search icon
என் மலர்tooltip icon

    ஸ்பெயின்

    • ஸ்பெயின் நாட்டிற்கு முதல்முறை வந்துள்ளேன். ஆனால், பலமுறை வந்ததைப் போன்ற உணர்வு.
    • தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் ஒரு அமைப்பை உருவாக்கினார்.

    தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள வலியுறுத்தி வருகிறார்.

    அங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதனைத் தொடர்ந்து, 'ஸ்பெயின் தமிழர்களுடன் முதல்வர்' எனும் நிகழ்ச்சி நேற்றிரவு அங்கு நடைபெற்றது. ஸ்பெயின் நாட்டில் வாழும் தமிழர்கள் திரண்டிருந்த அந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துரையாடினார். 

    தமிழ்நாட்டில் இருக்கிறோமா அல்லது வெளிநாட்டில் இருக்கிறோமா என்று எனக்கு இப்போது சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.

    ஸ்பெயின் நாட்டிற்கு இப்போதுதான் நான் முதல்முறை வருகிறேன். ஆனால், பலமுறை வந்ததைப் போன்ற உணர்வைத் தரும் வரவேற்பை நீங்கள் அளித்திருக்கிறீர்கள். கடல் கடந்து வந்து வெளிநாட்டில் வாழும் உங்களையெல்லாம் சந்திப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

    நீங்கள் பிறந்த உங்களுடைய தாய் மண்ணான தமிழ்நாட்டிற்கு உங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும், செய்து கொண்டிருக்கிறீர்கள். செய்யப் போகிறீர்கள். செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

    அயல்நாட்டில் இருக்கக் கூடியவர்களுக்காகவே துணை நிற்க வேண்டும்- உதவி புரிய வேண்டும்- அவர்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள்- ஆபத்து ஏற்பட்டால், அதற்குத் தமிழ்நாடு துணை நிற்க வேண்டும் என்ற அடிப்படையில்தான், தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் ஒரு அமைப்பை உருவாக்கினார்.

    ஆனால் சில நாட்களுக்குள்ளாக ஆட்சி கலைக்கப்பட்டுவிட்டது. அதனால் அது செயல்படாமல் போய்விட்டது. இப்போது மீண்டும் தலைவர் கலைஞர் வழியில் நடைபோடும் நமது திராவிட மாடல் ஆட்சி உருவாகி இருக்கிறது. தலைவர் கலைஞர் என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தாரோ, அதனை நாங்கள் செய்ய காத்திருக்கிறோம். தயாராக இருக்கிறோம்.

    அண்மையில் கூட, வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்களைச் சென்னைக்கு வரவழைத்து, அவர்களுடன் கலந்து பேசி. இதுவரை அவர்களை இரண்டு மூன்று முறை அழைத்துக் கூட்டம் போட்டு கலந்து பேசி, அவர்களது பிரச்சினை களை எல்லாம் தீர்த்து வைத்திருக்கிறோம். 

    உலக முதலீட்டாளர் மாநாட்டை அண்மையில் வெற்றிகரமாக நடத்தி, அதன் மூலமாகத் தமிழ்நாட் டிற்குப் பெருமையைத் தேடித் தந்திருக்கிறோம்.

    அது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல. இந்தியாவிற்கு மட்டுமல்ல. இந்தியாவைக் கடந்து, இன்றைக்குக் கடல் கடந்து வாழ்ந்து கொண்டி ருக்கும் உங்க ளுக்கும் அது பெருமைதான்.

    பல்வேறு வெளிநாடு களுக்குச் சென்று இருந்தா லும், இந்த ஸ்பெயின் நாட்டிற்கு வந்திருப்பதில் நான் உள்ள படியே மகிழ்ச்சி அடைகி றேன். பெருமைப் படுகிறேன். என் மீது ஒவ்வொருவரும் பாசமும் நேசமும் அன்பும் கொண்டு அளித்த அந்த உபசரிப்பு என்னை நெகிழ வைத்து இருக்கிறது. உங்கள் அனை வருக்கும் என்னுடைய அன்பான வாழ்த்துக்களை இந்த நேரத்தில் தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, முதல்-அமைச்சரின் செயலாளர் டாக்டர் உமாநாத் ஸ்பெ யின் நாட்டிற்கான இந்தியத் தூதர் தினேஷ் பட்நாயக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • ரோக்கா நிறுவனம் 400 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்காக உறுதி அளித்துள்ளது.
    • முதலீட்டிற்கு உகந்த இடமாக தமிழ்நாடு இருக்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துரைத்தார்.

    தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, அரசுமுறை பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு தொழில்துறை குழுமங்கள் மற்றும் முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் 29-ந்தேதியன்று தொழில் முதலீட்டு மாநாட்டில் கலந்துரையாடினார்.

    அதன் தொடர்ச்சியாக, நேற்று (30-ந்தேதி) ஸ்பெயின் நாட்டில் உள்ள முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினார்கள். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் நாட்டில் முதலீடுகள் செய்திட வலியுறுத்தினார்.

    ஆக்சியானா நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் ரபேல் மேத்யோ, மேனூல் மன்ஜன் வில்டா (சி.இ.ஓ, வாட்டர் டிவிஷன்) ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்கள்.


    இச்சந்திப்பின்போது, காற்றாலை மின் உற்பத்தியிலும், நீர் சுத்திகரிப்பு, நீர் மறுசுழற்சியிலும் இந்தியாவின் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருவது குறித்தும், இத்துறையில் பல பெரும் முக்கிய நிறுவனங்கள் ஏற்கனவே தமிழ்நாட்டில் செயல்பட்டு வருவது குறித்தும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீடுகளுக்கான தனிக்கொள்கை ஒன்றையும் வகுத்து தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகின்றது என்றும், எனவே இத்துறைகளில் சர்வதேச அளவில் முன்னிலை வகிக்கும் நிறுவனமாகிய ஆக்சியோனா நிறுவனத்தின் முதலீட்டிற்கு உகந்த இடமாக தமிழ்நாடு இருக்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துரைத்தார்.

    இத்துறையின் முதலீட்டு வாய்ப்புகள் பற்றி தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விரிவாக விளக்கினார். இந்த கலந்தாலோசனையின் முடிவில் தமிழ்நாட்டில் இத்துறைகளில் முதலீடுகள் செய்ய ஆக்சியானா நிறுவனம் ஆர்வம் தெரிவித்துள்ளது.

    அதனைத் தொடர்ந்து, பீங்கான் மற்றும் வீட்டுக் கட்டுமான பொருட்களின் உற்பத்தியில் உலக அளவில் முன்னணி நிறுவனமாக திகழும் ரோக்கா நிறுவனத்தின் சர்வதேச இயக்குநர் கார்லஸ் விளாகியூஸ், இந்திய இயக்குநர் நிர்மல் குமார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்கள்.


    இச்சந்திப்பின்போது, ரோக்கா நிறுவனம், தற்போது தமிழ்நாட்டில் பெருந்துறையிலும், ராணிப்பேட்டையிலும் செயல்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் இந்த நிறுவனத்தின் விற்பனையை மேலும் உயர்த்திடவும், சர்வதேச ஏற்றுமதிக்காகவும், இதன் விரிவாக்கத்தையும் புதிய தொழில் அலகுகளையும் தமிழ்நாட்டில் அமைத்திட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா இத்துறையில் முதலீடு செய்வதற்கும், ஏற்றுமதி செய்வதற்கும் தமிழ்நாட்டில் நிலவி வரும் சாதகமான சூழல் பற்றி விளக்கினார்.

    இந்த கூட்டத்தின் முடிவில், ரோக்கா நிறுவனம் 400 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்காக உறுதி அளித்துள்ளது. அதன்படி, ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் புதிய குழாய்கள் மற்றும் இணைப்புகளை உற்பத்தி செய்யும் புதிய தொழிற்சாலையை நிறுவிடவும், ராணிப்பேட்டையிலும் பெருந்துறையிலும் தற்போது செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்யவும் ரோக்கா நிறுவனம் முன் வந்துள்ளது. இதனால் 200 நபர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்.

    இச்சந்திப்புகளின்போது, கேய்டன்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் வே.விஷ்ணு உடனிருந்தார்.

    இதனை அடுத்து, வரும் நாட்களில் மேலும் பல முன்னணி நிறுவனங்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலீட்டு ஆலோசனைகளை மேற் கொள்ள உள்ளார்.

