search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cryptocurrency"

    • 18 வயது முதல் 25 வயது வரையிலானோர் 35 சதவீதம்
    • 18 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்திருப்பதாக ஆய்வில் தகவல்

    கொரோனா காலத்தில் மக்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டடு மக்கள் டிஜிட்டல் பணபரிமாற்றத்திற்கு சென்றார்கள். பொருளாதார சிக்கலில் சில நாடுகள் சிக்கித் தவித்ததாலும் கிரிப்டோகரன்சியின் பரிமாற்றம் விஸ்பரூபம் அடைந்தது. இதனால் பிட்காய்ன் மதிப்பு பல மடங்கு உயர்ந்தது.

    இனிமேல் கிரப்டோகரன்சிதான் என்று கூறப்பட்டது. சில நாடுகள் கிரிப்டோகரன்சியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால், பொருளாதாரம் சீரடைந்து வரும் நிலையில் கிரிப்டோகரன்சி குறித்த செய்திகள் வெளிவருவது குறைந்துவிட்டது.

    பாகிஸ்தானில் அரசியல் நிலையற்றத் தன்மை காரணமாக பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. உலகளவில் பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு வெகுவாக குறைந்த வண்ணம் உள்ளது. இதனால் பாகிஸ்தானியர்களின் பெரும்பாலானோர் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர்.

    கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தவர்களில் 10 பேரில் ஒருவர் பணத்தை பெறுவதும், சம்பளம் செலுத்துவதையும் கிரிப்டோ கரன்சி மூலம் பரிமாற்றம் செய்ய விரும்புகிறார்கள் என குகாய்ன் என்ற உலகாளவிய கிரிப்டோகரன்சி எக்சேஞ்ச் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

    குடும்ப ஆண்டு வருமானம் 5 மில்லியன் ரூபாய்க்கும் குறைவாக உள்ளவர்கள் அதிக அளவில் முதலீடு செய்துள்ளனர். கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 30 சதவீதம் பேர் புது முதலீட்டார்களாக சேர்ந்துள்ளனர்.

    பாகிஸ்தானிய முதலீட்டார்களில் 40 சதவீதம் பேர் 30 ஆயிரம் அல்லது 100 டாலருக்கு குறைவாக முதலீடு செய்துள்ளனர். இதில் 18 வயது முதல் 25 வயதுள்ள முதலீட்டாளர்கள் 35 சதவீதம் பேர். தற்போது குறைவான பணம் முதலீடு செய்தாலும் பிற்காலத்தில் கிரிப்டோ கரன்சி முக்கிய பங்கு வகிக்கலாம் என்பதை யூகித்து முதலீடு செய்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

    பாகிஸ்தான் வங்கி இதற்கு அங்கீகாரம் வழங்கவில்லை. டிஜிட்டல் பரிமாற்றம் பரவலாக்கப்பட்ட அமைப்புகள் மூலம் சரிபார்க்கப்படுகிறது. அதில் எவ்வளவு பேர் உள்ளனர் என்று கூறுவது மிகவும் கடினம் என்றாலும், தற்போது பாகிஸ்தானின் முதலீட்டாளர்களின் மதிப்பு 18 பில்லியன் டாலர் முதல் 25 மில்லியன் டாலர் வரை இருக்கலாம் எனத் தெரிகிறது.

    • இந்தியாவை உலக நாடுகள் உற்று கவனித்து வருகின்றன.
    • 20 நாடுகள் சபையின் தலைவராக இந்தியா உள்ளது.

    பெங்களூரு:

    சிந்தனையாளர்கள் அமைப்பு சார்பில் கலந்துரையாடல் கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    கிரிப்டோகரன்சியை உலக நாடுகள் முறைப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யாத பட்சத்தில் இந்தியா மட்டும் அதை முறைப்படுத்துவதால் சரியாக இருக்காது. 20 நாடுகள் சபையின் தலைவராக இந்தியா உள்ளது. இந்த ஜி20 நாடுகள் சபை கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்க இந்தியா முடிவு செய்துள்ளது. இந்த சபை கூட்டத்தில் விவாத பொருளில் (அஜண்டா) கிரிப்டோகரன்சி விஷயமும் சேர்க்கப்பட்டுள்ளது.

    சர்வதேச நிதியம் (ஐ.எம்.எப்.) கிரிப்டோகரன்சி குறித்து அறிக்கை வழங்கியுள்ளது. அது நுண்ணிய பொருளாதாரத்தின் நிலைத்தன்மையை பாதிக்கும் என்று கூறியுள்ளது. ஜி20 நாடுகள் சபையால் உருவாக்கப்பட்டுள்ள நிதி நிலை தன்மை வாரியமும் (எப்.எஸ்.பி.) அதுகுறித்து அறிக்கை வழங்க ஒப்புக் கொண்டுள்ளது. அந்த அமைப்பும் நிதி நிலை தன்மை குறித்த விஷயத்தில் கவனம் செலுத்தும்.

    அந்த எப்.எஸ்.பி. அறிக்கை மற்றும் சர்வதேச நிதியக அறிக்கை குறித்து வருகிற ஜூலை மாதம் நடைபெறும் ஜி20 நாடுகளின் நிதி மந்திரிகள் மற்றும் மத்திய வங்கி கவர்னர்கள் மாநாட்டில் விவாதிக்க உள்ளோம். வருகிற செப்டம்பரில் ஜி20 நாடுகள் சபையின் பிரதமர்கள் மாநாடு நடக்கிறது. டிஜிட்டல் கரன்சிகள் முழுவதுமாக டிஜிட்டல் மயம், தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. சில நேரங்களில் அதன் அடையாளத்தை ஏற்படுத்துவது மிக கடினமானது. ஆனால் அது ஆற்றல் வளம் வாய்ந்தது. அதனால் அனைத்து நாடுகளுடன் இணைந்து செயல்பட வேண்டும்.

