்பதை குழந்தைகளுக்கு புரிய வைப்பது அன்னையின் கடமையாகும்.

    நல்ல தொடுதல் அன்னையின் அரவணைப்பைப் போல ஆனந்தமாய், பாதுகாப்பாய், உற்காசமூட்டுவதாய் இருக்கும். இவை இன்னும் மிச்சமிருக்கும் மனித நேயத்தின் வெளிப்பாடுகள். மோசமான தொடுதல் என்பதை அடித்தல், உதைத்தல், காயப்படுத்துதல் போன்ற வலி ஏற்படுத்தும் நிகழ்வுகளாகச் சொல்லிக் கொடுங்கள்.

    தினமும் குழந்தைகளிடம் அன்றைய தினம் நடந்த செயல்கள், சந்தித்த மனிதர்கள் போன்ற அனைத்தையும் விரிவாக கேட்டு அறியுங்கள். ஏதேனும் பிழை நடந்திருப்பதாக உணர்ந்தால் பதட்டப்படாதீர்கள். முழுமையாய் கேளுங்கள்.

    குழந்தை எதைச் சொன்னாலும் முழுமையாய் நம்புங்கள். பாலியல் தொந்தரவுகளை குழந்தைகள் ஒரு போதும் உருவாக்கிச் சொல்வதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஏதேனும் “விளையாட்டு” எனும் பெயரில் குழந்தைகள் பெரும்பாலும் ஏமாற்றப்பட்டு பாலியல் தொந்தரவுக்கு ஆளாவதுண்டு என்பதை அன்னையர் கவனத்தில் கொள்ள வேண்டியது மிக அவசியம்.

    தாய்க்கும் குழந்தைக்கும் இடையேயான வெளிப்படையான, நட்புறவும் நம்பிக்கையும் கூடிய உரையாடல் மிக மிக முக்கியம். இல்லையேல் குழந்தைகள் தங்கள் பிரச்சனைகளை வெளிப்படுத்தாமலேயே போய்விடும் அபாயம் உண்டு.

    சில சூழல் அல்லது சில நபர்களுடைய அருகாமை சந்தேகத்தைத் தருவதாக இருந்தால் அந்த சூழலைத் தவிருங்கள். குறிப்பாக குழந்தை யாருடனாவது நெருங்குவதை விரும்பவில்லையெனில் சுதாரித்துக் கொள்ளுங்கள். அங்கே ஏதேனும் பிழை இருக்கலாம். உங்கள் குழந்தைகளை மூன்றாவது நபரிடம், நீங்கள் கூடவே இல்லாதபோது, ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கும் அதிகமாக செலவிட அனுமதிக்காதீர்கள்.



    உங்கள் குழந்தையின் உடல் குழந்தைக்கு மட்டுமே சொந்தமானது. அதை வேறு யாரும் தொடும் உரிமை இல்லை என்பதை வெகு தெளிவாக, அழுத்தமாகவே குழந்தைகளிடம் சொல்லுங்கள். அதை மீறி யாரேனும் தொந்தரவு கொடுத்தால் கண்டிப்பான “நோ” சொல்ல குழந்தைகளைப் பழக்குங்கள்.

    குழந்தைகளுடைய நடவடிக்கையில் பதட்டம், கோபம், மன அழுத்தம், சோகம் போன்ற உணர்வுகள் மேலோங்கியிருப்பதைக் கண்டாலோ, உடலில் ஏதேனும் அடையாளங்களைக் கண்டாலோ உஷாராகிவிடுங்கள். குழந்தைகளிடம் ஏதேனும் விரும்பத் தகாத நிகழ்வு நடந்தால் யாரைச் சந்திக்க வேண்டும், யாரிடம் பேசவேண்டும் என்பதைச் சொல்லி வையுங்கள்.

    குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கையை வளருங்கள். வீட்டில் பெற்றோர் முன்மாதிரிகையாக இருப்பதும், குழந்தைகளிடம் நேரத்தைச் செலவிட்டு அவர்களுக்கு பாதுகாப்பு உணர்வை வழங்குவதும் மிக மிக முக்கியம்.