    • தொழிற்சாலைகளில் பயன்படுத்தக் கூடிய தொழில் நுட்பங்கள் எவ்வாறு உள்ளது என்பது குறித்தும் கேட்டறிந்தார்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் அதிகாரிகளும் உடன் சென்றிருந்தனர்.

    தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறை பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 8 நாள் பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளார்.

    அந்நாட்டின் தலைநகர் மெட்ரிட் நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

    தமிழ்நாட்டில் தொழில் துவங்க உகந்த சூழல் நிலவுவதாகவும், தொழில் தொடங்க முன்வரும் நிறுவனங்களுக்கு அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று கூறினார்.

    இந்த மாநாட்டில் பங்கேற்ற முதலீட்டாளர்கள் தொழில் அதிபர்களுடன் கலந்துரையாடினார்.

    இந்த நிலையில் இன்று ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார். அந்த தொழிற்சாலைகளில் பயன்படுத்தக் கூடிய தொழில் நுட்பங்கள் எவ்வாறு உள்ளது என்பது குறித்தும் கேட்டறிந்தார். அவருக்கு அதிகாரிகள் தொழில் நுட்பங்கள் பற்றி விளக்கி கூறினார்கள்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் அதிகாரிகளும் உடன் சென்றிருந்தனர்.

    • மிகப் பெரும் தொழில் நிறுவனங்களான, ஹுண்டாய், டாடா போன்ற நிறுவனங்கள், தங்கள் முதலீடுகளை பன்மடங்கு அதிகரித்துள்ளன.
    • தமிழ்நாட்டில் தொழில்களைத் துவங்க வரும் முதலீட்டாளர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தமிழ்நாடு அரசு காத்திருக்கிறது.

    ஸ்பெயின்:

    ஸ்பெயின் நாடு சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைநகர் மேட்ரிட்டில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசினார். அப்போது தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார். அவர் பேச்சு விவரம் வருமாறு:-

    உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் இருக்கும் தமிழ்நாடு என்ற மிக முக்கியமான மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சராக நான் இருக்கிறேன்.

    எங்களது கட்சி 75 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. ஆறு முறை அந்த மாநிலத்தில் ஆட்சிக்கு வந்துள்ளது. திருவள்ளுவரை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர் தமிழ் மொழியில்தான் திருக்குறளை எழுதினார். அவரது திருக்குறள் உலகின் 200 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அத்தகைய பெருமையும் பாரம்பரியமும் கொண்ட மாநிலத்தில் இருந்து நான் வந்துள்ளேன்.

    கால்பந்து விளையாட்டில் புகழ் பெற்ற நாடு ஸ்பெயின். ஸ்பெயினை நான் இன்னும் சுற்றிப் பார்க்கவில்லை. நான் பார்த்த வரையில் கலைகளின் நாடாகக் காட்சியளிக்கிறது. உங்களது கலை உணர்வு ஒவ்வொரு கட்டிடத்திலும், தெருக்களிலும், ஒவ்வொரு மூலையிலும் உள்ளது.

    ஐரோப்பிய ஒன்றியத்திலேயே, நான்காவது பெரிய பொருளாதார நாடாக ஸ்பெயின் விளங்குகிறது. எட்டு 'பார்ச்சூன் 500' நிறுவனங்கள் மற்றும் 20 'பார்ச்சூன் 2000' நிறுவனங்களும், ஸ்பெயின் நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகின்றன. தமிழ்நாட்டுடன் வணிக உறவு மேற்கொள்ளும் ஐரோப்பிய நாடுகளில், 6-வது பெரிய நாடாக ஸ்பெயின் உள்ளது.

    ஐரோப்பிய ஒன்றியத்தில், நான்காவது பெரிய பொருளாதாரமாக ஸ்பெயின் திகழ்வது போல, இந்தியாவின் இரண்டாவது பொருளாதாரமாக தமிழ்நாடு விளங்குகிறது. இந்த இரண்டு பொருளாதாரங்களுக்கும் நிறைய தொடர்புகள் உள்ளன.