    இந்த விஷயத்தில் ஒரு நாடு தனித்து செயல்பட முடியாது. ஏனெனில் தொழில்நுட்பத்திற்கு எல்லை கோடுகள் கிடையாது. அதற்கு தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்கள் தேவைப்படுகிறது. இந்த முயற்சியில் அனைத்து நாடுகளும் இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். இல்லாவிட்டால் கிரிப்டோகரன்சி விஷயம் பயனுள்ளதாக இருக்காது.

    ஆனால் வினியோகிக்கப்படும் பதிவு தொழில்நுட்பத்தை நாங்கள் கட்டுப்படுத்துகிறோம் என்று அர்த்தம் இல்லை. அந்த பதிவு தொழில்நுட்பம் நல்ல நிலை, வளம் மற்றும் சொந்த பலத்தை கொண்டுள்ளது. இதை நாங்கள் எங்களின் மனதில் வைத்துள்ளோம். கொரோனா வைரஸ் பரவல், உக்ரைன்-ரஷியா போர் சூழலுக்கு மத்தியிலும் இந்தியா தனது வழியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதனால் இந்தியாவை உலக நாடுகள் உற்று கவனித்து வருகின்றன.

    கச்சா எண்ணெய் மற்றும் உரம் ஆகியவற்றை இந்தியா அதிகளவில் இறக்குமதி செய்கிறது. அதன் காரணமாக பணவீக்கம் ஏற்படுகிறது. இதற்கு எதிராக ஒவ்வொரு அரசும் செயல்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலைக்கு மத்தியிலும் இந்திய மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார். ஒவ்வொரு மாநிலத்திலும் பால் கூட்டுறவு அமைப்புகள் உள்ளன. நான் பெங்களூருவில் நந்தினி பால், இனிப்பு, தயிர் சாப்பிட்டேன். டெல்லியில் இருக்கும்போது, அமுல் நிறுவன பால் பொருட்களை பயன்படுத்துகிறேன்.

    டெல்லியில் நந்தினி பால் பொருட்கள் கிடைப்பது இல்லை. நான் அமுல் பொருட்களை வாங்குவதால் கர்நாடகத்திற்கு எதிராக இருக்கிறேன் என்று அர்த்தம் கிடையாது. கர்நாடகத்தில் நந்தினி பால் நிறுவனத்தை பலப்படுத்துவது என்பது தொடர்ந்து நடைபெறும். நந்தினி பொருட்கள் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் கிடைக்கிறது.

    அதே போல் பிற மாநில பால் பொருட்கள் கர்நாடகத்தில் கிடைக்கிறது. இது ஒரு நல்ல போட்டி தான் என்று சொல்வேன். அதனால் தான் உலகில் அதிக பால் உற்பத்தி செய்யும் நாடாக இந்திய திகழ்கிறது. நந்தினி பால் நிறுவனத்தை அழிக்கவே அமுல் கொண்டு வரப்படுவதாக சொல்வது வெட்கக்கேடானது. காங்கிரஸ் ஆட்சியில் தான் அமுல் நிறுவன பால் பொருட்கள் கர்நாடகத்தில் அனுமதிக்கப்பட்டன.

    ஆனால் அந்த ஆட்சியில் முதல்-மந்திரியாக இருந்தவர் தற்போது அதுகுறித்து கேள்வி எழுப்புகிறார்கள். தற்போது தேர்தல் நேரம் என்பதால் இதை உணர்வு பூர்வமான விவகாரமாக மாற்றியுள்ளனர். அரசியல் விஷயங்களுக்குள் நமது விவசாயிகள், பெண்களை இழுக்க கூடாது. எடியூரப்பா ஆட்சியில் பாலுக்கு ஆதரவு விலையாக லிட்டருக்கு ரூ.2 வழங்கப்பட்டது. அதன் பிறகு அது ரூ.5 ஆக உயர்த்தப்பட்டது.

    இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

    • இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளது.
    • ஒரு நாளில் 101 புகார்கள் வந்துள்ளன.

    மும்பை:

    ஜல்னா மாவட்டத்தில் கிரி காரத் மற்றும் அவரது மனைவி தீப்தி கார்த் ஆகியோர் கிரிப்டோகரன்சி முதலீட்டை ஈர்த்து வந்தனர். இவர்கள் ஜி.டி.சி. கிரிப்டோவில் முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என உறுதி அளித்தனர். இதை நம்பி பலர் முதலீடு செய்தனர். இந்த நிலையில் இவர்களிடம் முதலீடு செய்து நஷ்டமடைந்த நபர் ஒருவர் போலீசில் புகார் அளித்தார். இதேபோல மேலும் பலர் இந்த கிரிப்டோவில் முதலீடு செய்து ஏமாந்து இருக்கலாம் என உணர்ந்த போலீசார், அப்படி பணத்தை இழந்தவர்கள் புகார் அளிக்குமாறு பொதுஅறிவிப்பை வெளியிட்டனர்.

