search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    பயிற்சி
    X
    பயிற்சி

    லைவ் அப்டேட்ஸ்: பால்டிக் கடற்பகுதியில் ரஷிய போர் விமானங்கள் பயிற்சி

    உக்ரைனுக்குள் நுழைவதற்கு ரஷியா பயன்படுத்தி வந்த பாலம் உடைக்கப்பட்டது.
    14.05.2022


    21:00: உக்ரைனில் நடக்கும் போர், ஏழை நாடுகளை அச்சுறுத்தும் வகையில் உலகளாவிய உணவு மற்றும் எரிசக்தி நெருக்கடியைத் தூண்டுகிறது. உக்ரைனை விட்டு தானியங்கள் வெளியேறுவதை ரஷியா தடுப்பதாகவும், இதை சரிசெய்ய அவசர நடவடிக்கைகள் தேவை என ஜி7 அமைப்பு தெரிவித்துள்ளது. 

    சர்வதேச தடைகளை குறைத்து மதிப்பிடுவது அல்லது உக்ரைனில் ரஷியாவின் நடவடிக்கைகளை நியாயப்படுத்துவது உள்பட எந்த வகையிலும் ரஷியாவிற்கு உதவ வேண்டாம் என சீனாவை ஜி7 நாடுகள் கேட்டுக்கொண்டன.

    17:00: விமானத் தாக்குதலை முறியடிப்பது எப்படி? என்பது தொடர்பாக பால்டிக் கடல் பகுதியில் ரஷியாவின் Su-27 போர் விமானங்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. நேட்டோவில் இணைவது தொடர்பான திட்டங்களை பின்லாந்து அறிவித்த நிலையில் இந்த பயிற்சி நடைபெறுகிறது. 

    16:00: ரஷியாவை பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தனிமைப்படுத்தும் நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுதங்களை வழங்கவும் போரினால் உருவாகும் உலகளாவிய உணவுப் பற்றாக்குறையை சரிசெய்யவும் பணியாற்ற வெளியுறவுத் துறை மந்திரிகள் குழு உறுதியளித்தது.

    15:45: ரஷிய போர்க் கைதிகளை விடுவிப்பதற்கு ஈடாக,  மிக முக்கியமான தென்கிழக்கு துறைமுகமான மரியுபோலில் உள்ள உருக்காலையில் காயமடைந்த வீரர்களை வெளியேற்றுவது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாக உக்ரைன் அதிகர் ஜெலன்ஸ்கி கூறினார்.

    15:30: நேட்டோ நாடுகள் ரஷிய எல்லைகளில் அணு ஆயுத படைகளை கொண்டு வந்து நிறுத்தினால், நாங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்வோம் என்றும், அது கடும் விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் ரஷிய வெளியுறவுத்துறை துணை மந்திரி அலெக்சாண்டர் குருஷ்கோ எச்சரித்துள்ளார். 

    15:00: உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவ் நகரில் சில வாரங்களாக குண்டுகளை வீசி தாக்கிய ரஷியப் படைகள் தற்போது அந்த நகரில் இருந்து வாபஸ் பெறுவதாக உக்ரைன் ராணுவம் கூறி உள்ளது. உக்ரைன் மற்றும் ரஷிய படைகள் கிழக்கு பகுதியில் கடுமையான போரில் ஈடுபட்டுள்ள நிலையில், ரஷிய படைகள் கார்கீவில் இருந்து வெளியேறுகின்றன.

    10.09: ரஷிய ராணுவம் தனது நாட்டின் கிழக்கு பகுதி வழியாக உக்ரைனுக்குள் நுழைய, பிலோஹோரிவிகாவில் உள்ள சிவர்ஸ்கை டோனட் நதியில் கட்டப்பட்டுள்ள பாலத்தை பயன்படுத்தி வந்தது. இந்நிலையில் உக்ரைன் ராணுவம் வான்வெளி தாக்குதல் மூலம் இந்த பாலத்தை உடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதன்மூலம் நதியின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த ராணுவ வாகனங்களும் அழிக்கப்பட்டது. இது ரஷ்யாவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என உக்ரைன் கூறியுள்ளது.

    06.50:ரஷியா நிகழ்த்தி உள்ள போர்க்குற்ற விசாரணையை உக்ரைன் நீதிமன்றம் தொடங்கி உள்ள நிலையில், 10,000 க்கும் மேற்பட்ட போர்க் குற்றங்களை அடையாளம் கண்டுள்ளதாக உக்ரைன் அரசு குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்களை குறி வைத்து தாக்குதல் உள்பட போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என ரஷியா மறுத்துள்ளது.

