search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    உக்ரைன் குழந்தைகள்
    X
    உக்ரைன் குழந்தைகள்

    லைவ் அப்டேட்ஸ்: 10 லட்சம் நபர்கள் சிறை பிடிப்பு- ரஷியா செய்தி நிறுவனம் அறிவிப்பு

    போர் காரணமாக உக்ரைனில் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு கூறி உள்ளது.
    03.05.2022

    21.00: இந்தியா, டென்மார்க் நாட்டு பிரதமர்கள் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, உக்ரைன் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டதா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அந்த கேள்விக்கு பதிலளித்து பேசிய பிரதமர் மோடி, நாங்கள் உக்ரைன் விவகாரம் குறித்தும் பேசினோம். உக்ரைனில் சண்டையை உடனடியாக நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை மற்றும் ராஜாங்க ரீதியில் பிரச்சினையை தீர்க்கும்படி நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம் என தெரிவித்தார்.

    17.45: உக்ரைனில் நடைபெறுவது கொடூரமான மற்றும் புத்தியில்லாத போர் என போப் பிரான்சிஸ் பலமுறை கண்டனம் தெரிவித்துள்ளார். உக்ரைன் போர் தொடர்பாக மாஸ்கோவில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்திக்க கோரிக்கை விடுத்துள்ளதாக போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். 

    நான் இப்போதைக்கு கீவ் செல்லவில்லை. நான் போக வேண்டிய இடம் கீவ் இல்லை. நான் முதலில் மாஸ்கோ தான் செல்ல வேண்டும். புதினை சந்திக்க வேண்டும் என்றார்.

    13.30: உக்ரைனுக்கு எதிரான போரில் 2 லட்சம் சிறுவர்கள் உள்பட 10 லட்சம் பேரை சிறை பிடித்து அழைத்து வந்திருப்பதாக ரஷியாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான டாஸ்க் தெரிவித்துள்ளது.

    06.30: ஜெலன்ஸ்கி யூதர் என்பதால், மிகப் பெரிய யூத எதிர்ப்பின் தொடர்ச்சியே உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் என்று ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோ தெரிவித்துள்ள கருத்திற்கு, அமெரிக்கா செனட் சபைத் தலைவர்  ஷுமர் கண்டனம் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது தனது மிருகத்தனமான படையெடுப்பை நியாயப்படுத்த ரஷியா முயற்சிப்பது யாரை ஏமாற்றுவதற்கு என அவர் கேள்வி எழுப்பி உள்ளார். ரஷியாவின் போர் குற்றங்கள் உலகம் பார்க்கும் வகையில் தெளிவாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    04.10: போர் மூலம் கிழக்கு உக்ரைன் பகுதிகளை இணைக்கவும், தெற்கு நகரமான கெர்சனை சுதந்திரக் குடியரசாக அங்கீகரிக்கவும் ரஷியா திட்டமிட்டுள்ளதாக ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான அமெரிக்க தூதர்  மைக்கேல் கார்பென்டர் தெரிவித்துள்ளார். கெர்சன் நகரில் சுதந்திர வாக்கெடுப்பை நடத்துவதற்கான நடவடிக்கைகளில் ரஷியா ஈடுபட்டு இருப்பதாகவும் அவர் கூறினார். ரஷியாவின் செயல்கள், அமெரிக்கா மற்றும்  அதன் கூட்டணி, நட்பு நாடுகளால் அங்கீகரிக்கப்படாது என்றும் அவர் தெரிவித்தார்.

    03.30:  உக்ரைன் எல்லைக்கு அருகே தென்மேற்கு பகுதியில் பழுதடைந்த பாலத்தை சீரமைக்கும் பணியில் ரஷிய தொழிலாளர்கள் குழு ஈடுபட்டுள்ளது. புதன் கிழமைக்குள் சீரமைப்புப் பணிகள் முடிவடையும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. கிழக்கு உக்ரைனில் போரில் ஈடுபட்டுள்ள ரஷிய படைகளுக்கு தேவையான பொருட்களை எடுத்துச் செல்வதற்கு இந்த பாலம் பயன்படுத்தப் பட்டு வந்த நிலையில் அடையாளம் தெரியாத நபர்களால் அது தகர்க்கப் பட்டதாக ரஷியாவின் அரசு புலனாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