    இதன்மூலம் ஒருநாளில் மாவட்டம் முழுவதும் இருந்து 101 பேர் போலீசாரை அணுகி புகார் அளித்துள்ளனர். சுமார் 10 ஆயிரம் முதலீட்டாளர்கள் ரூ.700 கோடி வரை இந்த மோசடியில் இழந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    காரத் தம்பதியின் மீதான இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளது. இதன்மூலம் அவர்களின் வங்கி கணக்குகளை முடக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தநிலையில் கிரண் காரத் போலீசில் அளித்த புகாரின் மூலம் இந்த வழக்கில் மற்றொரு பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இவர் தனது புகாரில் "தனது கிரிப்டோ கரன்சி திட்டத்தில் சுமார் ரூ.10 கோடி முதலீடு செய்த முன்னாள் கிரிக்கெட் வீரர் விஜய் ஜோல் மற்றும் 20 பேர் தன்னை 4 நாட்கள் பிணை கைதியாக பிடித்து வைத்திருந்ததாகவும், தனது சில சொத்துகள் மற்றும் நிலங்களை விஜய் ஜோல் பெயரில் மாற்ற கையெழுத்திட கட்டாயப்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.

    முன்னாள் கிரிக்கெட் வீரர் விஜய் ஜோல் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அணியை சேர்ந்த முன்னாள் மந்திரி அர்ஜுன் கோட்கரின் மருமகன் ஆவார். இதுகுறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. கைலாஷ் கோரண்டியல் கூறுகையில், 'அர்ஜுன் கோட்கரும் அவரது ஆட்களும் காரத்தை பிணை கைதியாக பிடித்து வைத்து துன்புறுத்தியதன் மூலமாக சட்டத்தை கையில் எடுத்துள்ளனர்' என குற்றம் சாட்டினார்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் கிரிப்டோகரன்சி குறித்த கருத்தரங்கு நடந்தது.
    • இந்த நிகழ்வில் துறை சார்ந்த 115 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் வணிகவியல் நிறும செயலறியல் துறை சார்பில் ''கிரிப்டோ கரன்சியின் எதிர்காலம்'' என்ற தலைப்பில் காணொலி மூலமாக கருத்தரங்கு நடந்தது.

    இதன் முக்கிய நோக்கம் மாணவர்களுக்கு கிரிப்டோ கரன்சி பற்றி விளக்குவதும், அதன் செயல்பாடுகளைப் புரிய வைப்பதும் ஆகும்.

    சென்னை இந்துக் கல்லூரியின் முதுகலை மற்றும் வணிகவியல் துறை உதவிப் பேராசிரியை சிவப்பிரியா சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்டார்.

    அவர் பேசுகையில், வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்கள் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகள் மூலம் அதன் மதிப்பைப் பெறும் கிரிப்டோ கரன்சிகள் குறித்து விளக்கினார்.

    இது பிளாக் செயின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது. அதைப் பார்க்கவும், கண்காணிக்கவும் முடியும் என்று கூறிய அவர், அதன் பரிவர்த்தனை முறையையும் விளக்கினார்.

    கிரிப்டோகரன்சிகளில் பரிவர்த்தனை செய்யும் ஆப்பிள் பே டாலர் , யுரோ போன்ற பியட் கரன்சிகளைப் போல இல்லை என்றும் இது பொதுவாக நாணயங்கள் மற்றும் டோக்கன்கள் போன்ற 2 வகைகளில் ஒன்றாகும் என்றும் தெரிவித்தார். துறைத்தலைவர் மற்றும் இணைப் பேராசிரியர் செந்தில்குமார் வரவேற்றார்.

    உதவிப்பேராசிரியை சூரியா நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை உதவிப்பேராசிரியை ஜேஸ்மின் பாஸ்டினா செய்திருந்தார். இந்த நிகழ்வில் துறை சார்ந்த 115 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • கிரிப்டோகரன்சி என்பது டிஜிட்டல் நாணயம் ஆகும்.
    • ஒரு பதாகையில் கிரிப்டோ மதிப்பில் இந்திய ரூபாய் மதிப்பீட்டை குறித்து வைத்துள்ளார்.

    பெங்களூரு :

    பெங்களூரு மாரத்தஹள்ளியை சேர்ந்தவர் சுபம் சாய்னா. இவர் மாரத்தஹள்ளியில் டீக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவர் டீ குடிக்க வரும் வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம், சில்லறை நாணயம் வாங்குவது கிடையாது. அதற்கு மாற்றாக கிரிப்டோகரன்சி வாங்கி வருகிறார். இதற்காக அவர் தனது கடையில் ஒரு பதாகையில் கிரிப்டோகரன்சி வாங்கப்படும் என்றும், கிரிப்டோ மதிப்பில் இந்திய ரூபாய் மதிப்பீட்டை குறித்து வைத்துள்ளார். இதுதொடர்பான புகைப்படத்தை அக்சய் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

    தற்போது அவை சமூக வலைத்தளத்தில் பெரிதும் விவாதிக்கப்படும் பொருளாக மாறிஉள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த சிலர், டீ கடைக்காரர் கிரிப்டோகரன்சி பயன்படுத்தும் அளவிற்கு நாடு டிஜிட்டல் தரம் பெற்றுள்ளது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    சுபம் சாய்னா, ஆரம்ப காலத்தில் கிரிப்டோகரன்சி முதலீடு செய்து பணத்தை இழந்து வந்துள்ளார். பின்னர் ரூ.30 ஆயிரம் முதலீட்டில் டீ கடையை தொடங்கி நடத்தி வருகிறார். அவருக்கு கிரிப்டோகரன்சி மீது உள்ள ஆர்வம் காரணமாக தனது வாடிக்கையாளர்களிடம் பணத்திற்கு பதிலாக கிரிப்டோகரன்சி நாணயத்தை பெறுவதற்கு விரும்புகிறார். கிரிப்டோகரன்சி என்பது டிஜிட்டல் நாணயம் ஆகும். இது காகிதமற்ற பணபரிமாற்ற முறையில் சர்வதேச அளவில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது. கர்நாடகத்தில் கடந்த காலங்களில் கிரிப்டோகரன்சி விவகாரம் அரசுக்கு எதிராக தலை தூக்கியதும் குறிப்பிடத்தக்கது.