    குழந்தைகள் தவறு செய்தால் பக்குவமாய் திருத்துங்கள். பிழை செய்வது மனித இயல்பு, அதைத் திருத்துவதில் தான் மனித மாண்பு இருக்கிறது என்பதை உணர்த்துங்கள். இல்லையேல் பிழைகளை உங்களிடமிருந்து மறைக்கும் வழியையே குழந்தைகள் யோசிக்கும்.

    திரையரங்கு, பேருந்து, பள்ளிக்கூடம், விளையாட்டுப் பூங்கா போன்ற இடங்களில் கவனமாக இருக்கவேண்டிய வழிமுறைகளை விளக்குங்கள். எதையும் பயமுறுத்தும் விதமாகச் சொல்லாமல் இருப்பது மிகவும் முக்கியம்.

    “அம்மா, அப்பாவிடம் சொல்லாதே” என யாராவது ஏதாவது சொன்னார்களா, செய்தார்களா என்பதை குழந்தைகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். பாலியல் விஷயத்தில் வாக்குறுதிகளை உடைப்பதில் எந்தத் தவறும் இல்லை என்பதை குழந்தைகளுக்கு புரியவையுங்கள்.

    குழந்தைகளிடம் திடீர் பாசம் பொழியும் உறவினர்கள் யாராவது இருந்தால் அவர்கள் மீது ஒரு கண் வைப்பது அவசியம். குழந்தைகளை கடைக்கு அழைத்துப் போகிறேன், திரையரங்கு அழைத்துச் செல்கிறேன் என முன்வந்தால் நாகரீகமாக தவிர்த்து விடுங்கள்.

    ஆபாசப் புத்தகங்கள், படங்கள் போன்றவற்றை குழந்தைகளுக்கு காண்பித்து அவர்களை பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்குவதும், பின்பு அதை வைத்தே அவர்களை மிரட்டி, பயமுறுத்தி தொடர் தொந்தரவுகளை கொடுப்பதும் பரவலாக நிகழும் செயல் என்பதால் எச்சரிக்கையுடன் கவனித்தல் அவசியம்.

    90 விழுக்காடு பாலியல் தொந்தரவுகளும் குழந்தைகளுக்கு நன்கு தெரிந்த நபர்களாலேயே வருகின்றன. எனவே குழந்தைகள் உண்மையை விரைவில் பெற்றோரிடம் தெரிவிப்பது மிகவும் அவசியம். தாயும், மகளுமான மிகவும் தனிமையான சூழலில் நிகழும் உரையாடலே உண்மையை முழுமையாய் வெளிக்கொணரும்.

    தமிழ்நாட்டில் மட்டும் கடத்தப்படும் பெண்களில் 53.22 சதவீதம் பேர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்று காவல்துறை புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
    ஆள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடத்தப்படுபவர்களில் 80 சதவீதம் பேர் பெண்கள் என்கிறது, ஒரு புள்ளிவிவரம்.

    தமிழ்நாட்டில் மட்டும் இப்படி கடத்தப்படும் பெண்களில் 53.22 சதவீதம் பேர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்று காவல்துறை புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. பெண்ணை கடத்திச் செல்பவர்கள் ஒரு இருட்டறையினுள் 10 முதல் 15 நாட்கள் வரை அடைத்துவைத்து அடித்து காயப்படுத்துகிறார்கள்.

    கடுமையாக தாக்கப்பட்டு, பலவீனமாகி, தன்னம்பிக்கை இழந்த பின், கட்டாயப்படுத்தி போதைப்பொருளை உடலினுள் செலுத்துகிறார்கள். அதன் பிறகு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குகிறார்கள். தப்பிக்க வழி இல்லாமல் மாட்டிக்கொண்ட அந்தப் பெண்ணை விற்றுவிடுகிறார்கள்.

    உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில், தமிழகத்தில் மட்டும் ஆண்டொன்றுக்கு ஆயிரக்கணக்கான பெண்கள் இவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்று தெரியவந்துள்ளது. தமிழகத்தில், தற்போது இதுபோன்ற வழக்குகளின் எண்ணிக்கை குறைந்திருப்பதாகக் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். ஆனால் வழக்குகளின் எண்ணிக்கை குறைந்திருப்பதை வைத்து கடத்தல் குறைந்திருப்பதாகச் சொல்லிவிட முடியாது.



    பல சம்பவங்கள் வெளிவராததற்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் என்பது ஒப்புக்கொள்ள வேண்டிய கசப்பான உண்மை. கடத்தப்படும் பெரும்பான்மையான பெண்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் இருப்பவர்களே.

    கடத்தப்பட்ட பெண்கள் காப்பாற்றப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டாலும், குறைந்தது 3 மாத காலம் வரை மனநல ஆலோசகரின் உதவி கட்டாயம் தேவை. ஒருமுறை பாதுகாப்பின்மையை உணர்ந்துவிட்ட அந்தப் பெண்ணுக்கு, அதில் இருந்து மீண்டு வர நீண்ட காலம் தேவைப்படும்.

    கடத்தப்பட்டதை நினைவுபடுத்தும் ஒரு வார்த்தை, ஏதேனும் ஒரு அடையாளம்கூட மீண்டும் பாதுகாப்பின்மையை உணரவைக்கும்.

    காப்பாற்றப்பட்டவர்களுக்கு அன்பும் அரவணைப்பும் அவசியம் தேவை. இதை அந்த பெண்ணின் பெற்றோரும், உறவினர்களும் புரிந்துகொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டவர்களையே குற்றம்சுமத்தும் போக்கு நம் சமூகத்தில் நிலவுகிறது. அது மாற வேண்டும்.
    தற்போது சிறுமிகளும், டீன்ஏஜ் பெண்களும் பாலியல் தொடர்புடைய சிக்கல்களில் எளிதாக மாட்டிக்கொள்கிறார்கள். செல்போன், இன்டர்நெட் போன்றவை அதற்கு காரணமாக இருக்கின்றன.
    பெற்றோரின் முக்கியமான கடமைகள் எவை? என்று கேட்டால், உடனே பல பெற்றோர்கள் ‘குடும்பத்துக்கு தேவையான பணத்தை சம்பாதிப்பது, குடும்பத்தை சரியான முறையில் நிர்வகிப்பது, குழந்தைகளை நன்றாக படிக்கவைப்பது..’ என்று சொல்வார்கள். இவை எல்லாம் கடமைகள்தான். அவைகளைவிட முக்கிய கடமைகளில் ஒன்று, காலத்துக்கு ஏற்ற விஷயங்களை கவனமாக பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுத்து அவர்களது மனதில் பதியவைப்பது!

    தற்போது சிறுமிகளும், டீன்ஏஜ் பெண்களும் பாலியல் தொடர்புடைய சிக்கல்களில் எளிதாக மாட்டிக்கொள்கிறார்கள். செல்போன், இன்டர்நெட் போன்றவை அதற்கு காரணமாக இருக்கின்றன. பெற்றோர் கவனமாக இருந்து, பிள்ளைகளுக்கு விழிப்புணர்வு ஊட்டும் கடமையை செய்தால் அவர்கள் அது தொடர்புடைய சிக்கல்களில் மாட்டிக்கொள்வதை தவிர்க்கலாம்.

    இதை சிறுமிகளுக்கும், டீன்ஏஜ் பெண்களுக்கும் சொல்லிக்கொடுப்பது எளிது. பாலியல்ரீதியாக பெண்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் இப்போது அடிக்கடி நடக்கின்றன. அப்படி ஒரு சம்பவம் நடக்கும்போது அந்த சம்பவம் எப்படி நடந்தது, ஏன் நடந்தது என்று அம்மாக்கள் மகள்களுக்கு சொல்லிக்கொடுக்கவேண்டும். அப்படி ஒரு சம்பவம் நடந்தால் எப்படி அதில் இருந்து தப்பிக்கவேண்டும் என்றும் வழிகாட்டவேண்டும். இதை பற்றி பேசும்போது குடும்பத்தில் உள்ள அனைவருமே அதில் கலந்துகொள்ளவேண்டும். தங்கள் கருத்துக்களையும் பக்குவமாக எடுத்துரைக்கவேண்டும்.

