search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "consultation"

    • மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்படுமா? இல்லையா? என்பது மிகப்பெரிய கேள்வியாகவே மாறி இருக்கிறது.
    • கமல்ஹாசன் தொகுதி பங்கீட்டில் ஏற்பட்டுள்ள சிக்கல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் நிலைப்பாடு குறித்து அறிவிக்க உள்ளார்.

    சென்னை:

    தி.மு.க. கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இடம் உண்டா? தொகுதிகள் ஒதுக்கப்படுமா? என்பது பற்றிய பேச்சு வார்த்தை இன்னும் நடைபெறாமலேயே உள்ளது. கோவை தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டு வந்தது .

    இந்நிலையில் அந்த தொகுதியை ஏற்கனவே வெற்றி பெற்ற கம்யூனிஸ்ட் கட்சி கேட்பதால் அதில் இழுபறி நீடித்து வருகிறது. இதனால் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்படுமா? இல்லையா? என்பது மிகப்பெரிய கேள்வியாகவே மாறி இருக்கிறது. தொகுதி பங்கீட்டை இறுதி செய்து விட்டு கமல் படப்பிடிப்புக் காக வெளி நாடு செல்ல திட்டமிட்டு இருந்தார். ஆனால் தொகுதி உடன்பாடு இன்னும் ஏற்படாததால் அவரது வெளிநாட்டு பயணமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளை மறுநாள் 7-ந்தேதி கமல்ஹாசன் சென்னையில் அவசர ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளார்.

    இந்த கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்கிறார்கள். அவர்களுடன் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாகவும் தி.மு.க. கூட்டணியில் நீடிக்கும் சிக்கல் குறித்தும் விவாதிக்கப்படுகிறது. இந்த கூட்டத்துக்கு பிறகு கமல்ஹாசன் தொகுதி பங்கீட்டில் ஏற்பட்டுள்ள சிக்கல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் நிலைப்பாடு குறித்து அறிவிக்க உள்ளார். தி.மு.க. கூட்டணி தொகுதி உடன்பாட்டில் சிக்கல் நீடித்து வரும் நிலையில் கமல்ஹாசன் நடத்தும் இந்த ஆலோசனை எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 3 இடங்களையாவது பெற்றுவிட வேண்டும் என்பதில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் உறுதியாக உள்ளனர்.
    • பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக கட்சியின் நிர்வாகிகளுடன் அவர் கலந்து ஆலோசிக்கிறார்.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தி.மு.க. கூட்டணியில் இடம் பெறுவது உறுதியாகி உள்ளது. கூட்டணியில் எந்த தொகுதியை கமல்ஹாசனுக்கு ஒதுக்கி கொடுப்பது என்பதில் கடும் இழுபறி ஏற்பட்டுள்ளது.

    தென் சென்னை, கோவை, மதுரை, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் ஒரு தொகுதி கமல்ஹாசனுக்கு ஒதுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே நேரத்தில் கூட்டணியில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களை குறைந்தது, 3 இடங்களையாவது பெற்றுவிட வேண்டும் என்பதில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் உறுதியாக உள்ளனர்.

    தற்போது வெளிநாட்டில் உள்ள கமல்ஹாசன் இன்று இரவு சென்னை திரும்புகிறார். வருகிற 21-ந் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெறுகிறது. அன்று கட்சி அலுவலகத்துக்கு சென்று கமல்ஹாசன் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார். பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக கட்சியின் நிர்வாகிகளுடன் அவர் கலந்து ஆலோசிக்கிறார்.

    கட்சியின் 7-ம் ஆண்டு தொடக்க விழா தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளரான அருணாச்சலம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    'மக்கள் நலன் ஒன்றே தனது கொள்கை, அதுவே நாளைய உலகின் நவீன சித்தாந்தம்' என்று முழங்கி நம்மவர் மக்கள் நீதி மய்யம் கட்சியை துவக்கிய நாள் பிப்ரவரி 21.

    வரும் பிப்ரவரி 21-ந் தேதி நமது மக்கள் நீதி மய்யத்தின் 7-ம் ஆண்டு துவக்க நாளாகும். அந்த நாளை சிறப்புடன் கொண்டாடும் வண்ணம் அன்று நம்மவர் காலை 10 மணியளவில், நமது தலைமை நிலையத்தில், மக்கள் நீதி மய்யக் கொடியினை ஏற்றி வைத்து தொண்டர்களிடையே சிறப்புரையாற்ற உள்ளார்.