    கெஸ்டாம்ப், கமேசா, ரோக்கா, உர்பேசர், இன்கி டீம், ஆம்ப்போ, பபேசா, ஆர்பினாக்ஸ், கோர்லான் ஆகிய முக்கிய ஸ்பானிஷ் நிறுவனங்கள் எங்கள் நாட்டில் தற்போது செயல்பட்டு வருகின்றன. இந்தப் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்திடும் விதமாக, உங்களுடைய முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்வதற்காக நான் இங்கு வந்துள்ளேன்.

    இதற்கு முன்பு ஐக்கிய அரபு நாடுகள், ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குச் சென்று முதலீடுகளை ஈர்த்துள்ளேன். தொடர்ச்சியாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கும் செல்ல இருக்கிறேன். கடந்த ஜனவரி 7, 8 ஆகிய நாட்களில் நாங்கள் நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், ஜப்பான், கொரியா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி மற்றும் டென்மார்க் ஆகிய 9 நாடுகள் எங்களுடன் பங்குதாரர் நாடுகளாக இணைந்து இருந்தன.

    மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் தைவான் பொருளாதார மற்றும் கலாச்சார நிறுவனங்களும் எங்களுடன் இணைந்து செயல்பட்டுள்ளார்கள். 30 நாடுகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் எங்கள் மாநாட்டுக்கு வந்திருந்தார்கள்.

    * மிகப் பெரும் தொழில் நிறுவனங்களான, ஹுண்டாய், டாடா போன்ற நிறுவனங்கள், தங்கள் முதலீடுகளை பன்மடங்கு அதிகரித்துள்ளன.

    * 130க்கும் மேற்பட்ட "ஃபார்ச்சூன் 500" நிறுவனங்கள், தமிழ்நாட்டில் தமது திட்டங்களை நிறுவியுள்ளதே தமிழ்நாட்டில் முதலீட்டுக்கான சிறந்த சூழல் அமைந்துள்ளதற்கு சான்று. இதன் தொடர்ச்சியாக ஸ்பெயின் நிறுவனங்களும் தமிழ்நாட்டை நோக்கி வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    வாகனங்கள், குறிப்பாக மின்வாகனங்கள், மின்னணுக் கருவிகள், தோல் பொருள்கள், தோல் அல்லாத காலணிகள், ஆடைகள் போன்றவற்றின் உற்பத்தியிலும், தகவல் தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உயர் மருத்துவ சேவைகள் போன்ற பல்வேறு துறைகளிலும் இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்ந்து வருகின்றது.

    இந்தத் துறைகளிலும், வான்வெளி மற்றும் பாதுகாப்பு, உயிர் அறிவியல் மற்றும் உயிரி தொழில் நுட்பம், மருந்துகள், உணவு பதப்படுத்துதல், உப்புநீக்கம் மற்றும் நீர் சுத்திகரிப்பு ஆகிய துறைகளில் உங்களின் மேலான முதலீடுகளை மேற் கொள்ளுமாறு, ஸ்பெயின் முதலீட்டாளர்களை நாங் கள் கேட்டுக் கொள்கிறேன்.

    தமிழ்நாட்டில் தொழில்களைத் துவங்க வரும் முதலீட்டாளர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தமிழ்நாடு அரசு காத்திருக்கிறது. பல்வேறு தொழில்களை மேற்கொள்ள உகந்த சூழலையும் திறன்மிக்க மனித வளத்தையும் உறுதி செய்வதோடு, பல்வேறு தொழில் கொள்கைளின் கீழ் உயர் சலுகைகளையும் அளிக்க உள்ளோம். இவை குறித்து மாண்புமிகு தொழில்துறை அமைச்சரும், அலுவலகர்களும் விரிவாக உங்களுக்கு எடுத்துரைக்க உள்ளார்கள். எனவே தங்களது முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்ள வேண்டும் என்று மீண்டும் வேண்டி கேட்டுக்கொண்டு விடைபெறுகின்றேன்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    • சென்னையில் இருந்து நேற்று முன்தினம் புறப்பட்ட முதலமைச்சர் துபாய் வழியாக ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மேட்ரிட் சென்றடைந்தார்.
    • முதலமைச்சருடன் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தொழில் துறை செயலாளர் அருண்ராய் உள்ளிட்டோரும் சென்றுள்ளனர்.

