search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    பர்தா
    X
    பர்தா

    ஆப்கனில் பெண் செய்தி வாசிப்பாளர்கள் முகத்தை மூடவேண்டும் - தலிபான்கள் உத்தரவு

    கொரோனா காலத்தில் பயன்படுத்தியதைப் போன்ற முகக்கவசங்களையும் பெண் செய்தி வாசிப்பாளர்கள் அணிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    காபுல்:

    ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினர். தலிபான்கள் ஆட்சி அமைந்ததுமே அங்கு மிகக் கடுமையான பழமைவாத சட்டங்கள் பின்பற்றப்படலாம் என அந்நாட்டு மக்களும், மனித உரிமை ஆர்வலர்களும் கவலை தெரிவித்தனர்.

    ஆனால், தங்களின் முந்தைய ஆட்சிக்காலத்தைப் போன்று கடுமையான ஆட்சி இருக்காது என தலிபான்கள் உறுதி அளித்தனர். 

    இதற்கிடையே, பெண்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகளை தலீபான்கள் விதித்து வருகின்றனர். கடந்த 7-ம் தேதி தலிபான்கள் வெளியிட்ட அறிவிப்பில், பொது இடங்களில் பெண்கள் தலை முதல் கால் வரை முழுவதுமாக மறைத்தபடி பர்தா அணிய வேண்டும் என உத்தரவிட்டனர். அரசுப் பணிகளில் இருக்கும் பெண்கள் பர்தா அணியாவிட்டால் பணிநீக்கம் செய்யப்படுவார்கள். அதேபோல் அரசுப் பணிகளில் உள்ள ஆண்களின் மனைவியோ, மகளோ பர்தா அணியாவிட்டால் அவர்கள் மீதும் பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கக் கூடாது, பெண்கள் மேல்நிலைக் கல்வி பயில தடை உள்ளிட்ட உத்தரவுகளையும் தலிபான்கள் பிறப்பித்துள்ளனர்.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் பெண் செய்தி வாசிப்பாளர்கள் தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும்போது தங்கள் முகத்தை மூடிக்கொள்ள வேண்டும் என தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.

    இதுகுறித்து செய்தி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அவர்கள் இதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டதாகவும் தலிபான் அரசின் நல்லொழுக்கங்களுக்கான துறையின் செய்தி தொடர்பாளர் ஆகிப் மகாஜார் தெரிவித்துள்ளார். 

    Next Story
    ×