    அந்த சீர்மிகு நிகழ்வை சிறப்பிக்கும் பொருட்டு நிர்வாகக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், அமைப்பு மற்றும் அணிகளைச் சேர்ந்த மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, வட்ட, கிளை நிர்வாகி கள், உறுப்பினர்கள், நம்ம வர் தொழிற்சங்கப் பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் அவசியம் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    தாய்மொழி தினத்தில் (பிப்ரவரி 21) பிறந்த மக்கள் நீதி மய்யம் பாராளுமன்றத் தேர்தல் களத்தில் வெல்லும்! வரலாறு அதைச் சொல்லும்!!

    வாருங்கள்! ஒன்று கூடுவோம். வென்று காட்டுவோம். நாடாளுமன்றத்தில் நம்மவர்

    இவ்வாறு அதில் கூறப்படுகிறது.

    மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 'டார்ச்' லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட உள்ள தொகுதிகளில் ஒன்றே கமல்ஹாசனுக்கு ஒதுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே கமல்ஹாசன் கை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    • அ.தி.மு.க. சார்பில் முறைப்படி பேச்சு வார்த்தைக்கு வருமாறு தே.மு.தி.க.வுக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளது.
    • பேச்சு வார்த்தையில் தே.மு.தி.க.வுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது பற்றிய விவரங்கள் தெரிய வரும்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து கட்சி களும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில் தே.மு.தி. க.வும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.

    பாராளுமன்ற தேர்தலை சந்திப்பது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் யாருடன் கூட்டணி வைக்கலாம் என்பது பற்றி கருத்து கேட்கப்பட்டது.

    அப்போது பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் அ.தி.மு.க.வுடனேயே கூட்டணி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இதைத் தொடர்ந்து பேட்டி அளித்த பிரேமலதா, 14 தொகுதிகள் மற்றும் ஒரு மேல்சபை எம்.பி. சீட்டை தரும் கட்சியுடன் கூட்டணி என்று அறிவித்திருந்தார்.

    இந்த நிலையில் கூட்டணி தொடர்பாக நேற்று மீண்டும் கருத்து தெரிவித்த பிரேமலதா கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சிகளே பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

    இதன்மூலம் அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பிரேமலதா தயாராக இருப்பதாகவே கட்சியினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தொகுதி பங்கீடு பற்றி பேச்சு நடத்துவதற்கு தே.மு.தி.க. நிர்வாகிகள் அடங்கிய குழுவை பிரேமலதா விரைவில் அமைக்க உள்ளார். இதன் பின்னர் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை மீண்டும் கூட்டி ஆலோசனை நடத்தவும் அவர் முடிவு செய்துள்ளார்.

    இந்த கூட்டம் விரைவில் கூட்டப்பட உள்ளது. மாவட்ட செயலாளர்கள் தொகுதி பங்கீட்டு குழு ஆகியோருடன் பிரேமலதா ஆலோசனை நடத்தி பல்வேறு அறிவுரைகளை வழங்க உள்ளார். இதன் பிறகே அ.தி.மு.க. சார்பில் முறைப்படி பேச்சு வார்த்தைக்கு வருமாறு தே.மு.தி.க.வுக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளது.

    இந்த அழைப்பை ஏற்று தே.மு.தி.க. தொகுதி பங்கீட்டு குழு, அ.தி.மு.க. குழுவுடன் பேச்சு நடத்த உள்ளது. இந்த பேச்சு வார்த்தையில் தே.மு.தி.க. வுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது பற்றிய விவரங்கள் தெரிய வரும்.

    அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேச்சு நடத்த செல்லும்போது தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலையும் தே.மு.தி.க. நிர்வாகிகள் அ.தி.மு.க.விடம் வழங்க உள்ளனர். இதனை பரிசீலித்த அ.தி.மு.க. உரிய தொகுதிகளை தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • தமிழ்நாடு முழுவதும் வருகிற 5-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை 9 மண்டலங்களுக்கு உட்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று தரவுகளை பெறுவார்கள்.
    • நேரடியாக அமைப்புகளின் பிரதிநிதிகளை அழைத்து வந்தோ அல்லது அவர்களிடம் தரவுகளைப் பெற்று வந்தோ குழுவினரிடம் ஒப்படைக்க வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க.வின் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த குழுவினர் தமிழ் நாடு முழுவதும் வருகிற 5-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை 9 மண்டலங்களுக்கு உட்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று தரவுகளை பெறுவார்கள்.

