search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    கோத்தபய ராஜபக்சே
    X
    கோத்தபய ராஜபக்சே

    ராஜபக்சே தம்பியை விமர்சித்த 2 மந்திரிகள் அதிரடி நீக்கம்

    பொருளாதார நெருக்கடிக்கு இலங்கை நிதி மந்திரியும், பிரதமர் மகேந்திர ராஜபக்சே தம்பியுமான பசில் ராஜபக்சேதான் காரணம் என அந்நாட்டு மின்துறை மந்திரி, தொழில்துறை மந்திரி ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
    கொழும்பு:

    இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் தீவு நாடான இலங்கை சுற்றுலாப்பயணிகளை நம்பியே உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா பரவல் காரணமாக இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணி களின் எண்ணிக்கை குறைந் துள்ளது.

    சுற்றுலாப் பயணிகள் வராததால் அந்த நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. குறிப்பாக கச்சா எண்ணை, உரங்கள் போன்றவற்றை இறக்குமதி செய்வதற்கு தேவையான அன்னிய செலாவணி இல்லாமல் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது.

    அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதியும் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா பரவலுக்கு முன்பிருந்தே இலங்கையின் அன்னிய செலாவணி கையிருப்பு குறையத் தொடங்கியது.

    தொடர்ச்சியாக 2019-ம் ஆண்டு இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். மேலும் அதே ஆண்டு இலங்கை அரசு வரி குறைப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டது.

    இதனால் பொருளாதார நெருக்கடிக்கு இலங்கை அரசு தள்ளப்பட்டது. கடன் பிரச்சினையை சமாளிக்க முடியாமல் அந்நாட்டு அரசு திணறி வருகிறது. இதனால் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து கடன் வாங்கக்கூடிய சூழ்நிலைக்கு அந்நாடு தள்ளப்பட்டு விட்டது.

    ஜனவரி மாதம் சுமார் 6,300 கோடி ரூபாயும், கடந்த மாதம் ரூ.3,500 கோடி ரூபாயும் இந்தியாவிடம் இருந்து இலங்கை கடன் வாங்கியது.

    அனல்மின் நிலையங்களுக்கு தேவையான எரி பொருளை இறக்குமதி செய்ய வழியில்லாததால் தற்போது இலங்கையில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தினமும் 7.30 மணி நேரம் மின்தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.

    மின்தடை

    இதன் காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. பல பொருட்களுக்கு தட்டுப்பாடும் நிலவி வருகிறது.

    நிலைமையை சரி செய்ய சர்வதேச நிதியகத்தின் உதவியை நாடுமாறு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன.

    இந்த பொருளாதார நெருக்கடியில் இலங்கை நிதி மந்திரியும், பிரதமர் மகேந்திர ராஜபக்சே தம்பியுமான பசில் ராஜபக்சேதான் காரணம் என அந்நாட்டு மின்துறை மந்திரி உதய கம்மான்பிளா, தொழில்துறை மந்திரி விமல் வீரவான்சா ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இவர்கள் 2 பேரும் கூட்டணி கட்சியை சேர்ந்த மந்திரி ஆவார்கள். இதையடுத்து இந்த 2 மந்திரிகளையும் அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே அதிரடியாக பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

    Next Story
    ×