    • கிரிப்டோகரன்சி கடும் சரிவை சந்தித்ததால் முதலீடு செய்தவர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
    • போலியான இணையதளங்களை உருவாக்கி, அறிமுக சலுகை வழங்கி முதலீட்டாளர்களை நம்ப வைக்கின்றனர்.

    புதுடெல்லி:

    உலகம் முழுவதும் டிஜிட்டல் நாணயமான கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வது அதிகரித்தவண்ணம் இருந்தது. குறிப்பாக கிரிப்டோகரன்சியானது இளைய தலைமுறையினரிடம் பெருமளவு பிரபலமாகி வருகிறது. குறுகிய காலத்தில் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறப்பட்ட நிலையில், கடந்த சில தினங்களாக கிரிப்டோகரன்சி கடும் சரிவை சந்தித்தது. இதனால் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தவர்கள் பெரும் இழப்பை சந்தித்துவருகின்றனர்.

    இது ஒருபுறமிருக்க போலியான நிறுவனங்கள் மூலம் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தவர்கள் தங்கள் பணத்தை இழந்துள்ளனர். இவ்வாறு போலி கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தின் காரணமாக இந்தியர்கள் ஆயிரம் கோடி ரூபாயை இழந்துள்ளதாக சைபர் பாதுகாப்பு நிறுவனமான கிளவுடுசெக் தெரிவித்துள்ளது.

    முறையான அனுமதி பெற்ற கிரிப்டோகரன்சி வர்த்தக தளங்களைப் போன்று போலியான இணையதளங்களை உருவாக்கி, சமூக வலைத்தளங்கள் மூலம் தகவலை பரப்புகின்றனர். குறுகிய காலத்தில் அதிக லாபம் கிடைக்கும் என்றும் ஆசை வார்த்தைகளை கூறுகின்றனர். இதனை நம்பி முதலீடு செய்த முதலீட்டாளர்கள் மொத்தமாக பணத்தை இழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    போலி கிரிப்டோ இணையதளங்கள் மூலம் மோசடி செய்பவர்கள், பயனர்களை அணுகி, அவர்களை வரவேற்கும் வகையில் அறிமுக சலுகையாக 100 டாலர் கிரெடிட் நோட்டை வழங்குகிறார்கள். இத்தகைய சலுகைகள் பயனர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக வரவு வைக்கப்படுகின்றன. இதைப் பார்த்ததும் அவர்களின் வலையில் விழுந்த பயனர்கள், தங்களிடம் உள்ள மொத்த பணத்தையும் அந்த இணையதளத்தில் செலுத்துகிறார்கள். அதிக முதலீடு கிடைத்தும், சம்பந்தப்பட்ட முதலீட்டாளர்களின் பணத்தை மோசடியாளர்கள் எடுத்துக்கொள்கிறார்கள், என கிளவுட்செக் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக கிளவுட்செக் தலைமை நிர்வாகி ராகுல் சசி கூறுகையில், பயனர்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்த பிறகு, மோசடி இணையதளத்தின் அனைத்து வர்த்தகம் மற்றும் திரும்பப் பெறும் வசதிகளும் முடக்கப்பட்டுள்ளன, என்றார்.

    கிரிப்ட்டோ கரன்சியை மத்திய ரிசர்வ் வங்கியோ அல்லது மற்ற நாடுகளின் மத்திய வங்கிகளோ அங்கீகரிக்கவில்லை. எனவே இவற்றில் ஏமாற்றுதல் நடப்பதற்கு பிற்காலத்தில் வாய்ப்பு இருக்கிறது என்று கருதப்படுகிறது.
    கிரிப்ட்டோ கரன்சியை தமிழில் ‘மெய்நிகர் பணம்’ என்று அழைக்கிறார்கள். இதை டிஜிட்டல் பணம் என்றும் கூறலாம்.

    ஒரு கடையில் நாம் பொருட்கள் வாங்குகிறோம். அதற்கு 500 ரூபாய் நோட்டை கொடுக்கிறோம். நாம் வாங்கிய பொருட்களுக்கான தொகை போக மீதி பணத்தை கொடுப்பதற்கு கடைக்காரரிடம் சில்லரை இல்லை. அந்த சூழ்நிலையில் அவர் மீதி பணத்தை கிரிப்ட்டோ கரன்சி மூலம் வழங்குவார்.

    கிரிப்ட்டோ கரன்சி என்பது பணம் அல்ல. அது டிஜிட்டல் பணம். அதை பார்க்கவோ, தொட்டு உணரவோ முடியாது.

    டிஜிட்டல் பணத்துக்காக ஒரு குறிப்பிட்ட எண்கள், ரகசிய குறியீடுகள் இணைய தளம் வழியாக நம்மிடம் வழங்கப்படும். இந்த பணத்தை அதே கடைக்காரரிடமோ அல்லது கிரிப்ட்டோ கரன்சி பரிவர்த்தனை செய்யும் மற்ற கடைகளிலுமோ கொடுத்து நாம் பணமாக மாற்றிக் கொள்ளலாம். அல்லது வேறு பொருட்கள் வாங்கலாம். இதுதான் கிரிப்ட்டோ கரன்சி.