    5-ந்தேதி (திங்கள்) சென்னை மண்டலத்துக்கு உட்பட்ட சென்னை, திரு வள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் வேலப்பன்சாவடியில் உள்ள கஜலட்சுமி திருமண மண்டபத்தில் காலை 9 மணி முதல் கருத்து கேட்பார்கள்.

    மாலை 5 மணிக்கு வேலூர் சத்துவாச்சேரியில் உள்ள கிருஷ்ணா மகாலில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் கருத்து கேட்கப்படும்.

    6-ந்தேதி (செவ்வாய்) காலை 10.30 மணி முதல் மாடூர் ஏ.என்.பி. மஹாலில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் கருத்து கேட்கப்படும்.

    மாலை 5 மணிக்கு சேலம் மண்டலத்துக்குட்பட்ட சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் சூரமங்கலம் மெயின் ரோட்டில் உள்ள ஜி.வி.என். திருமண மண்டபத்தில் வைத்து கருத்து கேட்கப்படும்.

    7-ந்தேதி (புதன்கிழமை) காலை 10 மணி முதல் தஞ்சாவூர் மண்டலத்தில் உள்ள புதுக்கோட்டை ரோடு பி.எல்.ஏ. மஹாலில் தஞ்சாவூர், நாகப் பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் கருத்து கேட்கப்படும்.

    மாலை 5 மணிக்கு திருச்சி மண்டலகத்துக்குட்பட்ட திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்தவர் களிடம் கருமண்டபத்தில் உள்ள எஸ்.பி.எஸ். மஹாலில் வைத்து கருத்து கேட்கப்படும்.

    8-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு திருநெல்வேலி மண்டலம், திருவனந்தபுரம் ரோட்டில் உள்ள நேருஜி கலையரங்கத்தில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் கருத்து கேட்கப்படும்.

    9-ந்தேதி (வெள்ளிக் கிழமை) மாலை 4 மணிக்கு மதுரை மண்டலம், காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருது நகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் கருத்து கேட்கப்படும்.

    10-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு கோவை மண்டலம், காளப்பட்டி ரோட்டில் உள்ள சுகுணா ஆடிட்டோரியத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் கருத்து கேட்கப்படும்.

    தேர்தல் அறிக்கை குழுவினர் வரும்போது, மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டக் கழக செயலாளர் களும்,. நிர்வாகிகளும், அந்தந்த மாவட்டங்களில் உள்ள விவசாயிகள், விவசாய சங்கங்கள், விவசாயத் தொழிலாளர்கள், கைத்தறி மற்றும் விசைத்தறித் தொழிலாளர்கள், மோட்டார் வாகன உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள், மீனவர்கள், அரசு அலுவ லர்கள், ஆசிரியர்கள், ரெயில்வே தொழிற் சங்கங்கள், தொழில் முதலீட்டாளர்கள், சிறு, குறு தொழில் முதலீட்டாளர்கள், வணிகர் சங்கங்கள், வியாபாரிகள் சங்கம், அமைப்பு சாரா தொழிலாளர்கள், பொதுநலச் சங்கங்கள், மகளிர், சுயஉதவிக் குழுக்கள், மாணவர்கள், பொதுநலன் சார்ந்த அமைப்புகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களிடமும், பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மத்திய அரசிடம் இருந்து அவர்களின் தேவைகள், எதிர்பார்ப்புகள் எவை எவை என்று, நேரடியாக அமைப்புகளின் பிரதிநிதிகளை அழைத்து வந்தோ அல்லது அவர்களிடம் தரவுகளைப் பெற்று வந்தோ குழுவினரிடம் ஒப்படைக்க வேண்டும்.

    • டெல்லியில் இன்றும், நாளையும் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
    • ஒவ்வொரு மாநில தேர்தல் அதிகாரியிடமும் வாக்காளர் பட்டியல் ஏற்பாடு குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் 5 ஆண்டு பதவிக் காலம் வருகிற மே மாதம் நிறைவு பெற உள்ளது.

    இதையடுத்து புதிய அரசை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடத்த வேண்டியது உள்ளது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இதற்கான தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தலுக் கான அட்டவணையை அடுத்த மாதம் (பிப்ரவரி) இறுதியில் வெளியிட தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. அதற்கு முன்னதாக நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தலை நடத்துவதற்கான பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது.

