search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள வ.உ.சி. பள்ளியில் பசுமை வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது.
    • பசுமை வாக்குச்சாவடியை மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கு இன்று வாக்குப்பதிவு நடந்தது.

    புதுவை மாநிலத்தில் மொத்தம் 967 வாக்குச்சாடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இதில் முழுமையாக மகளிர் மட்டும் செயல்படும் வாக்குச்சாவடி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டிருந்தனர்.

    புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள வ.உ.சி. பள்ளியில் பசுமை வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. பள்ளியின் நுழைவுவாயிலில் தென்னை ஓலைகள், வாழை மரங்களால் வரவேற்பு தோரணங்கள், வளைவுகள் அமைக்கப்பட்டிருந்தது. கம்பு, மக்காச்சோளம், பனை ஓலைகளால் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தது.

    மேலும் நுண்கலை ஆசிரியர் கிருஷ்ணா மற்றும் மாணவர்கள் இயற்கை பொருட்களில் தயாரிக்கப்பட்ட பொம்மைகள், ஹேமலதா என்ற பழம் பொருள் சேகரிப்பாளரின், பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பித்தளை பொருட்களின் கண்காட்சியும் வைக்கப்பட்டிருந்தது.

    வாக்களிக்க வந்த வாக்காளர்களுக்கு பதநீர், மோர், இளநீர், கம்பு, கேழ்வரகு கூழ் வழங்கப்பட்டது. பசுமை வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த மக்கள் இவற்றை கண்டுகளித்தபடி வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை செலுத்தினர்.

    முன்னதாக பசுமை வாக்குச்சாவடியை மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். துணை தாசில்தார் செந்தில்குமார் கூறும்போது, 1886-ம் ஆண்டு கட்டப்பட்ட மிகவும் பழமையான, பாரம்பரியமான பள்ளியில் பசுமை வாக்குச்சாவடி அமைத்துள்ளோம்.

    ராஜ்பவன் தொகுதியில் படித்த வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். இங்கு ஆண்டுதோறும் குறைந்த அளவில் வாக்குப்பதிவு நடக்கிறது.

    இதற்காக வாக்குப்பதிவு எண்ணிக்கையை அதிகரிக்க பசுமை வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

    • தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது
    • நாளை தேர்தல் நடைபெறவுள்ளதால், நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வந்தது

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளன. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

    தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், அ.தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் காண்கின்றன.

    நாளை தேர்தல் நடைபெறவுள்ளதால், நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வந்தது.

    இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வாக்குச்சாவடிகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. அதன்படி புதுச்சேரியின் பாகூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவத்தில் நுழைவு வாயிலில் அலங்காரம் செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இத்தகைய அலங்காரம் பாஜகவிற்கு உதவிகரமாக இருக்கும் என திமுக, கம்யூனிஸ்ட் கட்சியினர் தேர்தல் அதிகாரிகளிடம் புகாரளித்தனர். பின்னர் தாமரை அலங்காரங்களை தேர்தல் அதிகாரிகள் அகற்றினர். 

    • புதுச்சேரி லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் மெயின் ரோட்டில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது.
    • தேர்தல் துறை அதிகாரி சண்முகவேல் தலைமையிலான குழுவினர் சென்று பைக்கில் நின்று கொண்டிருந்த 2 பேரிடம் சோதனையிட்டனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி லாஸ்பேட்டை தாகூர் நகர் 11-வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் புரந்தரதாசன். இவர் அரசியல் இயக்கம் ஒன்றை நடத்தி வருகிறார்.

    3 மாடி கொண்ட வீட்டின் கீழ் தளத்தில் வசித்து வரும் இவரது வீட்டுக்குச் சென்ற தேர்தல் பறக்கும் படையினர் அங்கு அதிரடியாக சோதனையிட்டனர்.

