search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    மியான்மர் போராட்டம்
    X
    மியான்மர் போராட்டம்

    மியான்மரில் பயங்கரம்- அப்பாவி மக்கள் 40 பேரை கொன்று புதைத்த ராணுவம்

    மியான்மரில் அப்பாவி மக்கள் 40 பேரை ராணுவம் அடித்து, சித்ரவதை செய்து கொன்று புதைத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    நேபிடாவ்:

    மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தேதியில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் கவிழ்த்து வைத்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.

    அதை தொடர்ந்து, அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்ளிட்ட அரசியல் தலைவர்களை சிறைப்பிடித்த ராணுவம் நாட்டில் ஓராண்டுக்கு அவசர நிலையை பிரகடனப்படுத்தியது.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த பொதுத்தேர்தலில் முறைகேடு நடைபெற்றதால் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டதாக கூறி ராணுவம் தனது செயலை நியாயப்படுத்தி கொண்டிருக்கிறது.

    ஆனால் அதை ஏற்காத அந்த நாட்டு மக்கள் ஜனநாயகத்தை மீட்டெடுக்கக்கோரி ராணுவ ஆட்சி தொடங்கிய நாள் முதலே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    எனினும் ராணுவம் மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் இரும்புக்கரம் கொண்டு இந்த போராட்டங்களை ஒடுக்கி வருகிறது.

    ராணுவ ஆட்சி தொடங்கியதில் இருந்து இப்போது வரை 1,500-க்கும் அதிகமான போராட்டக்காரர்கள் ராணுவ வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

    உலக நாடுகளின் அழுத்தத்தை மீறியும் மியான்மர் ராணுவம் தனது அடாவடி போக்கை தொடர்ந்து வருகிறது.

    இந்தநிலையில் மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பாவி மக்கள் 40 பேரை ராணுவ வீரர்கள் அடித்து, சித்ரவதை செய்து கொன்று புதைத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த ஜூலை மாதம் நடந்த இந்த கொடூர சம்பவத்தின் வீடியோ காட்சிகள், புகைப்படங்கள் மற்றும் சம்பத்தை நேரில் பார்த்தவர்களின் சாட்சியங்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மியான்மரின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ராணுவ எதிர்ப்பாளர்களின் கோட்டையாக கருதப்படும் கானி நகரில் உள்ள பல கிராமங்களுக்குள் புகுந்து ராணுவம் தனது கோர முகத்தை காட்டியுள்ளது.

    ராணுவத்தின் இந்த வெறியாட்டத்தில் தங்கள் கண்முன்னே உறவுக்காரர்களை பறிக்கெடுத்த பெண்கள் சிலர் இது குறித்து கண்ணீர் மல்க கூறியதாவது:-

    17 முதல் 18 வயதுக்குட்பட்ட ராணுவ வீரர்கள் பலர் கிராமங்களுக்குள் புகுந்து 40 ஆண்களை கைது செய்தனர். பின்னர் அவர்களை வெவ்வேறு இடத்துக்கு அழைத்து சென்று அவர்களின் கை, கால்களை கட்டி அடித்து சித்ரவதை செய்தனர்.

    எங்களால் இதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை, அதனால் நாங்கள் தலைகுனிந்து அழுதோம். அதைச் செய்ய வேண்டாம் என்று நாங்கள் அவர்களிடம் கெஞ்சினோம். அவர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை.

    அவர்கள் எங்களிடம், ‘‘உங்கள் கணவர்கள் அவர்களில் இருக்கிறார்களா அவர்கள் இருந்தால், உங்கள் இறுதிச் சடங்குகளைச் செய்யுங்கள்' என்று கூறினர். பின்னர் அவர்கள் குழிகளை தோண்டி, அடித்து கொல்லப்பட்டவர்களின் உடல்களை அதில் போட்டு புதைத்தனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்த சம்பவம் தற்போது அங்கு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், ராணுவம் இது குறித்து உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை. முன்னதாக கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் ராணுவத்தினர் கிராம மக்கள் 11 பேரை உயிரோடு எரித்துக்கொன்றதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×