    இதன் தொடர்ச்சியாக, ஒவ்வொரு மாநிலத்தின் சூழ்நிலைகளை ஆராய்ந்து தேர்தல் தேதிகளை முடிவு செய்வதற்கான பூர்வாங்கப் பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலம் வாரியாக தேர்தலுக்காக செய்யப்பட்டுள்ள முன் ஏற்பாடுகள், சட்டம்-ஒழுங்கு நிலவரம் ஆகியன குறித்து அந்தந்த மாநிலத் தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    மக்களவைத் தேர்தலுக்கான முன் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய இந்திய தேர்தல் ஆணையக் குழுவினர் தமிழகம் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னையில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாடு உள்ளிட்ட காரணங்களால், தேர்தல் ஆணையக் குழுவினரின் வருகை தள்ளிப்போயுள்ளது.

    இதனிடையே, அனைத்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளது. டெல்லியில் இன்றும், நாளையும் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்த விவரங்களை அந்தந்த மாநிலங்களின் தேர்தல் அதிகாரிகள் விளக்க உள்ளனர். குறிப்பாக பாதுகாப்பு, வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை, சட்டம்-ஒழுங்கு நிலவரம் ஆகியவை முழுமையாக ஆய்வு செய்யப்படும்.

    மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஏதேனும் முக்கிய பண்டிகைகள் வருகிறதா என்பது பற்றியும் விவாதிக்கப்பட உள்ளது. ஒவ்வொரு மாநில சூழ்நிலைக்கு ஏற்ப தேர்தல் தேதி அட்டவணை தயாரிக்க இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

    மேலும் ஒவ்வொரு மாநில தேர்தல் அதிகாரியிடமும் வாக்காளர் பட்டியல் ஏற்பாடு குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. இந்தக்கூட்டத்தில் அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு டெல்லி சென்றுள்ளார்.

    • மத்திய பா.ஜனதா ஆட்சியில் நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
    • தேர்தல் பொறுப்புகளை ஒருவரே செய்யாமல் அனைவரும் பகிர்ந்து பணியாற்ற வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில பா.ஜனதாவில் மாநில நிர்வாகிகள் நியமிக்கப் பட்டுள்ளனர்.

    புதிய நிர்வாகிகளின் முதல் கூட்டம் நடந்தது. பா.ஜனதா மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி. தலைமை வகித்தார். அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்.ஜெ.சரவணன்குமார், எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், ரிச்சர்டு, ராமலிங்கம், வெங்கடேசன், அசோக்பாபு, சிவசங்கர் மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் புதுவை மாநில பா.ஜனதா பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா பேசியதாவது:-

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜனதா ஆட்சியில் நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

    முத்ரா திட்டம், கியாஸ் திட்டம் அனைத்து ஏழை மக்களையும் சென்றடைந்துள்ளது. புதுவையில் 3.5 லட்சம் பேர் மத்திய அரசு திட்டங்களால் பயனடைந்துள்ளனர்.

    அவர்களை சந்தித்து நாடாளுமன்ற தேர்தலில் நாம் பணியாற்ற வேண்டும். அதற்கேற்ப வியூகங்களை வகுக்க வேண்டும். புதுவையில் பா.ஜனதா வேட்பாளர்தான் போட்டியிடுவார்.

    எனவே பா.ஜனதா வேட்பாளர் வெற்றி பெற நிர்வாகிகள் இரவு, பகலாக உழைக்க வேண்டும். தேர்தல் பொறுப்புகளை ஒருவரே செய்யாமல் அனைவரும் பகிர்ந்து பணியாற்ற வேண்டும். மாநிலத்தில் உள்ள அனைத்து பூத்களிலும் பா.ஜனதாவை பலப்படுத்த வேண்டும். மீண்டும் மத்தியில் பா.ஜனதா ஆட்சி மலரும் போது நாட்டில் அபரிதமான வளர்ச்சி இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து மத்திய அரசு செய்த திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    • கடந்த பாராளுமன்ற தேர்தலில் 10 மாநிலங்களிலும் காங்கிரஸ் பெற்ற வெற்றி, தோல்வி அந்த கூட்டத்தில் ஆய்வு செய்யப்படுகிறது.
    • தமிழக காங்கிரஸ் நிலவரம் பற்றி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி முழுமையான அறிக்கை தயாரித்து உள்ளார்.