    பெண்கள் இப்போது எல்லா இடங்களுக்கும் தனியாக செல்லவேண்டியதிருக்கிறது. அங்கே அவர்கள் அறிமுகமற்ற நபர்களை சந்திக்கவேண்டிய சூழ்நிலை உருவாகிறது. அறிமுகமற்ற ஆண்களோடு பேசும்போது எப்படி எல்லாம் முன்னெச்சரிக்கையாக நடந்துகொள்ளவேண்டும் என்பதை மகள்களுக்கு கற்றுக்கொடுங்கள். அப்படிப்பட்டவர்களிடம் தங்களை பற்றிய தனிப்பட்ட தகவல்களை எந்த அளவுக்கு பகிர்ந்துகொள்ளலாம். செல்போன் எண்ணை கொடுக்கலாமா? கூடாதா? என்பதையும் அவர்களுக்கு சொல்லித்தரவேண்டும்.

    செல்போன், இன்டர்நெட் போன்றவை மூலம்தான் சிக்கலுக்குரிய பந்தங்கள் உருவாகின்றன. அதனால் மகள் எதற்காக செல்போன், இன்டர்நெட் போன்றவைகளை பயன்படுத்துகிறாள் என்பதை பெற்றோர் கண்காணிக்கவேண்டும். அதற்காக அம்மா, மகளிடம் தோண்டித்துருவி துப்பறிய வேண்டியதில்லை. அவளது நண்பர்கள் யார், அவர்களது நடவடிக்கைகள் எப்படி இருக்கின்றன என்பதை எல்லாம் அம்மா அறிந்திருக்கவேண்டும். எப்போதும் அவர்கள் நட்பில் ஒரு கண்வைத்திருப்பது நல்லது.

    பள்ளி இறுதிக்காலத்திலே இப்போது காதல் பூத்துவிடுகிறது. அது ஹார்மோன் செய்யும் விந்தையால் ஏற்படு்ம் இனக்கவர்ச்சிதான். நட்பின் புனிதத்தை எடுத்துக்கூறி, எல்லோரிடமும் ஒரே மாதிரி நட்பு பாராட்ட கற்றுக்கொடுங்கள். நட்பில் ஆண், பெண் என்ற பேதம் இல்லை. எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை இருப்பதை உணர்த்துங்கள். நட்பு எல்லைதாண்டி காதலாகிவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

    ஒருவேளை காதல் தொடர்பு ஏதாவது இருப்பதாக அறிந்தால், நிலைகுலைந்து போகாதீர்கள். மகளை அடக்குதல், அடித்தல், முடக்கிப்போடுதல் போன்றவை எதிர்விளைவுகளையும், பழிவாங்கும் உணர்வுகளையும் தோற்றுவித்துவிடும். அதனால் காதலின் நிஜங்களை புரியவைத்து மனதளவில் மாற்றத்தை உருவாக்கவேண்டும். சரியான பருவத்தில் ஏற்படும், சரியான காதலுக்கு தான் ஒருபோதும் எதிரியல்ல என்பதை புரியவைத்து, பிரச்சினையை சுமுகமாக தீர்க்க முன்வரவேண்டும்.



    இப்போது டீன்ஏஜ் பெண்கள் உடை உடுத்தும் விஷயத்தில் அதிக சுதந்திரத்தை எதிர்பார்க்கிறார்கள். அவர்களிடம் மாடர்ன் டிரஸ் அணியும் ஆர்வம் அதிகரிக்கும். ஆனால் அது அவள் உடலுக்கு பொருத்தமாக இருக்கிறதா என்பதைப் பார்த்து சரியான முறையில் அணியச் செய்யவேண்டும். உடல் உறுப்புகளை பாதுகாப்பதில் உடையின் பங்கு என்ன என்பதை மகள்களுக்கு புரியவைக்கவேண்டும்.