    ஸ்பெயின்:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 8 நாள் பயணமாக வெளிநாடு சென்றுள்ளார். சென்னையில் இருந்து நேற்று முன்தினம் புறப்பட்ட அவர் துபாய் வழியாக ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மேட்ரிட் சென்றடைந்தார்.

    அவருடன் மனைவி துர்கா ஸ்டாலின், தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தொழில் துறை செயலாளர் அருண்ராய் உள்ளிட்டோரும் சென்று உள்ளனர். 

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விமான நிலையத்தில் ஸ்பெயின் நாட்டுக்கான இந்திய தூதர் கே.பட்நாயக் மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் வரவேற்றனர்.

    இதை தொடர்ந்து இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருக்கிறார்.

    • 1-0 எனும் கோல் கணக்கில் ஸ்பெயின், இங்கிலாந்தை வீழ்த்தியது
    • "நான் எதிர்பாராத நேரத்தில் அவர் முத்தமிட்டார்" என ஹெர்மோசோ நீதிமன்றத்தில் கூறினார்

    கடந்த 2023 ஆகஸ்ட் 20 அன்று, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உலக கோப்பை பெண்கள் கால்பந்து போட்டியின் இறுதி போட்டி நடைபெற்றது. இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் இப்போட்டியில் மோதின.

    பரபரப்பான ஆட்டத்தின் இறுதியில், ஸ்பெயின் 1-0 எனும் கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

    உலக கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் பரிசு பெறும் நிகழ்ச்சியில் ஸ்பெயின் வீராங்கனைகள் பங்கேற்ற போது, அந்நாட்டின் கால்பந்து விளையாட்டு சங்க தலைவர் லூயிஸ் ரூபியாலஸ் (Luis Rubiales) ஜென்னி ஹெர்மோசோ (Jenni Hermoso) எனும் வீராங்கனையை கட்டியணைத்து முத்தமிட்டார்.

    தகாத முறையில் நடந்து கொண்ட ரூபியாலஸின் நடவடிக்கை பெரிதும் விமர்சிக்கப்பட்டது.

    இதையடுத்து, "நான் நடந்து கொண்ட விதம் தவறுதான். அதை ஒப்பு கொள்கிறேன். ஆனால் அதிகபட்ச மகிழ்ச்சியில் எந்த உள்நோக்கமும் இல்லாமல் அவ்வாறு நடந்து கொண்டேன்" என ரூபியாலஸ் தெரிவித்தார். தொடர்ந்து, அவருக்கு எதிராக எழுந்த கண்டனங்களால், தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    "எனக்கு ரூபியாலஸ் நடந்து கொண்ட விதம் பிடிக்கவில்லை" என ஹெர்மோசோ அப்போது கருத்து தெரிவித்தார்.

    பெரும் சர்ச்சையை உண்டாக்கிய இந்நிகழ்வு குறித்து ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட் (Madrid) நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதில் ஹெர்மோசோ, தனது கருத்துக்களை பதிவு செய்தார். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் அவரிடம் விசாரணை நடைபெற்றது.

    "என் சம்மதத்துடன் அந்த நிகழ்வு நடைபெறவில்லை. நான் எதிர்பாராத நேரத்தில் ரூபியாலஸ் அவ்வாறு நடந்து கொண்டார்" என ஹெர்மோசோ விசாரணையில் தெரிவித்தார்.

    பரிசு வழங்கும் நிகழ்ச்சியின் போது அங்கிருந்த கண்காணிப்பு கேமிரா வீடியோக்களை நீதிமன்றம் ஆய்வு செய்து வருகிறது.

    ஸ்பெயின் சட்டப்படி ஒருவரின் சம்மதமில்லாமல் அவருக்கு முத்தமிடுவது பாலியல் குற்றமாக கருதப்படும். எனவே, இப்போது நடைபெறும் விசாரணை முடிவில்தான் இவ்வழக்கில் ரூபியாலிஸ் பாலியல் குற்றம் புரிந்தவராக விசாரிக்கப்படுவாரா என தெரிய வரும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மொரோக்கோ நாட்டில் இருந்து படகுகள் மூலம் 32 அகதிகள் புலம்பெயர முயன்றுள்ளனர்.
    • ஜனவரி 1 மற்றும் நவம்பர் 15 க்கு இடையில் 13,000 க்கும் அதிகமான புலம்பெயர்ந்தோர் வருகை.