    பா.ஜனதாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா கூட்டணியை மேலும் வலிமைப்படுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. அதற்கு வசதியாக 10 மாநிலங்களில் செல்வாக்கு மிக்க மாநில கட்சிகளுடன் சுமூகமான தொகுதி பங்கீட்டை நடத்தி முடிக்க காங்கிரஸ் மூத்த தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    தமிழ்நாடு, பீகார், உத்தர பிரசேதம், மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட், காஷ்மீர், பஞ்சாப், மராட்டியம், டெல்லி ஆகிய மாநிலங்களில் சுமூகமான தொகுதி பங்கீடு செய்தால் பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் பொது வேட்பாளரை நிறுத்த முடியும் என்று கருதுகிறது.

    எனவே இந்த 10 மாநிலங்களிலும் காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் போட்டியிட வேண்டும், மாநில கட்சிகளுக்கு எத்தனை தொகுதி கொடுக்க வேண்டும் என்பதை முதலில் முடிவு செய்ய தீர்மானித்துள்ளனர். இதற்காக டெல்லியில் வருகிற 29, 30-ந் தேதிகளில் 2 நாட்கள் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் நடக்கிறது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழகம் உள்பட 10 மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கு மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது. 10 மாநில தலைவர்களிடமும் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் தீவிர ஆலோசனை நடத்த உள்ளனர்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் 10 மாநிலங்களிலும் காங்கிரஸ் பெற்ற வெற்றி, தோல்வி அந்த கூட்டத்தில் ஆய்வு செய்யப்படுகிறது. கடந்த தேர்தலில் போட்டியிடும் இடங்கள் பற்றியும் விவாதிக்கப்பட உள்ளது. அதன் அடிப்படையில் மாநில கட்சிகளிடம் தொகுதிகளை பெற பட்டியல் தயாரிக்கப்படும்.

    இதற்காக முழு அளவில் அறிக்கைகள் தயாரித்து தயாராக வருமாறு மாநில தலைவர்களுக்கு காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் தமிழக காங்கிரஸ் நிலவரம் பற்றி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி முழுமையான அறிக்கை தயாரித்து உள்ளார்.

    டெல்லியில் 29, 30-ந் தேதிகளில் ஆலோசனை கூட்டம் நடக்கும்போது தமிழக காங்கிரசின் செல்வாக்கு மற்றும் எத்தனை தொகுதிகளில் போட்டியிட ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது பற்றி கே.எஸ்.அழகிரி விரிவாக தெரிவிப்பார். அதன் அடிப்படையில் தி.மு.க.விடம் தொகுதிகளை பெறுவது பற்றி காங்கிரஸ் மேலிடம் இறுதி முடிவு செய்யும்.

    • வாக்கு எண்ணிக்கை முடிந்து 1 வாரம் ஆகியுள்ள நிலையில் 3 மாநிலத்துக்கு பா.ஜனதா இன்னும் முதல்-மந்திரிகளை தேர்வு செய்யவில்லை.
    • சத்தீஸ்கர் மாநில பா.ஜனதா பொறுப்பாளர்களான ஓம்மாத்தூர், மத்திய மந்திரி மான்சுக் மாண்டவியா, நிதின் ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.

    ராய்ப்பூர்:

    5 மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 3 மாநிலத்தில் அமோக வெற்றி பெற்றது. மத்தியபிரதேசத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.

    ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரசிடம் இருந்து ஆட் சியை கைப்பற்றியது. வாக்கு எண்ணிக்கை முடிந்து 1 வாரம் ஆகியுள்ள நிலையில் 3 மாநிலத்துக்கு பா.ஜனதா இன்னும் முதல்-மந்திரிகளை தேர்வு செய்யவில்லை.

    இந்நிலையில் சத்தீஸ்கர் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ராய்ப்பூரில் இன்று பிற்பகல் நடக்கிறது.

    கட்சியின் மேலிட பார்வையாளர்களான மத்திய மந்திரிகள் அர்ஜூன் முண்டா, சர் பானந்தா சோனவால் மற்றும் பொதுச்செயலாளர் துஷ்யந்த்குமார் கவுதம் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். சத்தீஸ்கர் மாநில பா.ஜனதா பொறுப்பாளர்களான ஓம்மாத்தூர், மத்திய மந்திரி மான்சுக் மாண்டவியா, நிதின் ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.