    கிரிப்ட்டோ கரன்சியை பயன்படுத்துவதற்கு நாம் முதலில் இணைய தளத்தில் அதற்குரிய பக்கத்திற்கு சென்று கணக்கு தொடங்க வேண்டும். அது சாதாரணமானதுதான். நம்மால் அவ்வாறு தொடங்க முடியவில்லை என்றால் இதற்கான ஏஜென்சிகளும் இருக்கின்றன. அவர்களிடம் சென்று கணக்கு தொடங்கி கொள்ளலாம்.

    நம்மிடம் இருந்து டிஜிட்டல் முறையில் கையொப்பம் ஒன்று பெறப்படும். அதன் மூலமாக கிரிப்ட்டோ கரன்சி பரிவர்த்தனைகளை செய்யலாம்.

    இந்த கிரிப்ட்டோ கரன்சி பணத்தை எந்த ஒரு சட்டப்பூர்வ அமைப்பும் உருவாக்கவில்லை. யாரோ முகம் தெரியாதவர்கள் உருவாக்கி இருக்கிறார்கள். பிளாக் செயின் நெட் ஒர்க் தொழில்நுட்பத்தில் இது இயங்குகிறது.

    தற்போது பல வகை கிரிப்ட்டோ கரன்சிகள் உள்ளன. இப்போது பிரபலமாக இருக்கும் ‘பிட் காயின்’ கூட கிரிப்ட்டோ கரன்சி வகைகளில் ஒன்றாகும். இதேபோல எத்திரியம், ட்ரான், டோஜ், ஷிபா, லைட் காயின், ரிப்பில் உள்ளிட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிரிப்ட்டோ கரன்சிகள் புழக்கத்தில் உள்ளன.

    சாதாரணமாக நாம் கையில் வைத்திருக்கும் பணத்துக்கு எப்போதும் ஒரே மதிப்பு தான் இருக்கும். உதாரணத்துக்கு நம்மிடம் 100 ரூபாய் இருக்கிறது என்றால், அதன் மதிப்பு எப்போதும் 100 ரூபாய் தான்.

    ஆனால் கிரிப்ட்டோ கரன்சி மதிப்பு அதுபோல ஒரேமாதிரியாக இருக்காது. அதன் தேவை, அதிக வர்த்தகம் ஆகியவற்றின் அடிப்படையில் கிரிப்ட்டோ கரன்சியின் மதிப்பு உயரும் அல்லது குறையும்.

    அதாவது பங்குச்சந்தையில் பங்குகளின் விலை ஏற்றத்தாழ்வுபோல இதன் மதிப்பும் ஏற்றத்தாழ்வாக இருக்கும். தற்போது ஒரு பிட்காயின் விலை ரூ.47 லட்சத்து 900 ஆக உள்ளது.

    இதேபோல ஒரு எத்திரியம் காயின் விலை ரூ.3 லட்சத்து 41 ஆயிரமாக உள்ளது. ஒவ்வொரு கிரிப்ட்டோ கரன்சி பணமும் இதேபோல வர்த்தகத்துக்கு தகுந்த மாதிரி மாறுபடும்.

    கிரிப்ட்டோ கரன்சியின் மதிப்பு ஏற்ற இறக்கமாக இருப்பதால் இவற்றை பயன்படுத்தும் நாம் பங்குச்சந்தை போல லாபமும் சம்பாதிக்க முடியும். எனவே பலர் இப்போது கிரிப்ட்டோ கரன்சி பணத்தை பெற்ற வர்த்தகம் செய்து வருகிறார்கள்.

    கிரிப்ட்டோ கரன்சி பணத்தை ஹேக் செய்வதோ, மோசடி செய்வதோ முடியாது. அதற்கான பாதுகாப்பு அம்சங்களுடன் அதை வெளியிட்டு இருக்கிறார்கள்.

    நம்மிடம் உள்ள கிரிப்ட்டோ கரன்சி பணத்தை இணையதள டிஜிட்டல் லாக்கரில் நாம் சேமித்து வைத்துக் கொள்ளலாம். அதை யாரும் தொட முடியாது.

    இப்போது கிரிப்ட்டோ கரன்சி பயன்பாட்டை தடை செய்ய மத்திய அரசு சட்டம் கொண்டுவருவதற்கு முக்கிய காரணம் உள்ளது.

    கிரிப்ட்டோ கரன்சியை மத்திய ரிசர்வ் வங்கியோ அல்லது மற்ற நாடுகளின் மத்திய வங்கிகளோ அங்கீகரிக்கவில்லை எனவே இவற்றில் ஏமாற்றுதல் நடப்பதற்கு பிற்காலத்தில் வாய்ப்பு இருக்கிறது என்று கருதப்படுகிறது.

    மேலும் தற்போது பல நிறுவனங்கள் வருமான வரியை தவிர்ப்பதற்கும், மத்திய அரசின் கண்காணிப் பில் இருந்து தப்பிப்பதற்கும் கிரிப்ட்டோ கரன்சி முறையில் பண பரிவர்த்தனைகளை செய்கின்றன. இதனால் மத்திய அரசுக்கு வரக்கூடிய வரி கிடைக்காமல் போகும். அதன் கண்காணிப்பு வளையத்தில் இருந்தும் இவை தப்பிவிடும். எனவே தான் கிரிப்ட்டோ கரன்சியை தடை விதிப்பதற்கு மத்திய அரசு முடிவு எடுத்திருக்கிறது.