    உங்கள் மகள் எப்போதும் உங்களுக்கு மகளாகத்தான் தெரிவாள். நீங்கள் அவளை எப்போதும் ஒரே மாதிரிதான் பார்ப்பீர்கள். ஆனால் வயதுக்கு தக்கபடி அவள் உடலில் மாற்றங்கள் உருவாகிக்கொண்டே இருக்கும். அவள் உடல் வளர்ந்துகொண்டே இருக்கும். அப்போது சமூகத்தின் பார்வை மாறிக்கொண்டே இருக்கும். அந்த பார்வையின் அர்த்தங்களை அவளுக்கு புரியவைத்து, அவளை எப்போதும் ஜாக்கிரதையாக இருக்கும்படி கூறுங்கள்.

    உங்கள் மகளுக்கு எல்லா நேரமும் தைரியத்தையும், சமயோசிதத்தையும் ஊட்டிக்கொண்டே இருங்கள். ‘முடியாது’, ‘கூடாது’ ‘அதெல்லாம் நடக்காது’ என்று சொல்லும் தைரியம் எந்த பெண் களிடம் எல்லாம் இருக்கிறதோ அவர்கள் எதிரிகளின் எந்த வலையிலும் எளிதாக சிக்குவதில்லை. ‘முடியாது’ என்று சொல்ல தைரியம் இல்லாத பெண்களே பெரும்பாலும் பிரச்சினைகளில் சிக்குகிறார்கள்.

    ஆண் ஒருவர் அனாவசியமாக பெண்ணின் உடலைத் தொடுதல், உடலை வர்ணித்தல், அனாவசிய அழைப்பு விடுத்தல் போன்ற எதிலாவது ஈடுபட்டால் அந்த நிமிடத்திலே விழிப்படைந்து கோபத்தையும், ஆக்ரோஷத்தையும் காட்டத் தெரியவேண்டும். ‘இந்த மாதிரி வேலைகளை எல்லாம் என்னிடம் வைத்துக்கொள்ளாதே’ என்று தைரியமாக சொல்லவேண்டும். அவ்வாறு தைரியமாக சொன்னால், ‘இந்தப் பெண்ணிடம் தன் எதிர்பார்ப்பு எதுவும் நடக்காது’ என்று அவன் ஒதுங்கி விடுவான்.

    டீன்ஏஜில் ஒரு பெண் செக்ஸ் பற்றி எதை எல்லாம் தெரிந்துகொள்ள வேண்டுமோ அதை எல்லாம் அவள் தன் தாய் மூலம் தெரிந்துகொள்வது நல்லது. தவறான புத்தகங்கள், தோழிகள், படங்கள் மூலம் அவள் தெரிந்துகொள்ள விரும்புவது நல்லதாக இருக்காது. அதனால் பாலியல் விஷயங்கள் பற்றி உங்கள் மகளிடம் பேசுங்கள். எல்லாவற்றையும் நாசுக்காக அவளுக்கு உணர்த்துங்கள். நீங்கள் உழைத்துக் களைத்து உங்கள் மகள்களுக்கு பொன், பொருள் சேர்த்து வைப்பது முக்கியமல்ல. அவர்கள் வாழ சரியான முறையில் வழிகாட்ட வேண்டியதே மிக அவசியம். 
    நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிகரித்து வருகின்றனவே தவிர குறைந்தபாடில்லை. பெண்கள், குழந்தைகள் விழிப்புணர்வோடு தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முயலவேண்டும்.
    பெண்களுக்கு கல்வி வேண்டும், கல்வியைப் பேணுதற்கே, நாட்டினைப் பேணுதற்கே என்று பாரதிதாசனார் பாடியதை மறக்கலாமா? நாட்டினைப் பேணுதற்குப் பெண்களைப் போற்றி வளர்க்க வேண்டாமா?

    ‘பெண்ணிற் பெருந்தக்க யாவுள’ என்று கேட்டு, ‘பெண்ணின் பெருந்தக்கது இல்’ என்ற பதிலையும் கூறியுள்ள திருவள்ளுவரின் பெண்ணியச் சிந்தனைகளை நினைத்துப் பார்க்க வேண்டும்.

