பாலக்காட்டு அனில் மேனன்.. விண்வெளி பயணம் சென்ற இந்திய வம்சாவளி நாசா வீரர்!

சர்வதேச விண்வெளி நிலையத்தை பத்திரமாக சென்றடைந்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
அனில் மேனன்
அனில் மேனன்
Published on

இந்திய வம்சாவளியை சேர்ந்த நாசா விண்வெளி வீரர், டாக்டர் அனில் மேனன் இன்று விண்வெளி பயணம் சென்றுள்ளார்.

கஜகஸ்தானில் உள்ள பைக்கானூர் ஏவுதளத்தில் இருந்து இந்திய நேரப்படி இன்று இரவு 8:17 மணிக்கு சோயுஸ் எம்எஸ் 29 விண்கலம் மூலம் அவர் புறப்பட்டார்.

அவர் சென்ற விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை பத்திரமாக சென்றடைந்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

இவருடன் ரஷிய விண்வெளி வீரர்களான பியோட்டர் டுப்ரோவ் மற்றும் அன்னா கிகினா ஆகியோரும் இப்பயணத்தில் உடன் சென்றுள்ளனர்.

சுமார் 8 மாதங்கள் நீடிக்கவுள்ள இந்த ஆய்வுப் பயணத்தை முடித்துக்கொண்டு, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் பூமிக்குத் திரும்புவார்.

அனில் மேனன்

டாக்டர் அனில் மேனனுக்கு இதுவே முதல் விண்வெளிப் பயணமாகும். விண்வெளியில் மனிதர்கள் நீண்ட காலம் தங்கும்போது ஏற்படும் மருத்துவ மற்றும் உடல்நலச் சவால்கள் குறித்துப் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்வதே இவரது இந்த பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.

கேரள மாநிலம் பாலக்காட்டின் ஒட்டப்பாலத்தைச் சேர்ந்த சங்கரன் மேனன் மற்றும் உக்ரைனை சேர்ந்த எலிசபெத் சமோய்லென்கோ ஆகிய தம்பதியரின் மகனே அனில் மேனன் ஆவார்.

அனில் மேனன் மருத்துவர் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியர் ஆவார். மேலும் அமெரிக்க விண்வெளிப் படையில் பைலட்டாகவும் பணியாற்றியுள்ளார்.

பல்வேறு துறைகளில் தனது திறமையை நிரூபித்த அவர் நாசாவின் விண்வெளி வீரர் குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அனில் மேனனின் இந்த விண்வெளிப் பயணம், பாலக்காடு வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் நிகழ்வாகும்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com