    ஒரு நாட்டில் புழக்கத்தில் உள்ள பணம் அந்த நாட்டில் மட்டும் தான் செல்லுபடி ஆகும். ஆனால் கிரிப்ட்டோ கரன்சி உலகில் எந்த நாட்டிலும் வேண்டுமானால் செல்லுபடியாகும். இதனால் பலரும் இதை பயன்படுத்த தொடங்கி இருக்கிறார்கள்.

    இப்போது இந்தியாவில் பல நிறுவனங்கள் இவற்றை சர்வசாதாரணமாக பயன்படுத்த தொடங்கி விட்டன. விவரம் தெரிந்த பலரும் இதை பயன்படுத்துகிறார்கள். இது பிற்காலத்தில் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் என்று கருதியதால் இந்தியாவில் தடை கொண்டு வரப்படுகிறது.


    ஃபேஸ்புக் நிறுவனம் சொந்தமாக உருவாக்கி வரும் க்ரிப்டோகரென்சியின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    ஃபேஸ்புக் நிறுவனம் அடுத்த ஆண்டு வாக்கில் உலகின் 12 நாடுகளில் சொந்தமாக க்ரிப்டோகரென்சிக்களை உருவாக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஃபேஸ்புக்கின் க்ரிப்டோகரென்சி குளோபல் காயின் என்ற பெயரில் அழைக்கப்படும் என தெரிகிறது. இந்த ஆண்டு இறுதியில் இந்த க்ரிப்டோகரென்சிக்கான சோதனை துவங்கும் என கூறப்படுகிறது.

    2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் டிஜிட்டல் பேமண்ட்ஸ் சிஸ்டம் ஒன்றை துவங்க ஃபேஸ்புக் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குளோபல் காயின் மூலம் மக்கள் குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பாக பணப்பரிமாற்றங்களை மேற்கொள்ள வழி செய்வதாக இருக்கும் என கூறப்படுகிறது.

    இதனை சாத்தியப்படுத்த ஃபேஸ்புக் நிறுவனம் வெஸ்டன் யூனியன் போன்ற பணப்பரிமாற்ற நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் பணப்பரிமாற்றங்களை மிக எளிமையாக்க முடியும் என கூறப்படுகிறது. இதுதவிர ஃபேஸ்புக் நிறுவனம் வங்கிகள் மற்றும் புரோக்கர்களுடன் இணைய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.



    குளோபல் காயின் க்ரிப்டோகரென்சியை அடுத்த ஆண்டு வணிக ரீதியில் வெளியிட ஃபேஸ்புக் நிறுவனம் ஒழுங்குமுறை மற்றும் தொழில்நுட்ப இடையூறுகளை களைய வேண்டும். ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் க்ரிப்டோகரென்சியில் இருக்கும் வாய்ப்புகள் மற்றும் சவால்கள் பற்றி விவாதிக்க பேங்க் ஆஃப் இங்கிலாந்தின் ஆளுநரை சமீபத்தில் சந்தித்து பேசினார்.

    ஃபேஸ்புக்கின் குளோபல் காயின் க்ரிப்டோகரென்சியை இந்தியாவில் பிரபலப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் இந்த சேவையை துவங்கவும் ஃபேஸ்புக் பல்வேறு இடையூறுகளை கடக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஃபேஸ்புக்கின் குளோபல் காயின் அடுத்த ஆண்டு வாக்கில் வர்த்தக ரீதியாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    ஃபேஸ்புக் நிறுவனம் சொந்தமாக க்ரிப்டோகரென்சியை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. #Facebook #cryptocurrency



    ஃபேஸ்புக் நிறுவனம் தனக்கென க்ரிப்டோகரென்சியை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் வாட்ஸ்அப் போன்ற செயலிகளில் பண பரிமாற்றம் செய்ய இந்த க்ரிப்டோகரென்சியை பயன்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. 

    அமெரிக்க டாலர் மதிப்பு ஏற்ற இறக்க சூழ்நிலை காரணமாக நிலையான மதிப்பு கொண்ட காயின்களை ஃபேஸ்புக் உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. தற்சமயம் இந்த க்ரிப்டோகரென்சி உருவாக்குவதற்கான ஆயத்த பணிகள் மட்டுமே துவங்கியிருப்பதால், இது வெளியாக இன்னும் சில காலம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



    2014 ஆம் ஆண்டு பேபால் நிறுவன தலைவர் டேவிட் மார்கஸ் ஃபேஸ்புக்கின் மெசஞ்சர் செயலியை நிர்வகிக்கும் பணியில் அமர்த்தப்பட்டார். பின் மே மாதத்தில் மார்கஸ் ஃபேஸ்புக்கின் பிளாக்செயின் நடவடிக்கைகளுக்கான தலைவராக நியமிக்கப்பட்டார். ஃபேஸ்புக்கின் பிளாக்செயின் குழுவில் தற்சமயம் வரை சுமார் 40 பேர் உள்ளனர். 

    ஃபேஸ்புக்கின் க்ரிப்டோகரென்சி பற்றி இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகவில்லை. அந்த வகையில் உண்மையில் ஃபேஸ்புக் க்ரிப்டோகரென்சியை உருவாக்கி வருகிறதா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.

