search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "1500 மெகாவாட்"

    தமிழ்நாட்டில் வரும் கோடை காலத்தில் அதிகமான மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளதால் 1500 மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. #Summer #ElectricPower
    சென்னை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக உயர் அதிகாரி கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள அனல்மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி போதுமான அளவில் இருப்பு இல்லாததால் அடிக்கடி உற்பத்தி பாதிக்கிறது. தற்போது 3 நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே கைவசம் இருக்கிறது. இதனால் மின் உற்பத்தி சீராக இருப்பதில்லை.

    மேலும் ஏற்கனவே உள்ள சில மின்திட்டங்கள் இன்னும் முடிவுக்கு வராமல் உள்ளன.



    இதை கருத்தில் கொண்டு பார்க்கும்போது வரும் கோடை காலத்தில் 1391 மெகாவாட் மின் பற்றாக்குறை ஏற்படும் என தெரிகிறது.

    இதற்காக 1500 மெகா வாட் மின்சாரத்தை வெளி மாநிலத்தில் இருந்து கொள்முதல் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் டெண்டர் விடும் பணி நடைபெறும்.

    கொள்முதல் செய்யப்பட உள்ள மின்சாரம், அதற்கான விலை நிர்ணயம் குறித்து நிதி கமிட்டியிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதால் அடுத்தக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

    கோடைகால பற்றாக்குறையை சமாளிக்க ஒரு யூனிட் மின்சாரத்தை 5 ரூபாய் 29 காசு என்ற முறையில் 1500 மெகாவாட் மின்சாரத்தை வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    பற்றாக்குறை சமயங்களில் வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்வது வழக்கமான நடைமுறைகளில் ஒன்றுதான்.

    ஏற்கனவே 2016-2017ம் ஆண்டில் 650 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்திருந்தோம். 2017-2018ம் ஆண்டில் 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

    வருகிற கோடை காலத்திலும் அதிக மின்சாரம் பற்றாக்குறை ஏற்படும் என கருதுவதால் வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    கடம்பாறை நீர்மின் உற்பத்தி திட்டத்தில் கிடைத்து வந்த 400 மெகாவாட் மின்சாரம் இப்போது கிடைப்பதில்லை. பல்வேறு காரணங்களால் இது மூடப்பட உள்ளது. இதனால் டிசம்பர்-ஜனவரி மாதங்களில் இருந்து இங்கிருந்து மின்சாரம் வராது.

    பாரத் உத்கல் மின் உற்பத்தி ஒப்பந்தப்படி 500 மெகாவாட் மின்சாரம் வரவேண்டும். ஆனால் அங்கிருந்தும் மின்சாரம் கிடைக்கவில்லை. எண்ணூர் அனல் மின்நிலைய விரிவாக்க திட்டம் இன்னும் முழுமை பெறாததால் அங்கிருந்தும் போதிய மின்சாரம் வரவில்லை.

    கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து சீரான மின்வினியோகம் இல்லாததால் பற்றாக்குறை அதிகம் ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில் 2500 மெகாவாட் மின்சாரம் கிடைக்க வேண்டியதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பற்றாக்குறையை சமாளிக்க வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #Summer #ElectricPower

    ×