search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் விமானம்
    X
    பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் விமானம்

    ஷிப்டு முடிந்துவிட்டது... அவசரமாக தரையிறக்கிய பிறகு விமானத்தை இயக்க மறுத்த விமானி

    நிலைமை மோசடைந்ததையடுத்து விமான நிலைய பாதுகாவலர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பயணிகளிடம் பேசி, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
    இஸ்லாமாபாத்:

    சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை, பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நோக்கி, பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டு வந்தது. அந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் மோசமான வானிலை நிலவியது. இதனால் சவுதியின் தம்மம் விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 

    வானிலை சீரடைந்ததும் விமானம் இஸ்லாமாபாத் புறப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் பயணிகள் விமானத்திலேயே அமர்ந்திருந்தனர். ஆனால், வெகுநேரம் ஆகியும் வானிலை சீரடையவில்லை. அதற்குள் விமானியின் ஷிப்டு (பணி நேரம்) முடிந்துவிட்டது. அனுமதிக்கப்பட்ட பணி நேரம் முடிந்துவிட்டதால் மேற்கொண்டு விமானத்தை தன்னால் இயக்க முடியாது என விமானி கூறி உள்ளார். இதனால் பயணம் தாமதமானது. ஆத்திரம் அடைந்த பயணிகள், விமானத்தை விட்டு இறங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    நிலைமை மோசடைந்ததையடுத்து விமான நிலைய பாதுகாவலர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பயணிகளிடம் பேசி, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பயணிகளை அமைதிப்படுத்திய அதிகாரிகள், விமானம் புறப்படும் வரை ஓட்டல்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்தனர். 

    அனுமதிக்கப்பட்ட நேரம் பணியாற்றிய பின் விமானி ஓய்வெடுக்க வேண்டும், ஏனெனில் அது விமானப் பாதுகாப்பிற்கு அவசியம் என விமான நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறினார்.

    பாகிஸ்தானின் தேசிய விமான நிறுவனமான பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ், கடந்த ஆண்டு நவம்பரில் சவுதி அரேபியாவிற்கு தனது விமானச் சேவையை விரிவுபடுத்தியது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×