search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dairy farm"

    நெல்லை மாவட்டத்தில் பால் பண்ணை அமைக்க தமிழக அரசு ஆணை வழங்கியுள்ளது என்று கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்துள்ளார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக‌ அரசு பால்பண்ணை தொழிலை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் சிறிய அளவிலான 100 பால் பண்ணைகள் ரூ.1.25 கோடி செலவில் தொடங்க ஆணை வழங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நெல்லை மாவட்டத்திற்கு 3 சிறிய அளவிலான பால்பண்ணைகள் அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்தின்படி மொத்த திட்ட செலவினமாக ரூ.5 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் பயனாளியின் பங்குதொகை 75 சதவிகிதம். அதாவது ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் மற்றும் மாநில அரசின் பங்குதொகை ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் ஆகும். பால் பண்ணை தொழிலில் விருப்பமுள்ளவர்கள் இத்திட்டத்தின்கீழ் பயன்பெறலாம்.

    பயனாளிகள் மாட்டுக்கொட்டகை கட்டுவதற்கு குறைந்த பட்சம் 300 சதுர அடி நிலம் சொந்தமாகவோ அல்லது குத்தகை அடிப்படையிலோ வைத்திருக்க வேண்டும். பயனாளிகள் தீவனப்புல் வளர்ப்பதற்கு குறைந்தபட்சம் 1 ஏக்கர் நீர்ப்பாசன வசதி கொண்ட நிலம் சொந்தமாகவோ அல்லது குத்தகை அடிப்படையிலோ வைத்திருக்க வேண்டும். பயனாளி ஏற்கனவே கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் எந்த திட்டத்திலும் பயனடைந்தவராக இருத்தல் கூடாது.

    தற்சமயம் பயனாளிகள் சொந்தமாக பசு, எருமை மாடுகள் வைத்திருக்க கூடாது. பயனாளிகளோ அல்லது உறவினர்களோ (கணவர், தந்தை, தாய், மாமனார், மாமியார், மகன், மகள், மருமகன், மருமகள் ஆகியோர்) மத்திய மற்றும் மாநில அரசிலோ அல்லது மத்திய , மாநில அரசு சார்ந்த நிறுவனங்கள், கூட்டுறவு மையங்களிலோ பயனாளிகளாக இருக்க கூடாது அல்லது உள்ளூர் அமைப்புகளில் உறுப்பினராக இருக்க கூடாது. பயனாளி கிராம பஞ்சாயத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருத்தல் வேண்டும். பயனாளிகள் ஆதிதிராவிடர், பழங்குடி இனத்தை சார்ந்தவராக இருத்தல் வேண்டும். மாவட்ட கலெக்ட‌ரால் தேர்வு செய்யப்படும் பயனாளிகள் பட்டியலே இறுதியானது ஆகும். தேர்வு செய்யப்படும் பயனாளிகள் குறைந்தபட்சம் இரண்டு வருடங்கள் கால்நடைகளை பராமரிக்க வேண்டும். இல்லையெனில் சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பயிற்சி மையங்களில் 2 நாட்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படும். விண்ணப்ப தாரர்கள் சம்பந்தப்பட்ட கால் நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரிடம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×