search icon
என் மலர்tooltip icon

    ஸ்வீடன்

    • எழுத்தாளர் ஆனி எர்னாக்ஸ் 30க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி உள்ளார்.
    • 2022ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு நாளை அறிவிக்கப்படுகிறது.

    ஸ்டாக்ஹோம்:

    2022ம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் கடந்த திங்கட்கிழமை முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவம், இயற்பியல் மற்றும் வேதியியலுக்கான நோபல் பரிசுகள் கடந்த 3 தினங்களாக அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

    இலக்கியத்துக்கான நோபல் பரிசு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் ஆனி எர்னாக்சுக்கு (வயது 82) வழங்கப்படும் என நோபல் கமிட்டி அறிவித்துள்ளது. எழுத்தாளர் ஆனி எர்னாக்ஸ் 30க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி உள்ளார். பாலினம் மற்றும் மொழி தொடர்பாக சமத்துவத்தை தனது படைப்பில் வலியுறுத்தியதற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

    2022ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு நாளை அறிவிக்கப்படுகிறது. அதன்பின்னர் பொருளாதார விருது அக்டோபர் 10ஆம் தேதி அறிவிக்கப்படும்.

    • ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக்கூறி கைதுசெய்யப்பட்ட இளம்பெண் போலீசார் தாக்கியதில் உயிரிழந்தார்.
    • போலீஸ் தாக்குதலில் இளம்பெண் இறந்ததற்கு எதிர்த்து ஈரான் பெண்கள் தலைமுடியை வெட்டி போராட்டம் நடத்தினர்.

    பெல்ஜியம்:

    இஸ்லாமிய மத சட்டங்களை கடுமையாகப் பின்பற்றி வரும் ஈரானில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, அந்நாட்டின் தெஹ்ரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக்கூறி போலீசார் நடத்திய தாக்குதலில் கோமா நிலைக்குச் சென்ற 22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண் கடந்த மாதம் 17-ம் தேதி உயிரிழந்தார். இளம்பெண் மாஷா உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து ஈரான் முழுவதும் பெண்கள் போராட்டத்தில் குதித்தனர்.

    ஹிஜாப்பை கழற்றி வீசியும், ஹிஜாப்பை தீ வைத்து எரித்தும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் நாட்டின் பல நகரங்களுக்கு பரவிய நிலையில் போராட்டத்தை ஒடுக்க ஈரான் அரசு முயற்சித்து வருகிறது. ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தை ஒடுக்க பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 133 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில், ஈரான் நாட்டில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக சுவீடன் எம்.பி. தனது தலைமுடியை வெட்டிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஈரானிய பெண்களுடனான தனது ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் பாராளுமன்ற விவாதத்தின் போது ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது தலைமுடியை கத்தரித்துக் கொண்டார்.

    அப்போது பேசிய அவர், ஐரோப்பிய ஒன்றியத்தின் குடிமக்கள் அனைவரும் ஈரானில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான அனைத்து வன்முறைகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என கோருகிறோம் என்றார்.

    • மருத்துவம், இயற்பியல் துறைகளை தொடர்ந்து வேதியியல் துறைக்கு நோபல் பரிசு.
    • மூலக்கூறுகளை ஒன்றிணைத்து பொருட்களை உருவாக்கும் ஆராய்ச்சிக்கு நோபல் பரிசு.

    மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான துறைகளில் சர்வதேச சமூகத்திற்கு சிறப்பான பங்களிப்பு செய்த சாதனையாளர்களுக்கான நோபல் பரிசுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.