    அப்போது அங்கு கட்டுக்கட்டாக பணம் இருந்ததை கண்டு பிடித்தனர். இது குறித்து அவர்கள் தெரிவித்த தகவலின் பேரில் ஒரு பெண் அதிகாரி தலைமையில் 6 பேர் கொண்ட வருமான வரித்துறை மற்றும் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் புரந்தரதாசன் வீட்டில் இருந்த ரூ. 64 லட்சத்து 60 ஆயிரம் ரொக்கம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த தொகை கடந்த ஆண்டு நிலம் விற்பனை செய்ததின் மூலம் கிடைத்ததாக அங்கிருந்த புரந்தரதாசன் தெரிவித்தார். மேலும் அதற்கான சில ஆவணங்களையும் காண்பித்தார்.

    ஆனால் அதனை அதிகாரிகள் ஏற்க மறுத்தனர். ரூ.10 லட்சத்துக்கு மேல் பதுக்கி வைத்திருக்க கூடாது என்று கூறி பணம் எண்ணும் எந்திரத்தை கொண்டு வந்து பணத்தை எண்ணினர். பின்னர் ரூ. 64 லட்சத்து 60 ஆயிரத்தை வருமான வரி அதிகாரிகள் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர்.

    இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதற்கிடையே புதுச்சேரி லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் மெயின் ரோட்டில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் தேர்தல் துறை அதிகாரி சண்முகவேல் தலைமையிலான குழுவினர் அங்கு சென்று பைக்கில் நின்று கொண்டிருந்த 2 பேரிடம் சோதனையிட்டனர்.

    அவர்கள் 500 ரூபாய் நோட்டுகள் ரொக்கமாக ரூ.25 ஆயிரம் வைத்திருந்தனர். அவர்களை லாஸ்பேட்டை புறக்காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

    விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த சக்திகுமார் மற்றும் தருமன் என்பது தெரியவந்தது. இருவரும் பா.ஜனதாவிற்கு வாக்களிக்க வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் வைத்திருந்த ரூ.25 ஆயிரம் பணத்தை தேர்தல் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுபோல் புதுச்சேரியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த அரசியல் கட்சியை சேர்ந்த மேலும் 2 பேரை தேர்தல் பறக்கும் படையினர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காங்கிரஸ் பிரமுகர் பணம் பட்டுவாடா செய்ய பதுக்கி வைத்திருப்பதாக வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல்.
    • காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் வருமானவரித்துறை நடத்திய சோதனையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அருகே கிருமாம்பாக்கம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் மோகன் தாஸ். காங்கிரஸ் பிரமுகரான இவர், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமியின் தீவிர ஆதரவாளர் ஆவார்.

    இவர் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக ஏம்பலம் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்தநிலையில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு காங்கிரஸ் பிரமுகர் மோகன் தாஸ் பணம் பட்டுவாடா செய்ய பதுக்கி வைத்திருப்பதாக வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து கிருமாம்பாக்கத்தில் உள்ள மோகன்தாஸ் வீட்டுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் 5 பேர் கொண்ட குழுவினர் காரில் வந்தனர். அவர்கள், மோகன் தாஸ் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்தனர்.

    அப்போது அங்கு மோகன் தாஸ் இல்லை. அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அவரது தாயார் மட்டும் வீட்டில் இருந்தார். அவரிடம், சோதனையிட வந்திருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதை அறிந்த மோகன் தாஸ் வீட்டுக்கு விரைந்து வந்தார். பின்னர் அவரது முன்னிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் வீடு முழுவதும் தீவிரமாக சோதனை செய்தனர். மேலும் அவரிடம் தொழில் தொடர்பான ஆவணங்களின் விவரங்களை கேட்டறிந்தனர். அதன் பின் வருமானவரித்துறை அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

    இந்த சோதனையின் முடிவில் பணமோ, ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை என கூறப்படுகிறது. காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் வருமானவரித்துறை நடத்திய இந்த திடீர் சோதனையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    கடந்த சில நாட்களுக்கு முன் வைத்திலிங்கம் எம்.பி.யின் உறவினர் வீடுகளில் வருமானவரி அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

    • வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க கூடுதலாக 48 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.
    • பணம், பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருவதால் வாக்காளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இன்னும் 2 தினங்களே உள்ள நிலையில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்வதால் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதனிடையே வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க கூடுதலாக 48 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட மண்ணாடிப்பட்டு, பாகூர், காமராஜர் நகர், திருபுவனை, உருளையன்பேட்டை, நெல்லித்தோப்பு, ஏம்பலம், மணவெளி உள்ளிட்ட சட்டசபை தொகுதிகளில் வாக்காளர்களுக்கு ரகசியமாக பணம் பட்டுவாடா செய்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதேபோல் காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பிராந்தியங்களிலும் பணம், பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருவதால் வாக்காளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
    • பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சுட்டெரிக்கும் வெயிலில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தனர்.

    புதுச்சேரி:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

    தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், அ.தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் காண்கின்றன.

    தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்கள் உள்ளன பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சுட்டெரிக்கும் வெயிலில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தனர். நூதன முறையிலும் வாக்குகள் சேகரித்து வருகின்றனர்.

    இந்நிலையில் புதுச்சேரி தொகுதியில் மாஸ்கோ என்பவர் வாளி சின்னத்தில் தேர்தலில் களம் காண்கிறார். சுயேட்சை வேட்பாளரான மாஸ்கோ பிச்சை கேட்டு வாக்கு சேகரித்து வருவதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.



    • காயமடைந்த டாக்டர் நவீனை மீட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.
    • டாக்டர்களின் போராட்டம் காரணமாக அரசு ஆஸ்பத்திரியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பாவாணர் நகரை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 40). இவரது மகன் மகேஷ் (17) கடந்த 12-ந் தேதி மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி மகேஷ் படுகாயம் அடைந்தான். இதற்காக அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான்.

    இந்த நிலையில் வினோத்குமார் நேற்று இரவு தனது மகனை பார்ப்பதற்காக அரசு ஆஸ்பத்திரிக்கு குடிபோதையில் வந்தார். இதனை தட்டிக்கேட்ட அவரது மனைவியையும், சகோதரியையும் அவர் தாக்கினார். அப்போது அங்கு இருந்த டாக்டர்கள், ஊழியர்கள் அவரை அங்கிருந்து வெளியேற்றினர்.

    போதையில் வெளியே இருந்த வினோத்குமார், ஆத்திரத்தில் கையில் கத்தியை வைத்துக் கொண்டு நின்றார். அப்போது ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்த டாக்டர் நவீன் (28) என்பவரின் கழுத்தில் திடீரென வெட்டினார்.

    இதில் நவீன் பலத்த காயம் அடைந்தார். இதை பார்த்த நோயாளிகள், ஆஸ்பத்திரி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் காயமடைந்த டாக்டர் நவீனை மீட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையில் டாக்டரை கத்தியால் வெட்டிய வினோத்குமாரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து பெரிய கடை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். டாக்டர் வெட்டப்பட்டதை அறிந்த மற்ற டாக்டர்கள் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள், அரசு ஆஸ்பத்திரியில், தங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. எனவே உரியபாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பணியை புறக்கணித்து திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிகிச்சை பெற வந்த நோயாளிகள் அவதியடைந்தனர்.

    இது பற்றிய தகவல் அறிந்த வைத்திலிங்கம் எம்.பி. சுகாதாரத்துறை செயலாளர் முத்தம்மா, இயக்குனர் ஸ்ரீராமுலு, பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், உரிய பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பின் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் ஊழியர்கள் போராட்டத்தை கை விட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். டாக்டர்களின் போராட்டம் காரணமாக அரசு ஆஸ்பத்திரியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    • காயம் அடைந்த அந்தோணிராஜ், காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
    • புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோஷை தேடிவருகின்றனர்.

