அசத்தல் பந்துவீச்சு: 2வது டி20 போட்டியில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது வங்கதேசம்

முதலில் ஆடிய வங்கதேசம் 186 ரன்கள் குவித்தது.
bangladesh
Published on

ஜிம்பாப்வேக்கு எதிரான 2வது டி20 போட்டியில் வங்கதேசம் அணி அபார வெற்றி பெற்றது.

வங்கதேச அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

முதலில் நடந்த ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 85 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி அபார வெற்றி பெற்றது.

அடுத்து நடந்த ஒருநாள் தொடரிலும் 2-1 என ஜிம்பாப்வே அணியே வெற்றி பெற்றது. முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில், ஜிம்பாப்வே, வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி புலவாயோவில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய வங்கதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 186 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஜோடியான சைப் ஹசன், தன்ஜித் ஹசன் தமிம் அதிரடியாக ஆடியது. இருவரும் அரை சதம் கடந்தனர்.

முதல் விக்கெட்டுக்கு 120 ரன்கள் சேர்த்த நிலையில் சைப் ஹசன் 55 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து தன்ஜித் ஹசன் தமிம் 58 ரன்னில் ஆட்டமிழந்தார்.

கடைசி கட்டத்தில் இறங்கிய யாசிர் அலி- சயிபுதின் ஜோடி 19 பந்தில் 45 ரன்களை சேர்த்தது. இதில் சயிபுதின் கடைசி ஓவரில் 4 சிக்சர்களை விளாசினார்.

ஜிம்பாப்வே சார்பில் நகரவா, பிராட் இவான்ஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்கியது. வங்கதேச வீரர்கள் துல்லியமாக பந்து வீசினர். இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன.

அதிகபட்சமாக ரியான் பர்ல் 29 ரன்னும், சிக்கந்தர் ராசா 28 ரன்னும் எடுத்தனர். கடைசி கட்டத்தில் நகரவா, பிராட் இவான்ஸ் ஜோடி 40 ரன்கள் சேர்த்தது. பிராட் இவான்ஸ் 25 ரன்கள் சேர்த்தார்.

இறுதியில், ஜிம்பாப்வே அணி 19.4 ஓவரில் 152 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 34 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் வெற்றி பெற்றதுடன், டி20 தொடரில் 1-1 என சமனிலை வகிக்கிறது.

வங்கதேசம் சார்பில் ரிஷாத் ஹொசைன் 4 விக்கெட்டும், மெஹிதி ஹசன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com