    புதிதாக தேர்வு செய்யப்பட்ட 54 பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்று புதிய முதல்வரை தேர்வு செய்கிறார்கள். ஒருமித்த கருத்துடன் முதல்-மந்திரி தேர்வு நடைபெறும் என்று பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவித்தன.

    ராமன்சிங், ரேணுகாசிங், அருண்சிங் ஆகியோரின் பெயர்கள் முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் இருப்பதாக கூறப்படுகிறது.

    • இருவருக்கும் துணை முதல்-மந்திரி பதவி வழங்கலாமா என்று கட்சி மேலிடம் ஆலோசித்தது.
    • பாட்டி விக்ரமார்காவுக்கு துணை முதல் மந்திரி பதவி கிடைக்கலாம் என அந்த கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் முதல் மந்திரியாக ரேவந்த் ரெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இந்த மாநிலத்தில் துணை முதல் மந்திரி பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. துணை முதல் மந்திரி போட்டியில் பாட்டி விக்ரமார்கா மற்றும் உத்தம் ரெட்டி ஆகியோர் உள்ளனர்.

    இவர்கள் இருவருக்கும் துணை முதல்-மந்திரி பதவி வழங்கலாமா என்று கட்சி மேலிடம் ஆலோசித்தது.

    ஆனால் தலித் ஒருவரை துணை முதல்-மந்திரி ஆக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி பாட்டி விக்ரமார்காவுக்கு துணை முதல் மந்திரி பதவி கிடைக்கலாம் என அந்த கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    • காங்கிரசை பொறுத்தவரை 10 தொகுதிகள் குறையக்கூடாது என்ற நிலைப்பாட்டில் உள்ளது.
    • முக்கியமாக சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி மக்கள் மத்தியில் பரப்புரை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளோம்.

    சென்னை:

    காங்கிரஸ் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளன.

    கடந்த தேர்தலில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. வருகிற தேர்தலில் இந்தியா கூட்டணியில் முக்கிய கட்சியாக இடம் பெற்றுள்ள தி.மு.க. இந்த கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று கருதுகிறது.

    எனவே அதற்கு ஏற்ப கூட்டணி கட்சிகளின் பலத்தை எடை போட்டு ஒவ்வொரு தொகுதியையும் ஒதுக்க திட்டமிட்டுள்ளது. கட்சிகளின் வெற்றிக்கு அடித்தளமாக இருப்பது பூத் கமிட்டிகள்தான். எனவே கூட்டணி கட்சிகளின் பூத் கமிட்டிகளின் பலத்தையும் எடை போடுகிறது.

    காங்கிரசை பொறுத்தவரை 10 தொகுதிகள் குறையக்கூடாது என்ற நிலைப்பாட்டில் உள்ளது. சமீபத்தில் சென்னை வந்த சோனியா, பிரியங்காவிடமும் கூடுதல் இடங்கள் கேட்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சோனியா கட்சியை வலுப்படுத்தும் படி கூறினார்.

    இந்நிலையில் தமிழகம் முழுவதும் பூத் கமிட்டிகள் அமைக்கவும், ஏற்கனவே இருக்கும் இடங்களில் பலப்படுத்தவும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உத்தரவிட்டார். இந்த பணிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடந்து வருகிறது.

    தேர்தலுக்கான செயல் திட்டங்களை வகுக்க மாவட்ட தலைவர்கள் கூட்டத்துக்கு கே.எஸ்.அழகிரி அழைப்பு விடுத்து இருந்தார். அதன்படி இன்று மாவட்ட தலைவர்களுடன் கே.எஸ்.அழகிரி ஆலோசனை நடத்தினார்.

    முன்னதாக பூத் கமிட்டிகள் நிலவரம் பற்றி கே.எஸ்.அழகிரியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    இன்றைய கூட்டத்தில் முக்கியமாக இதைப்பற்றி தான் ஆலோசிக்கிறோம். எங்கள் கையை நாங்கள் பலப்படுத்துகிறோம். பூத் கமிட்டிகளை பொறுத்த வரை குறைந்தபட்சம் ஒரு தலைவர் அவரின் கீழ் 9 உறுப்பினர்கள் இருப்பார்கள். ஏற்கனவே 60 சதவீதம் பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டுவிட்டன. இன்றும் பலர் ஒப்படைப்பார்கள்.