    காரைக்கால்:

    காரைக்கால் இந்திரா நகரை சேர்ந்தவர் அந்தோணிராஜ் (வயது 38). இவரது மனைவி அனுசியா. இவர்களுக்கு அந்தோஸ் (9), மித்ரா (2) என்ற 2 குழந்தைகள் உள்ளது. அந்தோணிராஜ் கூலி வேலை செய்து வருகிறார்.

    அந்தோணிராஜின் குழந்தை அந்தோஸ் அருகில் உள்ள மார்க்கெட் கமிட்டி திடலில் சக குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, குழந்தைகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த அந்தோணிராஜ், ஏன் உங்களுக்குள் சண்டை போட்டுகொள்கிறீர்கள் என சமாதானம் செய்துள்ளார்.

    அப்போது அங்கு வந்த மஸ்தான் பள்ளி வீதியை சேர்ந்த சந்தோஷ், நீ யாருடா என ஆபாசமாக திட்டி, கையில் வைத்திருந்த கிரிக்கெட் பேட்டால் அந்தோணிராஜின் தலையில் அடித்துவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டதாக கூறப்படுகிறது.

    இதில், காயம் அடைந்த அந்தோணிராஜ், காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோஷை தேடிவருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜனநாயகம், அரசியலமைப்பு, அடிப்படை உரிமைகள் ஆகியவற்றை காக்க மக்களிடம் கோருகிறோம்.
    • பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிகள் முற்றிலும் தோல்வியடைந்துள்ளன.

    புதுச்சேரி:

    புதுவைக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வந்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்க்கே நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் நமது உரிமைகள் காக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அரசியலமைப்பில் நமக்கு தந்துள்ள உரிமைகளை நிலைநாட்ட தேர்தல் மிக முக்கியமானது. இந்திய மக்களும் இதை உணரத் தொடங்கியுள்ளனர்.

    ஐ.டி., அமலாக்கத்துறை, சி.பி.ஐ. உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகள் பலவீனப்படுத்தப்படுகின்றன. அரசியலமைப்பை மதிக்காதோரை இந்த அமைப்புகளின் தலைவராக்குகிறார்கள்.

    ஒத்துழைப்பு தராதோரை அழுத்தம் தந்து ராஜினாமா செய்ய வைத்து வேண்டியோரை நியமித்து, பிரதமர் மோடி இந்த அமைப்புகளை தங்கள் தேவைக்கு பயன்படுத்துகிறார். அதனை அமித்ஷா செயல்படுத்துகிறார்.

    ஜனநாயகம், அரசியலமைப்பு, அடிப்படை உரிமைகள் ஆகியவற்றை காக்க மக்களிடம் கோருகிறோம். மோடி தனது அரசை பற்றி பேசாமல் தன்னை பற்றி மட்டுமே முன்னிறுத்துவதால் அவரை விமர்சிக்கிறோம். இது தனிமனித விமர்சனமாக பார்க்கக்கூடாது.

    பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிகள் முற்றிலும் தோல்வியடைந்துள்ளன. வேலைவாய்ப்பு, வெளிநாட்டு கள்ளப்பணம் மீட்பு உள்ளிட்டவை உதாரணங்கள். இதுவரை தந்த எந்த வாக்குறுதிகளையும் மோடி நிறைவேற்றவில்லை.

    பிரசாரத்துக்கு வரும் மோடி தொடர்ந்து காங்கிரசையும் ஆட்சியில் தற்போது இல்லாத காந்தி குடும்பத்தினரை விமர்சிக்கிறார். அது காங்கிரஸ் மீதான பயத்தை வெளிப்படுத்துகிறது. காங்கிரசை அழிக்க முயற்சிக்கிறார்.