    வட ஆப்பிரிக்காவில் உள்ள மொரோக்கோ நாட்டை சேர்ந்த 4 அகதிகளின் சடலம் ஸ்பெயின் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.

    மொரோக்கோ மற்றும் அல்ஜீரியாவிலிருந்து படகுகளில் வெளியேறும் அகதிகள் மேற்கு மத்தியதரைக் கடல் வழியாக, ஐரோப்பாவிற்குள் குடியேற முக்கிய நுழைவுப் புள்ளிகளில் ஒன்றாக ஸ்பெயின் நாட்டில் நுழைகின்றனர்.

    அந்த வகையில், மொரோக்கோ நாட்டில் இருந்து படகுகள் மூலம் 32 அகதிகள் புலம்பெயர முயன்றுள்ளனர். இதில், 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்க கூடும் என்றும் அவர்களின் சடலங்கள் கரை ஒதுங்கி இருக்கக்கூடும் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதேபோல், பயணத்தில் தப்பிய புலம்பெயர்ந்தவர்களில் நான்கு பேர் மயக்க நிலையில் காணப்பட்டனர் என்றும் அவர்களில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர்.

    இந்த விவகாரம் தொடர்பாக, ஸ்பெயின் போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.

    இதுதொடர்பாக, ஸ்பெயினின் உள்துறை அமைச்சகத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, ஜனவரி 1 மற்றும் நவம்பர் 15 க்கு இடையில் 13,000 க்கும் அதிகமான புலம்பெயர்ந்தோர் ஸ்பெயின் நிலப்பரப்பு அல்லது பலேரிக் தீவிற்கு வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளன.

    • ஸ்பெயின் நாட்டின் தென்கிழக்கு நகரமான முர்சியாவில் இரவு நேர கேளிக்கை விடுதி ஒன்று செயல்படுகிறது.
    • தீ மளமளவென அருகில் இருந்த கட்டிடங்களுக்கும் வேகமாக பரவியது.

    மாட்ரிட்:

    ஸ்பெயின் நாட்டின் தென்கிழக்கு நகரமான முர்சியாவில் இரவு நேர கேளிக்கை விடுதி ஒன்று செயல்படுகிறது. வார இறுதியை முன்னிட்டு இங்கு பலர் கூடியிருந்தனர். அப்போது அந்த விடுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ மளமளவென அருகில் இருந்த கட்டிடங்களுக்கும் வேகமாக பரவியது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

    இதுகுறித்த தகவலின்பேரில் அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க தண்ணீரை பீய்ச்சியடித்தனர். சில மணி நேர போராட்டத்துக்கு பின்னர் இந்த தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும் இந்த தீ விபத்தில் 13 பேர் பலியாகினர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    • ஒரு நல்ல ஜாக்கிங் உங்களுக்கு ஒரு நாளுக்கான ஆற்றலை வழங்கும்.
    • ஜாக்கிங் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி 12 நாள் பயணமாக ஸ்பெயின் சென்றுள்ளார். அங்குள்ள மாட்ரிட் பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் அவர் ஜாக்கிங் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அதில் மம்தா பானர்ஜி சேலை அணிந்து கொண்டு ஜாக்கிங் மற்றும் வாக்கிங் செல்கிறார். இது தொடர்பான வீடியோவை அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதனுடன் அவர் வெளியிட்டுள்ள பதிவில், புத்துணர்ச்சியூட்டும் காலை. ஒரு நல்ல ஜாக்கிங் உங்களுக்கு ஒரு நாளுக்கான ஆற்றலை வழங்கும். ஆரோக்கியமாக இருங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

    அவரது கை மணிக்கட்டில் ஸ்மார்ட் வாட்ச் அணிந்து கொண்டு வெள்ளை நிற பருத்தி சேலை மற்றும் சாதாரண செருப்புடன் ஜாக்கிங் செல்லும் காட்சிகள் வீடியோவில் உள்ளது. அவருடன் அதிகாரிகள் சிலரும் ஜாக்கிங் சென்றனர்.

