search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்காவில் குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
    X
    அமெரிக்காவில் குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

    அமெரிக்காவில் குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

    அமெரிக்காவில் பள்ளிக் கூடங்கள் திறந்த நிலையில் குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒரே வாரத்தில் 2½ லட்சம் குழந்தைகளுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இது பெற்றோர்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது.
    வாஷிங்டன் :

    சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால், பிற எந்த நாடுகளையும் விட, வல்லரசு நாடான அமெரிக்கா மிக மோசமாக பாதித்துள்ளது.

    அங்கு இதுவரை இந்த தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6¾ லட்சத்தைக் கடந்து 6 லட்சத்து 76 ஆயிரத்து 92 என பதிவாகி உள்ளது. இது நேற்று மதிய நிலவரம் ஆகும்.

    கடந்த 1918-1919 ஆண்டுகளில் ஸ்பானிஷ் புளூ தோன்றி உலகமெங்கும் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. அப்போது அமெரிக்காவில் 6¾ லட்சம் பேர் ஸ்பானிஷ் புளூவால் உயிரிழந்தனர். அந்த உயிரிழப்புகளை, இப்போது அமெரிக்காவில்
    கொரோனா வைரஸ்
    உயிர்ப்பலி கடந்து விட்டது.

    வரும் குளிர்காலத்தில் அமெரிக்காவில் மேலும் 1 லட்சம் பேர் கொரோனா வைரசுக்கு பலியாவார்கள் என்று வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.

    கொரோனாவால் உலக அளவில் 47 லட்சத்து 460 பேர் இறந்துள்ளனர். இந்தியாவை பொறுத்தமட்டில் இந்த கோர தொற்றால் 4 லட்சத்து 45 ஆயிரத்து 385 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

    அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (சிடிசி) தரவுகள், புதிதாக கொரோனா பாதிப்புக்கு ஆளான குழந்தைகளின் சேர்க்கையால், குழந்தைகள் நல ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழிவதை காட்டுகின்றன.

    அங்கு பள்ளிக்கூடங்கள் திறந்து லட்சக்கணக்கான குழந்தைகள் செல்லத் தொடங்கி உள்ள நிலையில், பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஆகஸ்டு மாதத்தின் கடைசி வாரத்தில் மட்டுமே 2½ லட்சம் குழந்தைகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க குழந்தைகள் மருத்துவ அகாடமி கூறுகிறது. கொரோனா பரவல் தொடங்கிய பின்னர் ஒரு வாரத்தில் பதிவான அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கை இது ஆகும்.

    கொரோனா வைரஸ்

    கடந்த 6-ந்தேதி வரையிலான வாரத்தில் 2,500 குழந்தைகள் கொரோனா பாதிப்பால் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    ஏறத்தாழ 500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொரோனாவால் உயிரிழந்திருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

    உருமாறிய கொரோனாவால் (டெல்டா) குழந்தைகள் பாதிக்கப்பட்டு, ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுவது 5 மடங்கு அதிகரித்து இருப்பதாக கடந்த 3-ந்தேதி அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்ட தரவு காட்டுகிறது.

    ஜூன்-ஆகஸ்டு மாதங்களில், 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 12-17 வயது குழந்தைகள் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்படுவது 10 மடங்கு அதிகரித்து இருக்கிறதாம்.

    குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது முக்கியம். முககவசம் அணிதல், கைச்சுத்தம் பராமரித்தல், தனிமனித இடைவெளியை பின்பற்றுதல் ஆகியவற்றுடன் தடுப்பூசி போடுதல்தான் பரவலைத் தடுக்கும் வழி என்று ரோசெஸ்டர் மருத்துவ மையத்தின் குழந்தைகள் மருத்துவ பேராசிரியர் டாக்டர் மேரி கசர்டா வலியுறுத்தி உள்ளார்.

    அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பதாகவும், 11 மாகாணங்களில் 1½ லட்சம் குழந்தைகள் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

    இப்படி பள்ளிக்கூடத்துக்கு செல்லும் குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது பெற்றோரை கவலையில் ஆழ்த்தி உள்ளது.

    இந்தியாவிலும் பல மாநிலங்களிலும் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், பெற்றோர்கள் கவலையுடன்தான் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்புகிற நிலை உள்ளது.

    Next Story
    ×