    04.10: உக்ரைனை ஆக்ரமிக்கும் முயற்சியில் ரஷியாவின் தோல்வி வெளிப்படையானது என அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். எனினும் வான்வெளித் தாக்குதல் மற்றும் பீரங்கி தாக்குதல் மூலம் உண்மையை மறைக்க ரஷிய படைகள் முயற்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

    02.30: நேட்டோ அமைப்பில் பின்லாந்து மற்றும் ஸ்வீடன் இணைவதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  ஸ்வீடன் பிரதமர் மாக்டலேனா ஆண்டர்சன் மற்றும் பின்லாந்து அதிபர் சவுலி நினிஸ்டோ ஆகியோருடன் ஜோ பைடன்  தொலைபேசி மூலம் பேசினார். உக்ரைன் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட உக்ரேனிய மக்களுக்கு ஆதரவு அளிக்கும் உறுதிபாடு குறித்து இரு தலைவர்களுடன் பைடன் விவாதித்தாக வெள்ளை மாளிகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    01.30: உக்ரைன் மீது ரஷிய படைகள் தாக்குதலை தொடங்கியது முதல் இதுவரை அந்நாட்டில் 3,573 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகவும், 3,816 பொதுமக்கள் காயம் அடைந்ததாகவும் ஐ.நா. சபை தெரிவித்துள்ளது, கனரக பீரங்கிகள், வெடிகுண்டுகள் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் மூலமே பெரும்பாலான  உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளதாக ஐ.நா.சபை குறிப்பிட்டுள்ளது.

    12.10:உக்ரைனுக்கு ராணுவ உதவி உள்ளிட்ட அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அமெரிக்கா மற்றும் பிரிட்டன் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி உள்ளனர்.  ரஷிய ஆக்ரமிப்பிற்கு எதிராக உக்ரைனுக்கு தேவையான உதவிகளை வழங்குவதாக நாங்கள் உறுதியளிக்கிறோம் என்று பிரிட்டன் பாதுகாப்புத்துறை அமைச்சர்  பென் வாலஸ் குறிப்பிட்டுள்ளார்.

    13.05.2022

    22:00:உக்ரைனில் போர் தீவிரம் அடைந்ததை அடுத்து, கீவ் நகரில் செயல்பட்டு வந்த இந்திய தூதரகம் மூடப்பட்டு, அண்டை நாடான போலந்தில் இயங்கி வந்தது. இந்நிலையில், உக்ரைன் கீவ் நகரில் உள்ள இந்திய தூதரகம் வரும் 17-ம் தேதி முதல் மீண்டும் செயல்படும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    18:00:உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி திமித்ரி குலேபா, ஜி7 நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகளுடனான கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது, பல ஏவுகணைகளை ஏவக்கூடிய ராக்கெட் அமைப்புகள், ராணுவ விமானங்கள் உட்பட அதிக ஆயுதங்களை வழங்குமாறு ஜி7 நாடுகளிடம் கேட்டுக்கொண்டார். மேலும் ரஷியா மீது பொருளாதாரத் தடைகளை விதித்து மேலும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

    15:30: உக்ரைனுக்கு மேலும் 500 மில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள ராணுவ ஆதரவை வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் போரெல் தெரிவித்தார். ரஷியாவின் கச்சா எண்ணெய் மீதான தடைக்கான ஒப்பந்தம் வரும் நாட்களில் எட்டப்படும் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.

    15:00:உக்ரைனுக்கு அதிக அளவில் ஆயுதங்களை வழங்குவதன் வாயிலாகவும், ரஷியா மீது கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிப்பதன் மூலமும், ரஷியா மீதான அழுத்தத்தை தொடர வேண்டியது அவசியம் என பிரிட்டன் வெளியுறவுத்துறை மந்திரி லிஸ் டிரஸ் தெரிவித்தார்.

    13:30: கிழக்கு உக்ரைனில் உள்ள பல கிராமங்கள் மீது ரஷிய படைகள் தாக்குதல்களை நடத்தியதாகவும், அங்கு கட்டுப்பாட்டு பகுதிகளை விரிவுபடுத்த முயன்றதாகவும் உக்ரைன் ராணுவம் தெரிவித்தது. அதேசமயம், ரஷியாவின் இந்த முயற்சி வெற்றிபெறவில்லை என்றும் உக்ரைன் ராணுவம் கூறி உள்ளது. 

    13.00:உக்ரைன் மீது ராணுவ தாக்குதல் தொடங்கியதில் இருந்து ரஷியா மீது மேலைநாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்தன. இதனால் உலக அளவில் எண்ணெய், எரிவாயு, உரங்கள், உணவு ஆகியவற்றின் வழங்கல் சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், பொருளாதார விவகாரங்கள் குறித்த கூட்டத்தில் பேசிய அதிபர் விளாடிமிர் புதின், ரஷியா மீதான பொருளாதாரத் தடைகளால் பல நாடுகள் உணவுத் தட்டுப்பாடு அபாயத்தில் உள்ளன என்றார்.

    Next Story
    ×