    அதன்படி 2022ம் ஆண்டிற்கு மருத்துவம், இயற்பியலுக்கான நோபல் பரிசுகள் கடந்த 2 நாட்களாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று வேதியியல் துறைக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

    மூலக்கூறுகளை ஒன்றிணைத்து பொருட்களை உருவாக்குதல்  மற்றும் உயிரியல்பு வேதியியல் வளர்ச்சி குறித்து ஆராய்ச்சிக்காக அமெரிக்காவை சேர்ந்த கரோலின் பெர்டோஸி, டென்மார்க்கை சேர்ந்த மோர்டன் மெல்டல் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த பேரி ஷார்ப்லெஸ் ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கும் நோபல் பரிசு கூட்டாக வழங்கப்பட்டுள்ளது.

    • குவாண்டம் தகவல் அறிவியல் தொடர்பான ஆராய்ச்சிக்கு நோபல் பரிசு.
    • பிரான்ஸ், அமெரிக்கா, ஆஸ்திரியா விஞ்ஞானிகள் கூட்டாக தேர்வு

    மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான துறைகளில் சர்வதேச சமூகத்திற்கு சிறப்பான பங்களிப்பு செய்த சாதனையாளர்களுக்கான நோபல் பரிசுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.

    அதன்படி 2022ம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் நேற்று முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் பற்றிய கண்டுபிடிப்புகளுக்காக சுவீடனை சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர் ஸ்வாண்டே பாபோவிற்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது

    தொடர்ந்து இன்று இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு மூன்று விஞ்ஞானிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். குவாண்டம் தகவல் அறிவியல் தொடர்பான ஆராய்ச்சிக்காக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி அலைன் ஆஸ்பெக்ட், அமெரிக்க விஞ்ஞானி ஜான் எஃப். கிளாசர் மற்றும் ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த அன்டன் ஜீலிங்கர் ஆகியோர் நடப்பாண்டிற்கான நோபல் பரிசுக்கு கூட்டாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    • சுவீடன் பாராளுமன்றத்துக்கு 11-ந்தேதி தேர்தல் நடந்தது.
    • மகதலேனா ஆண்டர்சன் சுவீடன் நாட்டின் முதல் பெண் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஸ்டாக்ஹோம் :

    ஐரோப்பிய நாடுகளில் ஒன்று சுவீடன். அங்கு 349 இடங்களைக் கொண்டுள்ள நாடாளுமன்றத்துக்கு 11-ந் தேதி தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் பிரதமர் மகதலேனா ஆண்டர்சனின் சமூக ஜனநாயக கட்சிக்கும், எதிர்க்கட்சியான சுவீடன் ஜனநாயக கட்சி கூட்டணிக்கும் இடையே நீயா, நானா என்கிற அளவுக்கு பலத்த போட்டி நிலவியது.

    இந்தத் தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு நேற்று முன்தினம் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

    இந்தத் தேர்தலில் ஆளுங்கட்சியான பிரதமர் மகதலேனா ஆண்டர்சனின் சமூக ஜனநாயக கட்சி மயிரிழையில் தோல்வியைத் தழுவியது.

    எதிர்க்கட்சியான சுவீடன் ஜனநாயக கட்சி தலைமையிலான 4 கட்சி கூட்டணி வெற்றி பெற்றது.

    தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கு 175 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், எதிர்க்கட்சி கூட்டணி 176 இடங்களில் வெற்றிவாகை சூடியது.

    ஆளுங்கட்சி 173 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. எதிர்க்கட்சி 3 இடங்களை கூடுதலாகப்பெற்று ஆட்சி அமைக்கிறது.

    இந்தத் தேர்தலில் தோல்வி அடைந்திருப்பதை பிரதமர் மகதலேனா ஆண்டர்சன் ஏற்றுக்கொண்டு விட்டார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், "நாடாளுமன்றத்தில் அவர்களுக்கு ஒன்றல்லது இரண்டு இடங்கள் கூடுதலாக கிடைத்துள்ளன. இது ஒரு மெல்லிய பெரும்பான்மை. ஆனாலும் அது ஒரு பெரும்பான்மைதான" என தெரிவித்தார். அவர் நேற்று தனது ராஜினாமாவை அறிவித்துள்ளார். அவர்தான் அந்த நாட்டின் முதல் பெண் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்ல, அவரது கட்சி கடந்த 2014-ம் ஆண்டு முதல் அங்கு ஆட்சி அதிகாரத்தில் இருந்து வந்தது.

