search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தலிபான்கள்
    X
    தலிபான்கள்

    ஆப்கானிஸ்தான் விவகாரம்- 6 நாட்டு உளவுத்துறை தலைவர்களுடன் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. தலைவர் ஆலோசனை

    ஆப்கானிஸ்தானுக்கு பொருளாதார ரீதியாகவும், மனிதாபிமான ரீதியாகவும் உரிய பங்களிப்பை செய்ய வேண்டும், ஆப்கானிஸ்தானை அனாதையாக விட்டு விடக்கூடாது என்று பாகிஸ்தான் கூறி உள்ளது.
    இஸ்லாமாபாத்:

    ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் அந்த நாட்டை தங்களது கைப்பாவையாக மாற்றிக் கொள்ளலாம் என்று பாகிஸ்தான் கருதுகிறது. அங்கு ஆட்சியின் தலைவராக முல்லா பரதாரை முதலில் தலிபான்கள் தேர்வு செய்து வைத்திருந்தனர். முல்லா பரதாரை பாகிஸ்தானுக்கு பிடிக்கவில்லை. எனவே பாகிஸ்தான் அதில் தலையிட்டது.

    பாகிஸ்தான் உளவுப்படையான ஐ.எஸ்.ஐ. தலைவர் பயாஸ் அமீது ஆப்கானிஸ்தானுக்கு திடீரென சென்றார். அவரது தலையீடு காரணமாக ஆப்கானிஸ்தானில் மந்திரி பதவி ஏற்பே தள்ளி போனது.

    பாகிஸ்தான் ஆலோசனையின் பேரில் முல்லா ஹசன் அகுந்த் இடைக்கால பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். ஆப்கானிஸ்தானை தாங்கள் ஆட்டி வைக்கும் பொம்மையாக மாற்றி விட்டால் அதன்மூலம் இந்தியாவுக்கு எதிராக தலிபான்களை செயல்பட வைக்கலாம் என பாகிஸ்தான் கணக்குப் போட்டு செயல்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று ஆப்கானிஸ்தானை சுற்றி உள்ள நாடுகளின் உளவுப் படை தலைவர்களின் கூட்டத்தை பாகிஸ்தான் நடத்தியதாகவும், பாகிஸ்தான் உளவுப்படை தலைவர் பயாஸ் அமீது முன்னிலையில் இந்த கூட்டம் நடந்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

    இதில் சீனா, ரஷியா, ஈரான், உஷ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மேனிஸ் தான் ஆகிய 6 நாடுகளின் உளவுப்படை தலைவர்கள் கலந்து கொண்டனர். அந்த பிராந்தியத்தில் அமைதியையும், நிலைத்தன்மையையும் நீடிக்க ஆப்கானிஸ்தானுக்கு உதவ வேண்டும் என்று விவாதிக்கப்பட்டுள்ளது. 

    பொருளாதார ரீதியாகவும், மனிதாபிமான ரீதியாகவும் உரிய பங்களிப்பை செய்ய வேண்டும். ஆப்கானிஸ்தானை அனாதையாக விட்டு விடக்கூடாது என்று பாகிஸ்தான் கூறியது. அதன் அடிப்படையில் விவாதங்கள் நடந்ததாகவும் செய்தி வெளியாகி உள்ளது. 

    இந்த கூட்டத்தில் பங்கேற்றதாக கூறப்படும் நாடுகளில் ஒரு சில நாடுகளுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே ஏற்கனவே பனிப்போர் நிலவி வருகிறது. அந்த நாடுகளை எல்லாம் ஒருங்கிணைத்து பாகிஸ்தானுக்கு ஆதரவாக மாற்றி விடலாம் என்ற முயற்சியில் பாகிஸ்தான் இறங்கி இருக்கிறது.
    Next Story
    ×