5வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி: ஒருநாள் தொடரை 3-2 என வென்றது நியூசிலாந்து

முதலில் ஆடிய நியூசிலாந்து 268 ரன்கள் குவித்தது.
hetmyer, rutherford
Published on

நியூசிலாந்துக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நியூசிலாந்து அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. நான்கு போட்டிகள் முடிவில் நியூசிலாந்து 3-1 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 5-வது ஒருநாள் போட்டி பார்படாசில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 268 ரன்கள் குவித்தது. டாம் லாதம் 69 ரன்னும், நிக் கெல்லி 64 ரன்னும், வில் யங் 56 ரன்னும் எடுத்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப், விடல் லாவெஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடியாக ஆடினர். அக்கீம் அகஸ்டே 34 ரன்னும், ஷாய் ஹோப் 39 ரன்னும் எடுத்தனர்.

5வது விக்கெட்டுக்கு இணைந்த ரூதர்போர்ட், ஹெட்மயர் ஜோடி பொறுப்புடன் ஆடி 95 ரன்களை சேர்த்தது. இருவரும் அரை சதம் கடந்தனர்.

இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் 47.3 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 269 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஹெட்மயர் 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இதன்மூலம் நியூசிலாந்து அணி ஒருநாள் தொடரை 3-2 என கைப்பற்றியது.

நியூசிலாந்து சார்பில் ஜேக்கப் டபி, ஜெய்டன் லெனாக்ஸ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

ஆட்ட நாயகன் விருது ஹெட்மயருக்கு அளிக்கப்பட்டது. தொடர் நாயகன் விருது ஜெய்டன் லெனாக்சுக்கு அளிக்கப்பட்டது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com