    இந்த தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி பெற்றிருந்தாலும் அது 4 கட்சிகளின் பூரண ஆதரவைப் பெறவில்லை. இதனால் மிதவாதக்கட்சியின் தலைவர் உல்ப் கிறிஸ்டெர்சன் புதிய பிரதமர் ஆகிறார், அவர்தான் புதிய ஆட்சியை அமைப்பார் என ஸ்டாக்ஹோமிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதுபற்றி உல்ப் கிறிஸ்டெர்சன் கூறும்போது, "நான் புதிய அரசை அமைப்பேன். முழு சுவீடனுக்கும், அனைத்து குடிமக்களுக்குமான ஒரு புதிய, நிலையான, வலுவான அரசை உருவாக்குவதற்கு என்னால் முடிந்த அனைத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்" என தெரிவித்தார்.

    • பிரான்சிடம் 290 அணு ஆயுதங்களும், இங்கிலாந்திடம் 225-ம் பாகிஸ்தானிடம் 165-ம் உள்ளன.
    • சீனா, பாகிஸ்தானிடம் கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் அதே அளவு அணு ஆயுதங்கள் உள்ளன.

    ஸ்டாக்ஹோம்:

    சுவீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் இயங்கி வரும் சர்வதேச அமைதி மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அணு ஆயுதங்களை வைத்துள்ள அனைத்து நாடுகளும் தங்களது ஆயுத களஞ்சியத்தை மேம்படுத்தி வருகின்றன. ஒட்டுமொத்தமாக 12,705 அணு ஆயுதங்கள் பல்வேறு நாடுகளிடம் உள்ளது.

    இதில் 90 சதவீத அணு ஆயுதங்கள் ரஷியா (5977), அமெரிக்காவிடம் (5428) உள்ளன. சீனாவில் 350 அணு ஆயுதங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பிரான்சிடம் 290 அணு ஆயுதங்களும், இங்கிலாந்திடம் 225-ம் பாகிஸ்தானிடம் 165-ம் உள்ளன.

    இந்தியாவிடம் கடந்த ஆண்டு ஜனவரி மாத நிலவரப்படி 156 அணு ஆயுதங்கள் இருந்தன. இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தனது அணு ஆயுதங்களை இந்தியா பெருக்கி வருகிறது.

    சீனா, பாகிஸ்தானிடம் கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் அதே அளவு அணு ஆயுதங்கள் உள்ளன. சீனா புதிதாக 300 ஏவுகணைகளை உருவாக்கி வருவது செயற்கைகோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. பாகிஸ்தானும் தனது அணு ஆயுதங்களை அதிகரித்து வருகிறது.

    இவ்வாறு அதில் கூறி உள்ளது.

    இதுகுறித்து சர்வதேச அமைதி மைய நிர்வாகி வில்பிரைட் வான் கூறும்போது, அனைத்து அணு ஆயுத நாடுகளும் தங்களது ஆயுதங்களை அதிகரித்து வருகின்றன அல்லது மேம்படுத்துகின்றன.

    பெரும்பாலும் அணு ஆயுதங்களை நவீனப்படுத்துகின்றன. ராணுவ நடவடிக்கைகளில் அணு ஆயுதங்கள்? பங்கு மிகவும் கவலையளிப்பதாக இருக்கிறது என்றார்.

    இந்தியா அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்தக்கூடாது என்ற அறிவிக்கப்பட்ட கொள்கைகளுக்கு ஏற்ப சிறந்த வினியோக அமைப்புகளுடன் தனது அணு ஆயுதங்களை நவீன மயமாக்குவதில் சீராக முன்னேறி வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×