    தமிழகம், புதுச்சேரியில் இந்தியா கூட்டணி தி.மு.க. தலைமையில் அனைத்து இடங்களிலும் வெல்லும். கருத்து கணிப்புகள் விஷயத்தில் கருத்து கூற விரும்பவில்லை. பல ஏஜென்சிகள் பலதரப்பட்ட கருத்துகளை தெரிவிக்கின்றனர். நாங்கள் மோடி பிரதமராவதை தடுத்து நிறுத்தி நல்ல எண்ணிக்கையில் இடங்களை இந்தியா கூட்டணி பெறுவோம்.

    ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியமில்லாதது. சட்டப்பேரவை தேர்தல், மக்களவைத்தேர்தல் ஆகியவை ஒன்றுக்கொன்று வித்தியாசமானது. புதுச்சேரி, தமிழ்நாடு அல்ல லட்சக்கணக்கானோர் வருவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. கூட்டம் நிரம்பியுள்ளதா என்பதை விட எங்கள் கருத்தை பகிர்வதே முக்கியம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • புதுச்சேரி மாநில அந்தஸ்து விவகாரம் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெறவில்லை.
    • இந்திய கூட்டணி வெற்றி பெற்ற பிறகு நாங்கள் வாக்குறுதியை நிறைவேற்றுவோம்.

    புதுச்சேரியில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று பிரசாரம் மேற்கொண்டார். புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு கட்சியின் தேசிய தலைவர் ஆதரவு திரட்டினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி தீவிரம் காட்டி வருகிறது.

    நாங்கள் எதைச் சொன்னாலும், வாக்குறுதி அளித்தாலும் அதைச் செய்வோம். ஆனால் பிரதமர் மோடி செய்ய மாட்டார். காங்கிரஸ், ராகுல் காந்தி, சோனியா காந்தியால் மட்டுமே செய்ய முடியும்.

    புதுச்சேரி மாநில அந்தஸ்து விவகாரம் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெறவில்லை.

    நேற்று வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை புதுச்சேரி மக்களின் அபிலாஷைகளை அப்பட்டமாக புறக்கணிப்பதாக உள்ளது.

    காங்கிரஸ் ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. 2024 தேர்தலில் இந்திய கூட்டணி வெற்றி பெற்ற பிறகு நாங்கள் வாக்குறுதி அளித்ததை நிறைவேற்றுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வாக்காளர் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி புதுவை மாநில விலங்கான அணில் வேடமணிந்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
    • வாக்காளர்கள் அனைவரும் வாக்குப்பதிவு நாளன்று தவறாமல் வாக்களிக்குமாறு மாணவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி தேர்தல் துறை 100 சதவீதம் வாக்குபதிவு மற்றும் நேர்மையான வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது .

    ஆடல்-பாடல் இதில் ஒரு பகுதியாக புதுச்சேரி காந்தி திடல், ரெயில் நிலையம், அண்ணாசாலை மற்றும் கார்கில் நினைவிடம் உட்பட 7 இடங்களில் பாடலுடன் நடன குழு மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    இதில் வாக்காளர் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி புதுவை மாநில விலங்கான அணில் வேடமணிந்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் முறையான வாக்காளர் கல்வி மற்றும் தேர்தலில் பங்கெடுத்தல் திட்ட மாநில அதிகாரி டாக்டர் கோவிந்தசாமி, நாட்டு நலப்பணி திட்ட அதிகாரி சதீஷ்குமார் மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இதேபோல் மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகம் சார்பில், புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் சமுதாய கல்லூரி மாணவ- மாணவிகள், ஆங்கிலத்தில் பிளாஷ் மாப் என்றழைக்கப்படும் மின்னல் நடனம் கடற்கரை சாலை தலைமைச் செயலகம் எதிரே நடைபெற்றது.


    30 மாணவ- மாணவிகள் ஆடிய மின்னல் நடனத்தை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர். சமுதாய கல்லூரியின் முதல்வர் லலிதா ராமகிருஷ்ணன், வாக்காளர் கல்வி முதன்மை அதிகாரி லதா பார்த்திபன் மற்றும் பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். உடற்பயிற்சி கல்வி இயக்குனர் ஜெகதீஸ்வரியின் மேற்பார்வையில் நடனம் அமைக்கப்பட்டிருந்தது. வாக்காளர் கல்வி கருத்துக்கள் அடங்கிய பாடல், வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்திய வண்ணம் பாடல் முடிந்தது.

