search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 KILLED IN ROAD ACCIDENT"

    • குளித்தலை அருகே இருசக்கர வாகனம் மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் உறவினர்கள் 2 பேர் பலியானார்கள்.
    • திருவிழா பார்க்க சென்றவர்கள் பிணமாக வீடு திரும்பியது அவர்களது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

    கரூர்:

    கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள மணத்தட்டை கிராமம் வள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் மணிவேல் (வயது 35). பேக்கரி கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் கந்தன் (52), கூலித்தொழிலாளி. இருவரும் உறவினர்கள் ஆவர்.

    அவர்களது உறவினர்கள் அருகிலுள்ள வலையப்பட்டியில் வசித்து வருகிறார்கள். தற்போது அங்கு வைகாசி திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக மணிவேல், கந்தன் இருவரும் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றனர். விடிய, விடிய நடைபெற்ற நிகழ்ச்சிகளை பார்த்து விட்டு இன்று அதிகாலை மீண்டும் ஊருக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர்.

    இந்தநிலையில் அவர்கள் கரூர்-திருச்சி புறவழிச்சாலையில் குமாரமங்கலம் அருகே வந்தனர். அப்போது பின்னால் ராமநாதபுரத்தில் இருந்து பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

    இதில் மணிவேல், கந்தன் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். தலையில் பலத்த காயம் அடைந்த கந்தன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதைப்பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த ஆம்புலன்ஸ் வேன் மூலம் மணிவேல் மீட்கப்பட்டு குளித்தலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவிழா பார்க்க சென்றவர்கள் பிணமாக வீடு திரும்பியது அவர்களது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதில் மணிவேலுக்கு இன்னும் திருமணமாவில்லை. கந்தனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் 5 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இதில் ஒரு மகன் மற்றும் மகளுக்கு திருமணமாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.

    ×