search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    உக்ரைன் படைகள்
    X
    உக்ரைன் படைகள்

    லைவ் அப்டேட்ஸ்: மேலும் ஒரு ரஷிய கப்பலை அழித்துவிட்டோம்- உக்ரைன் தகவல்

    உக்ரைன்-ரஷியா ஆகிய இரு நாடுகளுக்கிடையே கடந்த 2 மாதத்துக்கும் மேலாக போர் நடந்துவருகிறது. ரஷியா உக்ரைன் மீது பல்வேறு தாக்குதல்களை நடத்தியதில் பல்லாயிரக் கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
    7.5.2022

    19:30: உக்ரைனின் சுமி பிராந்தியத்தில், ரஷிய எல்லைக்கு அருகில் இரண்டு இடங்களை ரஷிய ஏவுகணைகள் தாக்கியதாக பிராந்திய ஆளுநர் டிமித்ரோ ஜிவிட்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் ஒரு எல்லைக் காவலர் காயமடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    18:00: மேலும் ஒரு ரஷிய கப்பலை அழித்துவிட்டதாக உக்ரைன் ராணுவ அமைச்சகம் கூறி உள்ளது. இந்த முறை, துருப்புக்கள் மற்றும் ராணுவ உபகரணங்களை வைப்பதற்கான கப்பலை அழித்திருப்பதாக தெரிவித்துள்ளது. 

    13:00: மரியுபோல் அசோவ்ஸ்டல் ஆலைக்கு அடியில் உள்ள சுரங்கப்பாதைகளில் தஞ்சமடைந்துள்ள ஏராளமான பொதுமக்களை வெளியேற்றும் முயற்சியில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அசோவ்ஸ்டல் ஆலையில் இருந்து வெள்ளிக்கிழமை மீட்கப்பட்ட பலர், ஐ.நா. சபை மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக ரஷிய மற்றும் உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    11 குழந்தைகள் உள்பட 50 பேர் வெளியேற்றப்பட்டதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது. மக்களை வெளியேற்றும் பணி வார இறுதியிலும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    12:00: தூதரக நடைமுறைகள் மற்றும் பேச்சுவார்த்தை பாதை மட்டுமே உக்ரைன் மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கு சாத்தியமான வழி என்றும், ரத்தம் சிந்துவதன் மூலம் எந்த தீர்வையும் எட்ட முடியாது என்றும் இந்தியா மீண்டும் வலியுறுத்தி உள்ளது. 

    10.00: ரஷிய தொழிலதிபர் சுலைமான் கெரிமோவ் என்பவருக்கு சொந்தமானதாகக் கூறப்படும், 300 மில்லியன் டாலர் மதிப்பிலான சொகுசு படகு அமெரிக்காவால் பறிமுதல் செய்யப்பட்டு பிஜி தீவில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து பிஜி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. மேல்முறையீடு மனு விசாரணைக்கு வரும் வரை, சொகுசுப் படகை அங்கிருந்து நகர்த்தக்கூடாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    09.16: மேற்கத்திய நாடுகள் வழங்கிய அதிநவீன ஆயுதங்களை கொண்டு, உக்ரைன் படையினர் ரஷியாவை எதிர்த்து போராடி வருகின்றனர். உக்ரைன் வடகிழக்கு பகுதியில் இருந்த 2 முக்கிய  நகரங்களில் இருந்து ரஷிய படைகளை விரட்டி அடித்ததாக கூறப்படுகிறது. மேலும் உக்ரைன் கிழக்கு பகுதியை கட்டுக்குள் கொண்டு வர ரஷியா தொடர்ந்து போராடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    06.40: ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைன் அரசுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு அளிக்கும். உக்ரைன் அரசாங்கத்திற்கு 150 மில்லியன் டாலர்கள் நிதி உதவியாக வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

    உக்ரைனுக்கு கூடுதல் பீரங்கி குண்டுகள், ரேடார்கள் மற்றும் பிற உபகரணங்களை வழங்கும் பாதுகாப்பு உதவியின் மற்றொரு தொகுப்பை நான் அறிவிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

    03.30: உக்ரைனின் மரியுபோல் நகர் மீது ரஷியா பார்வையை பதித்தது. போர் தொடுத்த நாள் முதல் அங்கு முற்றுகையிட்டது. அந்நகரின் மீது ஏவுகணை தாக்குதலும், குண்டுவீச்சும் நடத்தி பெரும்பாலான கட்டிடங்களை சேதப்படுத்தி உருக்குலைய வைத்தது.

    உக்ரைன் துணைப் பிரதமர் இரினா வெரேஷ்சுக் கூறுகையில், மரியுபோலில் உள்ள அஜோவ்டஸ் உருக்கு ஆலையில் இருந்து மேலும்  50 பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர் என தெரிவித்தார்.

    00.45: உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யாவுக்கு சொந்தமான சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என ஐரோப்பிய யூனியன் வலியுறுத்தியது.

    இதுதொடர்பாக பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில். ஐரோப்பிய யூனியன் தலைவர் ச் கூறுகையில், ஐரோப்பிய யூனியன் தங்கள் நாடுகளில் உள்ள ரஷ்ய சொத்துக்களை பறிமுதல் செய்து அவற்றை ஏலத்தில் விட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    இதனால் திரட்டப்படும் நிதியை பாதிக்கப்பட்ட உக்ரைன் பகுதிகளுக்கு அனுப்ப வேண்டும். மரியுபோல், லவீவ், கீவ் உள்ளிட்ட நகரங்களை மறுசீரமைக்க இந்த நிதி உதவும் என கூறியுள்ளார்.
    Next Story
    ×