
இலங்கை பாராளுமன்ற கூட்டத்தொடர் கடந்த வெள்ளிக்கிழமை முடிவடைந்தது. பாராளுமன்றம் ஜனவரி 11-ந் தேதி முதல் மீண்டும் கூடுவதாக இருந்தது.
இந்தநிலையில் இலங்கை பாராளுமன்றத்தை அதிபர் கோத்தபய ராஜபக்சே ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தார்.
நேற்று வெளியிடப்பட்ட அரசின் அறிவிப்பில் இலங்கை பாராளுமன்றம் ஒரு வாரத்திற்கு சஸ்பெண்டு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசு உத்தரவில் கூறி இருப்பதாவது:-
டிசம்பர் 12 நள்ளிரவில் இருந்து இலங்கை பாராளுமன்றத்தை ஒத்திவைக்கும் உத்தரவு அமலுக்கு வருகிறது. ஜனவரி 18-ந் தேதி காலை 10 மணிக்கு பாராளுமன்றத்தில் அடுத்த கூட்டத்தொடர் நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தை ஒரு வாரத்திற்கு முடக்கும் இந்த முடிவு தொடர்பாக உடனடியாக அரசு தரப்பில் இருந்து எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
பாராளுமன்றத்தை ஒரு வாரத்துக்கு முடக்கி வைத்த ஒரு சில மணி நேரங்களுக்குள் கோத்தபய ராஜ பக்சே திடீரென சிங்கப்பூர் புறப்பட்டார். இது அவரது திட்டமிடப்படாத பயணமாகும். அவர் சிங்கப்பூர் புறப்பட்டு சென்றது இலங்கை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதே நேரத்தில் கோத்த பய ராஜபக்சே மருத்துவ தேவைக்காக சிங்கப்பூர் சென்று உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இலங்கை பாராளுமன்றம் ஒரு வாரத்திற்கு முடக்கப்பட்டுள்ளதால் ஜனவரி 11-ந் தேதி கூட இருந்த கூட்டத்தொடர் 18-ந் தேதி கூடுகிறது.