    02.10: அமெரிக்கா பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி, போலந்து நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். போலாந்து தலைவர்களை சந்தித்த அவர், உக்ரைன் நிலைமை குறித்து விவாதித்தார். உக்ரைனை ஆக்ரமித்துள்ள ரஷியாவிற்கு ஐரோப்பிய நாடுகள் வலிமையான பதிலடி தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்நிலையில், பிரேஸ்ஸில்லில் ஐரோப்பிய நாடுகளின் எரிசக்தித்துறை அமைச்சர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ரஷிய எரிசக்தி ஆதாரங்களுக்கு தடை விதிப்பது குறித்து விவாதிக்கப் பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    01.10: உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களில் ரஷிய படைகளின் தாக்குதலை தடுக்கும் முயற்சியாக உக்ரைனுக்கு அதிக ஆயுதங்களை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. உக்ரைனின் கிழக்கு பகுதி நகரமான டான்பாசில்,  ரஷிய படைகள் குறைந்த அளவே முன்னேறி உள்ளதாக அமெரிக்க மூத்த பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார். இதனிடையே, ஒடோசா கடல் பகுதியில் இரண்டு ரஷிய போர் கப்பல்களை அழித்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

    02.05.2022

    22:00: உக்ரைனின் கிழக்கில் ரஷியாவின் தாக்குதல் மற்றும் கடுமையான சண்டை தொடர்ந்ததால், மரியுபோலில் இருந்து மேலும் பல பொதுமக்களை வெளியேற்ற முடியும் என உக்ரைன் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.  மக்களை வெளியேற்றுவதற்காக, யுனிசெஃப் மற்றும் பிற சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் வாகனங்கள், உக்ரைன் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள சபோரிஜியாவில் தயார் நிலையில் உள்ளன.

    20:00: உக்ரைன் போரில் எந்த நாட்டிற்கும் வெற்றி கிடைக்காது என இந்திய பிரதமர் மோடி கூறியுள்ளார். போரை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    19:00: உக்ரைன் மீது பிப்ரவரி 24 அன்று ரஷியாவின் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து, உக்ரைனில் கொல்லப்பட்ட பொதுமக்களின்  எண்ணிக்கை 3,000-ஐ தாண்டியுள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு கூறி உள்ளது. வெள்ளிக்கிழமையில் இருந்து இன்று வரை 254 பேர் கொல்லப்பட்ட நிலையில், மொத்த உயிரிழப்பு 3153 ஆக உயர்ந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    16.30:  கிழக்கு பகுதியில் நடைபெறும் தாக்குதலை தீவிரப்படுத்துவதற்காக, மரியுபோல் துறைமுகத்தில் இருந்து ரஷியா சில படைகளை  மீண்டும் நிலைநிறுத்தியுள்ளதாக உக்ரைன் ராணுவம் கூறுகிறது.

    16:00: ரஷியாவின் சமீபத்திய குண்டுவீச்சில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக உக்ரைன் அதிகாரிகள் கூறுகின்றனர்.
    கடந்த 24 மணி நேரத்தில் கிழக்கு லுஹான்ஸ்க் பகுதியில் 3  பேர் கொல்லப்பட்டதாகவும், ஒரு குழந்தை உட்பட மேலும் 3 பேர் காயமடைந்ததாகவும் உக்ரைன் அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

    15:00: பொருளாதாரத் தடை அல்லது ரஷியா எடுக்கும் முடிவு காரணமாக, ரஷிய எண்ணெய் விநியோகம் நிறுத்தப்பட்டால் அதை சமாளிக்க தங்களால் முடியும் என்று ஜெர்மனி கூறுகிறது.

    14:30: பல்கேரியா மற்றும் போலந்து ஆகிய நாடுகளுக்கு எரிவாயு விநியோகத்தை குறைப்பதற்கு ரஷியா முடிவு செய்துள்ளது. இதுபற்றி விவாதிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றிய எரிசக்தி துறை அமைச்சர்கள் இன்று கூடுகின்றனர். மேலும் ரஷியா மீது புதிய தடைகள் விதிக்கலாமா? என்பது குறித்தும் விவாதிக்க உள்ளனர்.

    14:00: நாசிசம் மற்றும் யூத எதிர்ப்பு பற்றி ரஷிய வெளியுறவு மந்திரி தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி அந்நாட்டின் தூதருக்கு இஸ்ரேல் சம்மன் அனுப்பி உள்ளது. 

    13.30: உக்ரைனின் மரியுபோல் நகரை நீண்ட போராட்டத்துக்குப் பிறகு ரஷியா கைப்பற்றி உள்ளது. அங்குள்ள அசோவ்ஸ்டல் உருக்காலையில் தஞ்சம் அடைந்திருந்த பொதுமக்களை வெளியேற்றும் பணி நேற்று தொடங்கியது. அசோவ்ஸ்டல் உருக்காலையில் இருந்து நேற்று 20 பொதுமக்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர் என உக்ரைன் வீரர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தைகள், பெண்கள் உள்பட 100க்கு மேற்பட்டோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×