    பெண்கள் நாட்டின் கண்கள் அல்லவா! பெண்களை சீரழித்து வாழ்வது ஒரு வாழ்வாகுமா? கணவனே ஆனாலும் மனைவியின் விருப்பம் இல்லாமல் உடல் உறவு கொள்ளக் கூடாது என்ற சட்டம் இருப்பதை உணர வேண்டாமா? தாலி கட்டி, தன்னைப் பாதுகாத்து வாழ்கின்ற கணவன் என்ற உறவுக்கே இந்த நிலை என்கின்றபோது பேர், ஊர் தெரியாத மூன்றாம் நிலையில் உள்ளவர்கள் எந்த சட்டத்தின் கீழ் பெண்களை, அதுவும் சிறுமிகளைப் பாழ்படுத்துகிறார்கள் என்பதை நினைக்கையில் மனம் வேதனைப்படுகிறது.

    நாளுக்கு நாள் பாலியல் கொடுமைகள் அதிகரித்து வருகின்றனவே தவிர குறைந்தபாடில்லை. மகாத்மா காந்தியடிகளும், திருவள்ளுவரும், உதித்த நாட்டிலா இப்படி! மகாத்மா காந்தியடிகள் கண்ட பெண்களின் பொற்காலக் கனவு என்னாயிற்று? என்றுதான் அவர்கனவு நிறைவேறும்.

    ஏன் இந்த அவலங்கள், அத்துமீறல்கள். இத்தகைய கொடியவர்களை, விலங்கினும் கீழான மனிதர்களாகத்தான் கருத நேரிடுகிறது. இந்த கொடியவர்களை சட்டம் போட்டு மட்டும் திருத்த முடியுமா? என்றால் முடியாது. ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது. அதை சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்குது’ என்ற பாடல் அடிகளுக்கேற்ப இன்றுவரையில் நாடு அப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது.

    பணம், பொன், பொருட்களை மட்டுமா கொள்ளை அடிக்கின்றார்கள். பெண்களையும் பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள். கற்பைச் சூரையாடுகிறார்கள். ஒரு தலைக்காதலால் சோனாலி, தன்யா, நவீனா, சுவாதி, பிரான்சினா இப்படி எத்தனை பெண்கள் படுகொலைக்கு ஆளாகியுள்ளனர். பெருந்திணைக் காதல், ஒருதலைக் காதல் துன்பத்தைத் தரும். இருமனம் ஒன்று சேர்ந்த அன்புடைக் காதலே (இருதலைக் காதல்) இன்பத்தைத் தரும் என்கின்ற அடிப்படை உணர்வைக் கூட உணராது இருக்கின்றார்கள்.

    ‘மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்

    செவ்வி தலைப்படு வார்’ என்னும் திருவள்ளுவரின் கூற்றை பெண்களிடம் வன்முறையில் ஈடுபடுவோர் உணர்ந்து பார்க்கவேண்டும். உணர்ந்தால்தான் மென் முறையை ஏற்று வன்முறையை விட்டொழிப்பார்கள். அப்போதுதான் பெண்ணுலகம் உய்யும்.



    தஷ்வந்த் என்பவர் 6 வயது சிறுமியை கற்பழித்ததோடு மட்டுமல்லாமல், கொன்று எரித்த செய்தியையும் அறிந்தபோது மனம் கொதித்துப் போய் விட்டது. அந்த சிறுமியை ஈன்ற பெற்றோரின் மனம் என்ன பாடுபட்டிருக்கும்? பெற்ற அன்னை தவறை தட்டிக் கேட்டதால் ஈன்ற அன்னையையும் கொன்றுள்ளார். 24 வயதில் எப்படி இப்படியொரு அரக்கத்தனம் அவருக்கு வந்தது என்ற காரணத்தை யோசித்துப் பார்க்க வேண்டியுள்ளது.

