search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாங்காடு காமாட்சி அம்மன்கோவில் கும்பாபிஷேகம் - ஆயிரக்கணக்கில் பக்தர்கள் தரிசனம்
    X

    மாங்காடு காமாட்சி அம்மன்கோவில் கும்பாபிஷேகம் - ஆயிரக்கணக்கில் பக்தர்கள் தரிசனம்

    சென்னை அருகே உள்ள மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா இன்று காலை நடந்தது. கும்பாபிஷேக விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    பூந்தமல்லி:

    சென்னை மாங்காடு பகுதியில் புகழ் பெற்ற காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இதற்கு முன்பு 2001-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதையடுத்து தற்போது கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக கோயில் ஏழுநிலை ராஜ கோபுரம் பழுதுபார்த்து பஞ்ச வர்ணம் தீட்டும் பணி ரூ.17 லட்சம் செலவில் நடந்தது.பக்தர்கள் வசதிக்கேற்றவாறு ஒழுங்கு வரிசை மண்டபம் ரூ.64 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளது.

    மூலவர் காமாட்சி அம்மன் விமானம், தபசு காமாட்சி விமானம், வரசித்தி விநாயகர் விமானம் பஞ்சவர்ணம் தீட்டும் பணி ரூ.4 லட்சம் செலவிலும் காமாட்சி அம்மன் கோயில் சுற்றுப்பிரகார மண்டபம் வர்ணம் தீட்டும் பணி ரூ.18 லட்சம் செலவிலும், கோவில் அலுவலகம், கட்டண சீட்டுக்கள் விற்பனை நிலையம், திருமடப்பள்ளி, தங்கத் தேர் நிறுத்தம் அறை உள்ளிட்ட பணிகள் ரூ.16 லட்சம் செலவிலும் நடைபெற்றது. மொத்தம் சுமார் ரூ. 1 கோடியே 41 லட்சம் செலவில் கோவில் பழுது பார்த்து புதுப்பிக்கப்பட்டுள்ளது.

    மேலும் 5 செப்பு கலசங்களும், தபசு காமாட்சி அம்மன் விமானத்தில் 3 செப்பு கலசங்களும், வரசித்தி விநாயகர் விமானத்தில் ஒரு கலசமும் சுமார் 24 லட்சம் செலவில் உபயதாரர்கள் மூலம் தங்க ரேக் ஒட்டப்பட்டு நிறுவப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை 8 மணிக்கு நடந்தது. கும்பாபிஷேக விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய இடங்களில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர். அவர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

    இன்று காலை 11 மணியளவில் பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    கும்பாபிஷேக விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ். ராமசந்திரன், அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் ந.திருமகள், எம்.எல்.ஏ. கே.பழனி, முன்னாள் எம்.எல்.ஏ. வாலாஜா பாத் பா.கணேசன், நடிகர் மயில்சாமி, கோவில் தர்மகர்த்தா மணலி ஆர். சீனிவாசன், கோவில் துணை ஆணையர் இரா.வான்மதி, எழிச்சூர் ராமசந்திரன், எம்.பிரேம்சேகர், என்.வி. செல்வம், டி.எஸ். ராஜா, எஸ்.எம். சுந்தர்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். பக்தர்கள் நெரிசலை தவிர்க்க போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து 3 நாட்கள் உபயதாரர்கள் சார்பில் 3 வேளையும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    Next Story
    ×