search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் பாராளுமன்றம்
    X
    பாகிஸ்தான் பாராளுமன்றம்

    பாகிஸ்தானில் கட்டாய மதமாற்றத்திற்கு எதிரான மசோதா நிராகரிப்பு

    கட்டாய மதமாற்றத்திற்கு எதிரான சட்டம் நாட்டில் அமைதியை பாதிக்கும் என்றும், சிறுபான்மையினருக்கு மேலும் சிக்கலான சூழலை உருவாக்கும் என்றும் மத விவகாரங்களுக்கான அமைச்சர் கூறினார்.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் இந்து, கிறிஸ்தவ மற்றும் சீக்கிய மத சிறுமிகள் கடத்தப்பட்டு, கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு, திருமணம் செய்யப்படும் சம்பவங்கள் வாடிக்கையாகி வருகிறது. கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக மனித உரிமை அமைப்புகள் குரல் கொடுத்துவருகின்றன. மதமாற்றத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினாலும் தங்களுக்கு நீதி கிடைப்பது இல்லை என சிறுபான்மையினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் அங்கு கொண்டுவரப்பட்ட கட்டாய மதமாற்ற எதிர்ப்பு சட்ட மசோதாவுக்கு மத விவகாரங்களுக்கான அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாராளுமன்றக் குழு கூட்டத்தில் அத்துறையின் அமைச்சர் ஹக் காத்ரி பேசும்போது, கட்டாய மதமாற்ற எதிர்ப்பு சட்டத்தை கொண்டு வருவதற்கான சூழ்நிலை தற்போது இல்லை என்றார்.

    கட்டாய மதமாற்றத்திற்கு எதிரான சட்டம் நாட்டில் அமைதியை பாதிக்கும் என்றும், சிறுபான்மையினருக்கு மேலும் சிக்கலான சூழலை உருவாக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

    மதம் மாற விரும்புபவர்கள் சுய விபரங்களுடன் எதற்காக மதம் மாறுகிறோம் என்ற தகவலை மாவட்ட நீதிபதியிடம் தெரிவிக்க வேண்டும் என்றும், மதம் மாறுபவர்கள் வற்புறுத்தல், மிரட்டல் காரணமாக மதம் மாறவில்லை என்பதை நீதிபதியே உறுதி செய்ய வேண்டும் என்றும் மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

    கட்டாய மதமாற்றம் செய்வோருக்கு 5 முதல் 10 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை, 2 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கும் ஷரத்து இடம்பெற்றிருந்தது. 

    இந்நிலையில் பெரும்பான்மை உறுப்பினர்கள் தரப்பில், பாகிஸ்தானில் இஸ்லாமுக்கு எதிரான எந்த ஒரு சட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம் என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.  மதம் மாறுவதற்கு வயது வரம்பு நிர்ணயம் செய்யப்படுவதற்கும் அவர்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மசோதாவை பாராளுமன்ற குழு நிராகரித்துள்ளது.

    இதனால் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த எம்பிக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இது சிறுபான்மையினரை ஒடுக்கும் செயல் என இம்ரான் கான் கட்சியை சேர்ந்த இந்து உறுப்பினர் லால் சந்த் மால்கி விமர்சித்துள்ளார். மசோதாவை நிராகரிப்பது சிறுபான்மையினர் வாழ்க்கையை நரகமாக மாற்றும் செயல் எனவும் அவர் கூறியிருக்கிறார்.
    Next Story
    ×