    எனவே 85 சதவீதம் வரை நிறைவடையும் என்று கருதுகிறோம். 100 சதவீத பூத் கமிட்டி அமைக்கப்பட வேண்டும் என்று ராகுல் உத்தரவிட்டுள்ளார். எனவே அந்த இலக்கை நோக்கி பணியை தீவிரப்படுத்து வோம்.

    முக்கியமாக சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி மக்கள் மத்தியில் பரப்புரை மேற்கொள்ளவும் திட்ட மிட்டுள்ளோம் என்றார்.

    கூட்டத்தில் சென்னை மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், டெல்லிபாபு, சிவராஜசேகரன், முத்தழகன், ரஞ்சன்குமார், அடையாறு துரை, ஊட்டி கணேஷ், கே..டி.உதயம் உள்பட 60-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    மாநில நிர்வாகிகள் கோபண்ணா, உ.பலராமன், தளபதி பாஸ்கர், அகரம் கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காசாவிற்கு செல்லும் மனிதாபிமான உதவிகள் அதிகரிக்கப்பட்டதை வரவேற்பதாகவும் ஜோபைடன் தெரிவித்தார்.
    • போரை உடனே முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என சர்வதேச அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

    டெல்அவிவ்:

    இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு இடையே போர் தொடங்கி 32 நாட்கள் ஆகிவிட்டது. ஆனாலும் இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை. ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா நகர் மீது வான், கடல் மற்றும் தரை வழியாக மும்முனை தாக்குதலை இஸ்ரேல் படை தீவிரப்படுத்தி உள்ளது.

    காசாவில் உள்ள மருத்துவமனைகள், அகதிகள் முகாம்கள், தேவாலயங்கள், பொதுமக்கள் வாழ்விடங்கள் உள்ளிட்ட பல இடங்களில் இஸ்ரேல் சரமாரியாக குண்டுகளை வீசி வருகிறது. இந்த அதிரடி தாக்குதலில் கட்டிடங்கள் இடிந்து விழுவதோடு மட்டுமல்லாது அப்பாவி பொது மக்களும் உயிர் இழந்து வருகின்றனர். இஸ்ரேல் தாக்குதலால் காசா நகரமே உருக்குலைந்துவிட்டது.

    இந்த சண்டையில் காசாவில் 4,104 குழந்தைகள் உள்பட 10 ஆயிரத்து 22 பேர் இறந்து விட்டதாக ஹமாஸ் சுகாதார இயக்கம் தெரிவித்துள்ளது. இந்த போரில் அப்பாவி குழந்தைகள், பொதுமக்கள் பலியாகி வருவதால் போரை உடனே நிறுத்த வேண்டும் என பல உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. போரை நிறுத் தக்கோரி அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து வரும் அமெரிக்காவும் போரை உடனே நிறுத்துவதற்கான முயற்சிகளை செய்து வருகிறது. ஆனால் நிரந்தர போர் நிறுத்தத்துக்கு பிடி கொடுக்காமல் இஸ்ரேல் பேசி வருகிறது.

    அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி ஆண்டனி பிளிங்கனும் 2 முறை இஸ்ரேல் சென்று அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை சந்தித்து பேசினார். ஆனாலும் இஸ்ரேல் போரை வைவிட மறுப்பு தெரிவித்து தொடர்ந்து முப்படைகளின் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இதனால் தினமும் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

    இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவசர ஆலோசனை நடத்தியதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. காசாவில் பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறும் வரை காசாவில் தற்காலிக போர் நிறுத்தத்தை இஸ்ரேல் பின்பற்ற வேண்டும் என ஜோபைடன் இஸ்ரேல் பிரதமரிடம் வலியுறுத்தினார்.

    மேலும் இரு தலைவர்களும் ஹமாஸ் அமைப்பினர் பிடியில் இருக்கும் பிணைக் கைதிகளை பாதுகாப்பாக மீட்பது குறித்தும் விவாதித்தனர். பிணைக்கைதிகளாக இருக்கும் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாட்டவர்களை விடுவிப்பதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்துமாறும், காசாவிற்கு செல்லும் மனிதாபிமான உதவிகள் அதிகரிக்கப்பட்டதை வரவேற்பதாகவும் ஜோபைடன் தெரிவித்தார்.

