search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு
    X
    திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு

    திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு

    திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு ஆற்றில் நீராடி பெண்கள் புது தாலி மாற்றி சிறப்பு வழிபாடு செய்தனர்.
    ஆடிப்பெருக்கை முன்னிட்டு திண்டுக்கல் கோட்டை குளக்கரையில் வாழைஇலை விரித்து, அதில் மஞ்சளால் உருவாக்கிய கங்காதேவி, காதோலை கருகமணி, தேங்காய், பூ, பழங்கள், வெல்லம் கலந்த அரிசி, திருமாங்கல்ய கயிறு ஆகியவற்றை வைத்து, எலுமிச்சம்பழ விளக்கேற்றி சிறப்பு வழிபாடு நடத்தினர்.

    அதன்பிறகு சுமங்கலி பெண்கள் ஒருவருக் கொருவர் புதிய திருமாங்கல்ய சரட்டை கட்டிக்கொண்டனர். ஆண்கள், திருமணமாகாத பெண்கள் கைகளில் மஞ்சள் கயிற்றை கட்டிக்கொண்டு, அம்மனுக்கு படைத்த பிரசாத பொருட்களை அனைவருக்கும் வழங்கினர். அதேபோல் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில், மலையடிவாரம் பத்திரகாளியம்மன் கோவில், பழனிரோடு செல்லாண் டியம்மன் கோவில் உள்ளிட்ட அம்மன் கோவில்களிலும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

    தேனி மாவட்டம் வைகை அணையில் சுற்று வட்டாரக் கிராமங்களான வைகை கரட்டுப் பட்டி, பெருமாள் கோயில்பட்டி, வில்லானிபுரம், வைகை புதூர், க.விலக்கு ஆகிய பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகின்றனர்.

    ஆடிப்பெருக்கை முன்னிட்டு மீனவர்களும், வியாபாரிகளும் சிறப்பு பூஜை செய்து, பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். வைகை அணை நீர்ப் பிடிப்பு பகுதியைச் சுற்றியுள்ள கிராம விவசாயிகள், மழை பெய்ய வேண்டியும், விளை பொருள்களுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டியும் வைகை ஆற்றில் உள்ள ஈஸ்வரன் கோயிலுக்கு சிறப்பு பூஜை நடத்தி வழிபட்டனர்.

    கம்பம் கவுமாரியம்மன் கோயிலில் ஆடிப் பெருக்கை முன்னிட்டு காலையில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. கவுமாரியம்மன் ராஜ அலங் காரத்தில் அலங்கரிக் கப்பட்டு பக்தர்க ளுக்கு காட்சியளித்தார். அம்மனுக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. பெண்கள் மாவிளக்கு எடுத்தும், கூழ் ஊற்றியும், பொங்கல் வைத்தும் நேர்த்திக் கடன் செலுத்தி வழிபட்டனர்.

    இதே போல் சாமாண்டி புரத்தில் உள்ள சாமாண்டி யம்மன் கோயில், உத்தமபுரம் மந்தையம்மன், பூங்காதிடலில் உள்ள பகவதியம்மன், ஓடைக்கரைத்தெருவில் உள்ள பத்ரகாளியம்மன், கோம்பை சாலையில் உள்ள நாககன்னியம்மன், பாரதியார் நகர் நாகம்மாள் புற்றுக்கோயில், கூடலூர் முத்தாலம்மன், லோயர்கேம்ப் பகவதியம்மன், சுருளியாறு மின் நிலையம் முத்துமாரியம்மன், காமயகவுண்டன்பட்டியில் உள்ள கருமாரியம்மன் ஆகிய கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

    இதேபோல் தேவதானப் பட்டி தலையாற்றில் நீராடிய பக்தர்கள் அம்மன் கோயிலில் நெய் தீபமேற்றி பொங்கல் வைத்து ஏராளமானோர் வழிபட்டனர். தொடர்ந்து அருகில் உள்ள பழமையான நாகப்புற்றுக் கோயிலில் பால், முட்டை வைத்து வழிபட்டனர். நெய் தீபமேற்றியும், அபிஷேகம் செய்தும் வழிபட்டனர். வீடு கட்டும் வரம் வேண்டி பலரும் கற்களை அடுக்கி வைத்தனர்.

    வத்தலக்குண்டு பதினெட் டாம்படி கருப்பசாமி, அன்னகாமாட்சி அம்மன், மாசி பெரியண்ண சாமி, லாட சன்னாசி, மதுரை வீரன் சுவாமி, வீராயி அம்மாள் கோவிலில் ஆடி பெருந்திருவிழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து மஞ்சளாறு ஆற்றிற்கு சென்று ஸ்ரீ காமாட்சி அம்மன் சக்தி கரகம் அலங்காரம் செய்தல் மற்றும் கருப்பசாமி மதுரை வீரன் சாமிக்கு அலங்காரம் செய்து வழிபாடு நடந்தது. பின்னர் கருப்பசாமி அருள் வந்து பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். இதன் பிறகு பரமசிவம் நகரில் உள்ள 18-ம் படி சுவாமி சன்னதிக்கு சாமி வந்தடைந்தது. விழாவில் திரளானோர் கலந்து கொண் டனர்.

    வத்தலக்குண்டு ஊர் கால சாமி கோவில் தெருவில் உள்ள மதுரைவீரன் சாமி பதினெட்டாம் ஆண்டு ஆடிப்பெருக்கு விழா நடைபெற்றது. இதையொட்டி பூசாரி நாராயணன் அரிவாள் மீது ஏறி பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார்.

    தொடர்ந்து சுவாமி நகர்வலம் வந்து கோவிலை வந்தடைந்தார். பின்னர் கிடாவெட்டி சிறப்பு அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    உத்தமபாளையத்தில் அமைந்துள்ள ஞானாம்பிகை சமேத காளகஸ்தீசுவரர் கோவிலில் இன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கோவில் முன்பு உள்ள முல்லைபெரியாற்றில் நீராடி வந்த புதுமண தம்பதிகள் புதிய மாங்கல்யம் மாற்றிக்கொண்டனர். மேலும் ஆற்றின் கரையோரம் மங்கல பொருட்கள் வைத்து தங்கள் வாழ்வு வளம்பெற இறைவனை மனமுருக வேண்டிக்கொண்டனர்.
    Next Story
    ×