    உலகம் முழுக்க ஃபேஸ்புக் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 250 கோடியாக இருக்கிறது. இந்நிறுவனத்தின் ஆண்டு வருவாய் மட்டும் 4000 கோடி டாலர்கள் ஆகும். ஃபேஸ்புக் நிறுவனம் சார்பில் க்ரிப்டோகரென்சி வெளியிடப்படும் பட்சத்தில், இவ்வாறு செய்யும் முதல் மிகப்பெரும் தொழில்நுட்ப நிறுவனமாக இருக்கும். 
    இந்தியாவில் சேவை வழங்கி வரும் அரசு வலைத்தளங்களில் ஹேக்கர்களின் கைவரிசை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #cryptocurrency #Hacking



    இந்தியாவில் உள்ள அரசு வலைத்தளங்களில் கிரிப்டோ-ஜாக்கிங் செய்யப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. மாநில அரசு வலைத்தளங்களில் துவங்கி, நகராட்சி கார்ப்பரேஷன் வலைத்தளங்களை ஹேக்கர்கள் கிரிப்டோகரென்சிக்களை மைனிங் செய்ய பயன்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆந்திர பிரதேச மாநிலத்தின் திருப்பதி நகராட்சி மற்றும் மச்சேர்லா நகராட்சி வலைத்தளங்கள் ஹேக் செயய்ப்பட்டு கிரிப்டோகரென்சிக்களை மைனிங் செய்ய பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கென காயின்ஹைவ் ஸ்க்ரிப்ட்டை ஹேக்கர்கள் பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

    அரசு சேவைகள் மற்றும் இதர விவரங்களை அறிந்து கொள்ள அரசாங்க வலைத்தளங்களை தினந்தோரும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இது குறித்து வெளியாகி இருக்கும் அறிக்கையின்படி அரசு வலைத்தளங்களில் உள்ள தீங்கு விளைவிக்கும் குறியீடுகள் பயனரின் கம்ப்யூட்டரில் நுழைந்து, அதன்பின் மின்சாரம் அல்லது இண்டர்நெட் இணைப்பு போன்றவற்றை பயன்படுத்தி கிரிப்டோகரென்சி மைனிங் செய்யப்படுகிறது.



    மொனேரோ எனும் கிரிப்டோகரென்சியை மைன் செய்ய ஹேக்கர்கள் குறியீடுகளை பயன்படுத்துகின்றனர். மொனேரோ வகையை சேர்ந்த கிரிப்டோகரென்சியை டிராக் செய்வது மிகவும் கடினமான ஒன்றாகும். மேலும் அரசாங்க வலைத்தளங்களில் அதிகமானோர் பயன்படுத்தி வருவதோடு, இவற்றின் பாதுகாப்பு போதுமான அளவு செய்யப்படாததால் ஹேக்கர்கள் இவற்றை தேர்வு செய்கின்றனர். 

    இதேபோன்று மத்திய தகவல் தொழில்நுட்ப மந்திரி ரவி சங்கர் பிரசாத் பயன்படுத்தி வரும் அதிகாரப்பூர்வ வலைத்தளமும் மொனேரோ கிரிப்டோகரென்சி மைனிங் செய்ய பயன்படுத்தப்பட்டு வந்தது முன்னதாக கண்டறியப்பட்டது. 

    புதிய மால்வேர் மூலம் நூற்றுக்கும் அதிகமான வலைத்தளங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரவிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் மற்றும் இண்டர்நெட் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், பெரிய அளவில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டு இருப்பது ஹேக்கர்களுக்கு அதிளவு லாபத்தை ஈட்டித்தருகிறது.
    நெதர்லாந்து நாட்டின் சர்வதேச விமான நிலையத்தில் பிட்காயின் ஏடிஎம் நிறுவப்பட்டுள்ளது. இதை கொண்டு யூரோக்களை க்ரிப்டோகரென்சிகளாக மாற்ற முடியும்.




    நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் பிட்காயின் ஏடிஎம் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி, யூரோக்களை க்ரிப்டோகரென்சிக்களாக மாற்றிக் கொள்ள முடியும். ஸ்கிபோல் விமான நிலையம் வரும் பயணிகள் இனி தங்களது ரொக்கத்தை பிட்காயின் மற்றும் எத்திரியம்களாக மாற்ற முடியும்.

    சோதனை அடிப்படையில் ஆறு மாத காலத்திற்கு நிறுவப்பட்டிருக்கும், இந்த ஏடிஎம் பயணாளிகளின் வரவேற்புக்கு ஏற்ற வகையில் நீ்ட்டிப்பது குறித்த முடிவு எடுக்கப்பட இருக்கிறது. ஐரோப்பியாவில் இது போன்ற ஏடிஎம் பெறும் முதல் விமான நிலையம் இது என ஸ்கிபோல் தெரிவித்திருக்கிறது. 

    ஸ்கிபோல் விமான நிலையத்தின் வாடிக்கையாளர் சேவை பிரிவு தலைவர் தன்ஜா டிக் கூறும் போது, “பயணாளிகளுக்கு தலைசிறந்த சேவையை வழங்க ஸ்கிபோல் தொடர்ந்து புதுவித மற்றும் வித்தியாச வழிமுறைகளை வழங்க முயற்சிக்கிறது என தெரிவித்தார். 
    “பிட்காயின் ஏடிஎம் மூலம் பயணர்கள் தங்களின் யூரோக்களை சர்வதேச க்ரிப்டோகரென்சிக்களாக மாற்றிக் கொள்ள முடியும். இது பலருக்கும் பயன்தரும் வகையில் இருக்கும்.” என அவர் மேலும் தெரிவித்தார். 



    புதிய ஏடிஎம் இயந்திரம் பேலெக்ஸ் டேட்டா சொல்யூஷன்ஸ் பிவி (ByeleX Data Solutions BV) எனும் தட்சு நிறுவனத்துடன் இணைந்து நிறுவப்பட்டிருக்கிறது. இந்நிறுவனம் வியாபாரங்களுக்கு தேவையான க்ரிப்டோகரென்சி சேவைகளை வழங்கி வருகிறது.