    ஆனால் போர் நிறுத்தத்தை ஏற்க இஸ்ரேல் தொடர்ந்து நிராகரித்து வருகிறது. இது உள்ளூர் போர் அல்ல, உலக அளவிலான போர் என்றும் ஹமாஸ் அமைப்பினர் பிணைக்கைதிகளை விடுவிக்கும் வரை போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அறிவித்துள்ளார். இதனால் போர் தொடரும் சூழ்நிலை நிலவி வருகிறது.

    போர் காரணமாக படுகாயம் அடைந்தவர்களுக்கு போதிய சிகிச்சை அளிக்க வசதி இல்லாமல் தவித்து வருகின்றனர். உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் போரை உடனே முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என சர்வதேச அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

    காசாவில் உச்சக்கட்ட போர் நடந்து வருவதால் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்காக காசா எல்லைப்பகுதிகளில் உடமைகளுடன் திரண்ட வண்ணம் உள்ளனர்.

    போரில் உயிர் இழந்தவர்களுக்காக ஜெருசேலத்தில் இஸ்ரேலியர்கள் மெழுகு வர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.

    • தி.மு.க.வில் கட்சி ரீதியாக 72 மாவட்டங்கள் உள்ளன. இதில் சில மாவட்டத்தில் 4 அல்லது 5 சட்டசபை தொகுதிகள் வரை உள்ளன.
    • அனேகமாக டிசம்பர் மாதத்திற்குள் அதற்கான நடவடிக்கைகளை தலைவர் மேற்கொள்வார் என்று கட்சி நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் ஒவ்வொரு கட்சியும் இப்போதே தேர்தலுக்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

    அந்த வகையில் தி.மு.க.வில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் மண்டல அளவில் நடத்தப்பட்டு வருகிறது. தேர்தல் சமயத்தில் பி.எல்.ஏ.-2 முகவர்கள் மூலமாகத்தான் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படும்.

    இதனால் தகுதியான கட்சி நிர்வாகிகளை பார்த்து அதில் நியமித்துள்ளனர். இவர்களை ஒன்றிய, நகர கழக செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் மாவட்டச் செயலாளர்கள் ஒருங்கிணைத்து வருகின்றன.

    தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

    இந்நிலையில் சில மாவட்டங்களில் கோஷ்டி பிரச்சினை காரணமாக ஒருங்கிணைந்து செயல்படாமல் சில நிர்வாகிகள் மனக்கசப்புடன் இருப்பதாக தலைமைக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

    இதனால் எந்தெந்த மாவட்டங்களில் பிரச்சினை அதிகம் உள்ளதோ அங்கு கட்சி நிர்வாகிகளிடையே சமரசம் ஏற்படுத்தும் நிகழ்வும் நடந்து வருகிறது. கட்சியின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு இந்த சமரச முயற்சியை மேற்கொண்டு வருகிறார்.

    தற்போது பாராளுமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் அ.தி.மு.க.வில் 2 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் உள்ளதை போன்று தி.மு.க. விலும் அதே போன்று மாவட்டங்களை பிரிக்க வேண்டும் என்று கட்சி மேலிடத்தில் சில நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

    தற்போது தி.மு.க.வில் கட்சி ரீதியாக 72 மாவட்டங்கள் உள்ளன. இதில் சில மாவட்டத்தில் 4 அல்லது 5 சட்டசபை தொகுதிகள் வரை உள்ளன.

    தேர்தல் சமயத்தில் ஏதாவது பிரச்சினை என்றால் அந்த தொகுதிக்கு உடனடியாக செல்வதில் சுணக்கம் ஏற்படும் என்றும் இதை தவிர்க்க எல்லையை சுருக்கினால் பணிகள் வேகமாக நடைபெறும் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    இதன் காரணமாக 2 தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர்களை நியமித்தால் அ.தி.மு.க.வுக்கு சரிசமமாக ஈடுகொடுக்க வசதியாக இருக்கும் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக ஏற்கனவே இப்பிரச்சினை தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டாலும் அவர் அதை விரும்பவில்லை. அந்த ஆலோசனையை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறியதாக தெரிகிறது.

    இந்நிலையில் இப்போது மாவட்டங்களை பிரிக்கும் கோரிக்கை மீண்டும் வலியுறுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அனேகமாக டிசம்பர் மாதத்திற்குள் அதற்கான நடவடிக்கைகளை தலைவர் மேற்கொள்வார் என்று கட்சி நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.

    ×