    இந்த வாலிபர் இப்படி என்றால் பதினோரு வயது சிறுமியை லிப்டை இயக்கும் ஊழியர் ஒருவர் கற்பழித்ததோடு மட்டுமல்லாமல் மேலும் பலரை அழைத்து கற்பழிக்க வழிவகை செய்துள்ளார். நெஞ்சென்ன நெஞ்சோ? களங்கம் செய்பவர்க்கு உள்ளமில்லையோ என்று குமுற வேண்டியுள்ளது. இப்படி தொடரும் செய்திகள் பெண்களுக்கு அடிமேல் அடி விழுவதாக உள்ளது.

    இந்தச் செய்திகள் பெண்களுக்குத் தங்களை பாதுகாத்துக் கொள்ள உதவும் எச்சரிக்கை மணியாகவும் உள்ளதை நினைத்துப் பார்க்க முடிகிறது. சிறையில் அடைத்து சட்டத்தின் மூலம் அவர்களுக்குரிய தண்டனை அளித்து, திருத்த முயன்றால் மட்டும் போதாது? நல்ல வழிகாட்டுதல்கள் வேண்டும், நல்லறிவு புகட்ட வேண்டும். திருவள்ளுவர் காட்டு நன்னெறிகளை கற்பிக்க வேண்டும்.

    புத்தர்பிரான் இயம்பியது போல் ஆசையே துன்பத்திற்குக் காரணம் ஆகும். மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை இவைகள் அளவோடு இருக்க வேண்டும். ஆண்கள் மனைவியைத் தவிர மற்ற பெண்களைத் தாயாகவும், சகோதரியாகவும் மனதில் வைக்க வேண்டும். இந்த அடிப்படை உணர்வு உள்ளத்தில் நிரம்பினாலே, கொலைகள், கற்பழிப்பு போன்ற கொடூரங்கள் மறையும் ஆண்களுக்குச் சமமாக பெண்கள் பணியாற்றுகிறார்கள் ஒருவிதத்தில் மகிழ்ச்சிதான். ஆனால் காதலில் சமத்துவம் இல்லையே.

    எதனைச் செய்தல் வேண்டும், எதனைச் செய்தல் கூடாது என்று திருவள்ளுவர் பாடியுள்ள பாடல்களை குறட்பாக்களை ஆசிரியர்களும், பெற்றோரும் குழந்தைகளுக்கு எடுத்துக்கூறி விளக்கி தன்னம்பிக்கையை ஊட்ட வேண்டும். பொறாமை, பேராசை, சீற்றம், துன்பம் தரும் பேச்சு, செயல் இவற்றைத் தவிர்த்து வாழ்வதே சிறந்த அறமாகும். வாழ்வியலில் அறம் செழிக்க மனதை தூய்மையுடன் வைத்துக் கொண்டாலே போதும். அதுவே நிறைவான அறமாகும்.

    திரைப்படங்கள், செல்போன்கள், வாலிபர்களைச் சீரழிக்கும் வகையில் ஆபாச காட்சிகள் வெளியிடப்படுவதை நிறுத்தினால் நலம் பயக்கும். சண்டைக் காட்சிகள், கொலை, களவு, கற்பழித்தல், புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற காட்சிகளைத் தவிர்க்க முற்படலாம். பெண்கள், குழந்தைகள் முதற்கொண்டு விழிப்புணர்வோடு தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முயலவேண்டும்.

    திருக்குறளை பள்ளிகளில் அவசியம் பயிற்றுவித்தால், தனிமனித ஒழுக்கம் வளரும். தூய்மையான மனதை உருவாக்கலாம். சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல் மாணவர்களை மாற்றம் பெறச் செய்யலாம். மனத்தூய்மை பெற்றால் அவரவர்கள் மனசாட்சியே சிறந்த நீதிபதிகளாக மாறும் என்பதில் ஐயமில்லை. பெண்கள் பின்னால் செல்வதை விட்டு விட்டு, புதிய இந்தியாவை உருவாக்க மாணவர்கள் முன்வர வேண்டும்.

    இது கூகுள் உலகம் என்பதால், எப்பொழுதும் விழிப்புணர்ச்சியோடு இருத்தல் அவசியமாகும்.

    எழுத்தாளர் முனைவர் திருக்குறள் கோ.ப.செல்லம்மாள்
    ×