    • மாண்ட மெலோ பகுதியில் 7 பேர் தண்டவாளத்தை கடக்க முயன்றனர்.
    • படுகாயம் அடைந்த மற்ற 3 பேருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பார்சிலோனியா:

    ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா பிராந்தியத்தில் கட்டலோனியா பகுதியில் உள்ள மாண்ட்மெலோ பகுதியில் நேற்று 7 பேர் தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் என்ஜின் அவர்கள் மீது பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பலியானார்கள். ஒருவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். படுகாயம் அடைந்த மற்ற 3 பேருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • திருவிழாவிற்கான டிக்கெட்டுகள் 12 யூரோக்களில் ($13) தொடங்குகிறது.
    • சுற்றுலாப் பயணிகள் உட்பட சுமார் 15,000 பேர் தக்காளியுடன் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர்.

    பெயினின் கிழக்கு நகரமான புனோலில் ஆண்டுதோறும் "டொமடினா" என்கிற தக்காளி திருவிழா நடைபெறுகிறது. அதாவது, ஒருவர் மீது ஒருவர் பழுத்த தக்காளிகளை தூக்கி எறிந்து விளையாடும் திருவிழாதான் அது. இதற்காக சுமார் 120 டன் தக்காளி பயன்படுத்தப்பட்டுள்ளன.

    இந்த திருவிழாவில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உட்பட சுமார் 15,000 பேர் தக்காளியுடன் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர்.

     தக்காளி திருவிழாவால் தெருக்கள், வீடுகள் மற்றும் பங்கேற்பாளர்கள் என அனைவரும் தக்காளி கூழில் நினைந்தனர்.

    இந்த திருவிழாவிற்கான டிக்கெட்டுகள் 12 யூரோக்களில் ($13) தொடங்குகிறது. காசு கொடுத்து தக்காளியை வீண் செய்யும் இந்த வினோத திருவிழாவைக் கண்டு இந்திய மக்களுக்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.

    காரணம், இந்தியாவில் தக்காளியின் விலை அதிகரித்து காணும் நிலையில், ஸ்பெயினில் தக்காளியை வீண் அடிப்பதற்காகவே ஒரு வினோத திருவிழா நடத்துவது நமக்கு ஆச்சரியமான விஷயம்தான்.

    • சுமார் 11000 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள மரங்கள், செடி, கொடிகள் கருகின.
    • ஸ்பெயினில் கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 500 முறை காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.

    மாட்ரிட்:

    ஸ்பெயின் நாட்டின் கேனரி தீவுகளில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. நேற்று காலையில் பன்டகோர்டா மாவட்டத்தில் முதலில் தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் பிற பகுதிகளுக்கும் தீ வேகமாக பரவியதால் மக்கள் பீதியடைந்தனர். தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர். விமானப்படை விமானம் மூலம் தண்ணீர் பீய்ச்சியடிக்கப்படுகிறது. எனினும் தீ கட்டுக்குள் வரவில்லை. சுமார் 11000 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள மரங்கள், செடி, கொடிகள் கருகின.

    தீப்பற்றிய பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றப்படுகின்றனா. லா பால்மா தீவில் இருந்து மட்டும் 2500 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அவசரகால சேவைகள் தங்கள் பணிகளை எளிதில் செய்து முடிக்க ஏதுவாக மீட்பு பணிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளித்து வெளியேறும்படி லா பால்மா கவுன்சிலின் தலைவரும், தீவின் முக்கிய அதிகாரியுமான செர்ஜியோ ரோட்ரிக்ஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

    தீ மிக விரைவாக பரவியதாக கேனரி தீவுகளின் பிராந்திய அரசாங்க தலைவர் பெர்னாண்டோ கிளாவிஜோ கூறினார். காற்று, பருவநிலை மற்றும் வெப்ப அலைகள் காரணமாக இந்த அளவுக்கு தீ பரவி வருவதாக அவர் தெரிவித்தார்.

    ஐரோப்பிய காட்டுதீ தகவல் அமைப்பின் தரவுகளின்படி, ஸ்பெயினில் கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 500 முறை காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதில் 300,000 ஹெக்டேர்களுக்கு அதிகமான நிலம் நாசமானது. இது ஐரோப்பாவின் மிக மோசமான பாதிப்பாக கருதப்படுகிறது.

    இந்த ஆண்டு இதுவரை காட்டுத்தீயில் 66,000 ஹெக்டேர் நிலம் அழிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×