சமூக ஊடக தினம் - ஒரு சமூகவியல் பார்வை!

சமூக ஊடகம் என்ற ஒற்றைப் பொருண்மையில் பார்ப்பதை விட ஒட்டுமொத்த சமூக நிலையை வைத்து பார்த்தால் புரிந்துகொள்ள முடியும்.
சமூக ஊடக தினம் - ஒரு சமூகவியல் பார்வை!
Published on

இன்று உலகில் தண்ணீர், உறைவிடம், உணவுக்கு அடுத்தபடியாக சமூக ஊடகம் மாறியுள்ளது. சமூகத்தின் அடித்தட்டில் இருந்து மேல் வர்க்கம் வரை சமூக ஊடகம் அதனளவில் பல பரிமாணங்களை எடுத்துள்ளது.

சமூக ஊடகம், தனிமனிதர்களின் சமூக வாழ்வில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது என்பதில் ஐயமில்லை. இந்த 21ஆம் நூற்றாண்டில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுவதில் அவை பெரும்பங்காற்றி வருகின்றன.

தங்களின் கருத்துக்களை தணிக்கையின்றி வெளிப்படுத்தவும், தங்கள் இருப்பை உலகிற்கு எடுத்துரைக்கவும் பிரதான ஊடகமாக சமூக ஊடகங்களை மக்கள் பாவிக்கின்றனர்.

தனிப்பட்ட வாழ்க்கை, தொழில் வாழ்க்கை என எங்கும் நீக்கமற சமூக ஊடகங்கள் மனித வாழ்வில் வசதியாக இடம் பிடித்துக்கொண்டன.

இது முற்றிலும் ஒரு சுதந்திரமான சுயாதீனமான உண்மையான வெளிப்பாட்டு மற்றும் அறிதலுக்கான தளமா என்று கேட்டால் அதில் மாற்றுக்கருத்து வருவது இயல்பு.

மனிதர்களின் சமூக வாழ்வை புரட்சிப்படுத்திய சமூக ஊடகங்கள் மறைமுகமாக அவற்றின் மீது தாக்கம் செலுத்தும் விடயமாகவும் உருவெடுத்து நிற்கின்றன. தாக்கம் என்பதை விட ஆதிக்கம் என்ற சொல் இன்னும் பொருத்தமாக இருக்கலாம்.

இதை சமூக ஊடகம் என்ற ஒற்றைப் பொருண்மையில் பார்ப்பதை விட ஒட்டுமொத்த சமூக நிலையை வைத்து பார்த்தால் புரிந்துகொள்ள முடியும்.

கடந்த நூற்றாண்டு வரை அடிமை முறையும், சர்வாதிகாரங்களும் உலகெங்கிலும் வெளிப்படையாக நிலவி வந்தன. பயத்தை வைத்து ஆட்சியாளர்ககளும் ஆதிக்கவாதிகளும் மக்களை ஆண்டனர். ஆளும் வர்க்கம் எந்த அச்சமும் குற்றவுணர்வும் இன்றி அட்டூழியங்களை செய்து வந்தது.

அதிகாரத்தில் இருப்பவர்கள் சொல்லும் பொய் புரட்டுகளை பெரும் பணக்காரர்கள் வசமிருந்த பத்திரிகைகள் அப்படியே வாந்தி எடுத்தன.

தனது யூத இனப்படுகொலை ஒரு உன்னதமான செயல் என ஹிட்லர் பெரும்பான்மை ஜெர்மனியர்களை நம்ப வைத்ததும் அப்படியே.

வெகுமக்களின் எழுச்சி இந்த அடிமைமுறை, சர்வாதிகாரத்தை உடைத்து போட்டது உண்மை தான். ஜனநாயகம் மலர்ந்ததும் உண்மை தான். அதிகார வர்க்கம் தன் தன்மைகள் மீது மக்கள் அதிகாரம் என்று சாயமடித்துக்கொண்டதும் உண்மைதான். அதன் தன்மை மட்டுமே மாறியுள்ளதே தவிர அதன் நோக்கங்கள் இன்னும் அப்படியே உள்ளன.

தன் நோக்கங்களை பூர்த்தி செய்யும் வழிமுறைகளை காலத்திற்கேற்ப அது மாற்றிக்கொண்டுள்ளது. மக்களின் புரிதலோடு விளையாட தொடங்கியுள்ளது. இது மறைமுக அடிமை முறை எனலாம். வெகு மக்களின் சிந்தனை முறையில் நிகழ்த்தும் தந்திரம் இது.

மனிதகுல வரலாற்றில் சுதந்திர மனிதன் என்று சொல்லும் அளவு இன்னும் ஒருவரும் அனைத்து தளைகளில் இருந்தும் விடுபடவில்லை என்பதே கசப்பான உண்மை.

சமூக ஊடகங்கள் மனித இயல்புகளின் தாக்கம் செலுத்தும் முக்கிய காரணிகளாக தற்காலத்தில் உருவெடுத்துள்ளன. மனித சிந்தனை முறை மாற்றம் கண்டு வருகிறது. ஆனால் அதை எவ்வழியில் பயன்படுத்துகிறோம் என்ற கேள்விக்கான பதிலில் தான் உண்மை அடங்கியுள்ளது.

பொய் தகவல்கள், தவறான சித்தரிப்புகள் என சமூக ஊடகங்கள் பல ஆபத்துகளை உள்ளடக்கியுள்ளன. இது சமூகத்தின் கூட்டு மனப்பான்மையில் பெரும் தாக்கத்தை செலுத்தத் துவங்கியுள்ளது.

தகவல் பரிமாற்றம் என்பதையும் தாண்டி மக்களின் உள்ளங்கையில் உலகத்தை கொண்டு சேர்கின்றன சமூக ஊடகங்கள்.

இன்றளவில் திரைப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் தொடங்கி அரசியல்வாதிகள் வரை தங்கள் வாழ்வை பொதுபடுத்தும் போக்கு அதிகம் காணப்படுகிறது. அது அவர்களின் வெளிப்பபாட்டு களம் என்பதிலிருந்து விளம்பர களம் என்பதாக மாறிவரும் போக்கும் ஆராயப்பட வேண்டியது.

சாமானிய மக்கள் விஷயத்தை பொறுத்தவரை மக்கள் தெரிந்துகொள்ள விரும்புவது சமூக ஊடகங்களின் வழி அறியக்கிடைப்பது ஒருபுறமிருக்க, தேவையற்றவை திணிக்கபடும் போக்கும் புரையோடியுள்ளது.

தங்களை வெளிப்படுத்த மக்களுக்கு சமூக ஊடகங்கள் உதவும் அதேவேளை அந்த வெளிப்பாடு தன்னுணர்வானதா அல்லது பொதுப் போக்கு என்ற போர்வையில் விதைக்கப்பட்ட மடச் சிந்தனை என்பதா என்றும் பார்க்கவேண்டியுள்ளது.

ஒட்டுமொத்தமாக சமுக ஊடகங்களால் மக்களின் தனி வாழ்வுக்கும் சமூக வாழ்வுக்கும் இடையிலான கோடு அழிக்கப்பட்டுதன் பின்னால் நன்மையும் அதே நேரம் மறைமுக தீமையும் இணைந்தே இருப்பதை சமூகவியலாளர்கள் அடிக்கோடிடுகின்றனர்.

Related Stories

No stories found.
Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com