search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பழனி கோவிலில் இன்று மாலை சூரசம்ஹாரம்
    X

    பழனி கோவிலில் இன்று மாலை சூரசம்ஹாரம்

    பழனியில் இன்று மாலை சூரசம்ஹாரம் நடைபெறுவதையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
    பழனியில் கந்தசஷ்டி விழா கடந்த 31-ந் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், 4.30 மணிக்கு விளா பூஜை, படையல் நைவேத்தியம் ஆகியவை நடைபெற்றது.

    மதியம் 12 மணிக்கு சண்முகார்ச்சனையும், 1.30 மணிக்கு சாயரட்சை பூஜையும் நடைபெற்றது. சூரசம்ஹாரத்திற்காக சின்னகுமாரசாமி அசுரர்களை வதம் புரியும் வகையில் மதியம் 3 மணிக்கு மலைக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறும். அதன் பிறகு நடை சாத்தப்படும்.

    பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து முத்துக்குமாரசாமி, வள்ளி, தெய்வானையுடன் மயில் வாகனத்தில் மலையடிவார மண்டபத்தில் எழுந்தருள்வார். பின்னர் திரு ஆவினன்குடி கோவிலில் பராசக்தி வேலுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மாலை 6 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது. தாரகாசூரன், பானுகோபன், சிங்கமுகசூரன், சூரபத்மன் ஆகிய அசுரர்களை வதம் செய்தபிறகு வெற்றிவிழா நடத்தப்படும்.

    சூரசம்ஹாரத்தை முன்னிட்டு தங்க ரத புறப்பாடு இன்று நடைபெறாது. மேலும் மதியம் நடை சாத்தப்படுவதால் மின் இழுவை ரெயிலும் இயக்கப்படாது. நாளை முதல் வழக்கம்போல் விஞ்ச் இயக்கப்படும்.

    சூரசம்ஹாரத்தை காண பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் பழனி கோவிலுக்கு காவடி எடுத்து வந்த வண்ணம் உள்ளனர். இதனால் கிரி வீதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு விரதம் மேற்கொண்ட பக்தர்கள் இன்று மலைக்கோவிலில் வாழைத்தண்டு மூலம் அன்னம் தயார் செய்து அதனை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்கின்றனர்.  நாளை திருக்கல்யாணத்துடன் கந்தசஷ்டி விழா நிறைவு பெறுகிறது.

    Next Story
    ×