    வாக்காளர்கள் அனைவரும் வாக்குப்பதிவு நாளன்று தவறாமல் வாக்களிக்குமாறு மாணவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

    புதுவை அரசு ஆயுஷ் மருத்துவ துறையுடன் இணைந்து வெங்கட்டா நகர் பூங்காவில், நடைபயிற்சிக்கு வந்த பொதுமக்களுக்கு, நல்ல உடல் வளம் அமைய உதவும் யோகாப் பயிற்சிகள் செய்து காண்பிக்கப்பட்டது.

    அத்துடன் வாக்காளர் விழிப்புணர்வு கருத்துக்களும் சொல்லப்பட்டு, விழிப்புணர்வு கருத்துக்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.

    ஆயுஷ் மருத்துவத் துறையின், யோகா மற்றும் இயற்கை சிகிச்சை பிரிவின் டாக்டர் வெங்கடேஸ்வரன் யோகாவின் சிறப்புக்களை எடுத்துரைத்தார். காலை நடைபயிற்சி செய்திட வந்த பொதுமக்கள் பலர் ஆர்வமாக கலந்து கொண்டு சந்தேகங்கள் கேட்டு விளக்கம் பெற்றனர். 

    • எங்கள் ஆட்சியில் முழுமையாக எல்லா திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம்.
    • அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளோம். பிரசாரத்தின்போது பெரிய குறை என மக்கள் எதையும் கூறவில்லை.

    புதுச்சேரி:

    புதுவை பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதா சார்பில் அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிடுகிறார்.

    அமைச்சர் நமச்சிவாயத்தை ஆதரித்து முதல்-அமைச்சர் ரங்கசாமி தொகுதிதோறும் திறந்த ஜீப்பில் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.

    காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியங்களில் பிரசாரத்தை முடித்துவிட்டு புதுச்சேரியில் தீவிர பிரசாரத்தை தொடங்கியுள்ள முதல்-அமைச்சர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    எங்கள் ஆட்சியில் முழுமையாக எல்லா திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம். அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளோம். பிரசாரத்தின்போது பெரிய குறை என மக்கள் எதையும் கூறவில்லை. இலவச அரிசி கொடுங்கள் என எல்லா இடத்திலும் தாய்மார்கள் கேட்டுள்ளனர்.

    என்.ஆர். காங்கிரஸ் அரசின் கொள்கை மாநில அந்தஸ்து புதுவைக்கு வேண்டும் என்பதுதான். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதற்கான அனைத்து முயற்சியையும் எங்கள் அரசு எடுக்கும்.

    எங்கள் அரசின் செயல்பாடுகள் புதுவை மக்களுக்கு திருப்தியளிக்கும் வகையில் உள்ளது. எனவே தேர்தலுக்காக நாங்கள் புதிதாக எந்த வியூகமும் அமைக்க வேண்டியதில்லை. புதுவை அரசு சொன்னதை செய்து கொண்டிருக்கிறது. மத்தியில் எந்த ஆட்சி உள்ளதோ அந்த ஆட்சியின் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் புதுவை மாநிலத்துக்கு பயனுள்ளதாக அமையும் என்பது எனது ஆணித்தரமான எண்ணம்.

    எனவேதான் பா.ஜனதா வேட்பாளருக்கு கூட்டணியில் தொகுதியை வழங்கினோம். பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு எனது ஆட்சியை கலைத்து விடுவார்கள் என்று அ.தி.மு.க. உள்பட எதிர்க்கட்சியினர் பிரசாரம் செய்து வருகின்றனர். ஆனால் எனது ஆட்சிக்கு எந்த சிக்கலும் இல்லை. இன்னும் 2 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி நடக்கும். மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றுவோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×