    உலகில் முதல் முறையாக க்ரிப்டோகரென்சி பரிமாற்றங்களை மேற்கொள்ளும் வசதியை ஆஸ்திரேலிய விமான நிலையம் அறிமுகம் செய்தது. மே மாத வாக்கில் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் விமான நிலையத்தில் முதல் முறையாக க்ரிப்டோகரென்சி ஏடிஎம் இயந்திரம் நிறுவப்பட்டது. 

    பல்வேறு வியாபார நிறுவனங்களும் விர்ச்சுவல் கரென்சிக்களை பரிமாற்றங்களுக்கு பயன்படுத்த துவங்கிவிட்ட நிலையில், க்ரிப்டோகரென்சிக்களை கொண்டே உலகை சுற்றி வருவது மிகவும் எளிமையாகிவிட்டது.
    ஆப்பிள் இயங்குதளங்களில் ஆப் உருவாக்குவோர் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை ஆப்பிள் நிறுவனம் மேம்படுத்தியுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    கலிஃபோர்னியா:

    ஆப்பிள் நிறுவன சாதனங்களில் க்ரிப்டோகரென்சிக்களை மைனிங் செய்யும் செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆப் ஸ்டோர் நெறிமுறைகளை சமீபத்தில் அப்டேட் செய்து புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. புதிய தடை ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்து தளங்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக மார்ச் மாத வாக்கில் காலென்டர் 2 செயலியை மேக் ஆப் ஸ்டோரில் இருந்து ஆப்பிள் நிறுவனம் நீக்கியது. இந்த ஆப் பயனர்களின் சாதனங்களை க்ரிப்டோகரென்சிக்களை மைன் செய்ய பயன்படுத்திக் கொண்டு, மாற்றாக பிரீமியம் அம்சங்களை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டது.

    க்ரிப்டோகரென்சி செயலிகளுக்கு எதிராக ஆப்பிள் மேற்கொண்ட முதல் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. முன்னதாக இதுபோன்ற செயலிகளுக்கு எதிராக ஆப்பிள் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொண்டது கிடையாது. ஆப்பிள் ஆப் ஸ்டோர் விதிமுறைகளை மீறியதால் காலென்டர் 2 செயலி நீக்கப்பட்டதாக ஆப்பிள் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    தற்சமயம் ஆப்பிள் நிறுவனம் க்ரிப்டோகரென்சிக்களுக்கு எதிரான புதிய நெறிமுறைகளை அறிவித்துள்ளது. புதிய நெறிமுறைகள் ஐஓஎஸ், மேக் ஓஎஸ், வாட்ச் ஓஎஸ் மற்றும் டிவி ஓஎஸ் செயலிகளுக்கும் பொருந்தும். அந்த வகையில் ஆப்பிள் அறிவித்திருக்கும் புதிய நெறிமுறைகளை தொடர்ந்து பார்ப்போம்.


    கோப்பு படம்

    - ஆப்பிள் இனி விர்ச்சுவல் கரென்சி வாலெட் செயலிகளை அனுமதிக்கும், எனினும் இதற்கு டெவலப்பர்கள் தங்களை நிறுவனங்களாக பதிவு செய்திருக்க வேண்டும்.

    - க்ரிப்டோகரென்சி மைனிங்-ஐ சாதனத்துக்கு வெளியே செய்யும் செயலிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. அதாவது கிளவுட்-சார்ந்த மைனிங் செய்யும் செயலிகள் அனுமதிக்கப்படுகின்றன.

    - செயலிகளை கொண்டு பயனர்கள் பணம் செலுத்துவது, பண பரிமாற்றம் அல்லது அனுமதிக்கப்பட்ட எக்சேஞ்ச்களில் க்ரிப்டோகரென்சிக்களை பெறவும் முடியும்.

    - இதேபோன்று காயின்களை வழங்கும் செயலிகள், பிட்காயின் பரிமாற்றங்கள், இதர க்ரிப்டோகரென்சி பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்டவை வங்கிகள், நிறுவனங்கள் மற்றும் இதர அதிகாரப்பூர்வ நிதி நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் அவை சட்டரீதியாகவும் இருக்க வேண்டும்.

    - பயனர்களை சமூக வலைத்தள நடவடிக்கை, மற்றவர்களை குறிப்பிட்ட செயலிகளை டவுன்லோடு செய்ய தூண்டுவது மற்றும் செயலிகளை டவுன்லோடு செய்வது உள்ளிட்டவற்றுக்கு க்ரிப்டோகரென்சி செயலிகள் அதன் பயனர்களுக்கு விர்ச்சுவல் காயின்களை வழங்க கூடாது.


    கோப்பு படம்

    புதிய விதிமுறைகளால் சில மூன்றாம் தரப்பு க்ரிப்டோகரென்சி செயலிகள் தடை செய்யப்படும் சூழலில் இருக்கும் நிலையில், ஆப்பிள் க்ர்ப்டோகரென்சி செயலிகளின் போக்கு முற்றிலும் மாற்றியமைக்கும். புதிய விதிமுறைகளால் எத்தனை செயலிகள் நீக்கப்படும் என்ற தகவல்கள் இனி வரும் நாட்களில் தெரியவரும்.

    ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருக்கும் அனைத்து செயலிகளுக்கும் புதிய விதிமுறை பொருந்தும் என்பதால், மேக் மற்றும் ஜெயில்பிரேக் செய்யப்பட்ட ஐபோன்களில் தொடர்ந்து க்ரிப்டோகரென்சிக்களை மைன் செய்ய முடியும்.
    ×