டி20 கிரிக்கெட்டில் வேற லெவல் சாதனை படைத்த ஜாஸ் பட்லர்

சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக பட்லர் பங்கேற்ற முதல் ஆட்டம் இதுவாகும்.
jos buttler
Published on

மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர், முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் கேப்டன் கீரன் பொல்லார்டை முந்தி, டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

ஓல்ட் டிராஃபோர்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 'தி ஹன்ட்ரட்' தொடரில், வெல்ஷ் ஃபயர் அணிக்கு எதிரான சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆட்டத்தின்போது பட்லர் இந்த சாதனையை நிகழ்த்தினார்.

வெறும் 20 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 51 ரன்கள் விளாசி, 156 ரன்கள் என்ற இலக்கை ஒன்பது விக்கெட்டுகள் மற்றும் 31 பந்துகள் மீதமிருக்க சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி துரத்தி பிடிக்க உதவினார்.

டாப் 3 லிஸ்ட்:

பட்லர் தற்போது 491 டி20 இன்னிங்ஸ்களில் 14,833 ரன்கள் எடுத்துள்ளார். இது, 14,803 ரன்களுடன் இருக்கும் பொல்லார்டை விட 30 ரன்கள் அதிகம். பொல்லார்டின் மேற்கிந்திய தீவுகள் அணியின் சக வீரரான கிறிஸ் கெய்ல், 14,562 ரன்களுடன் தனது கிரிக்கெட் வாழ்க்கையை முடித்து, இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

தனிப்பட்ட காரணங்களால் வழக்கமான கேப்டன் ஏய்டன் மார்க்ரம் தொடரில் இருந்து விலகியதை அடுத்து, சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக பட்லர் பங்கேற்ற முதல் ஆட்டம் இதுவாகும்.

இங்கிலாந்தில் நடைபெற்று கொண்டிருந்த 'தி ஹன்ட்ரட் 2026' தொடரின் பாதியிலேயே தனிப்பட்ட காரணங்களுக்காக தனது சொந்த நாடான தென் ஆப்பிரிக்காவிற்கு திரும்பியதால், மார்க்ரம் மீதமுள்ள போட்டிகளில் பங்கேற்க மாட்டார்.

சமூக வலைதள பதிவு:

"மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆண்கள் அணியின் கேப்டன் ஏய்டன் மார்க்ரம் தனிப்பட்ட காரணங்களுக்காக தென் ஆப்பிரிக்காவுக்குத் திரும்பியுள்ளார் என்பதை அந்த அணி உறுதிப்படுத்துகிறது.

இந்த நேரத்தில் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் உள்ள அனைவரும் ஏய்டனுக்கு எங்களது நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதோடு, இந்த ஆண்டு போட்டியில் அணிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக அவருக்கு நன்றி கூறுகிறோம்," என்று அந்த அணி நிர்வாகம் புதன்கிழமை சமூக வலைதள பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com