search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காதலனுடன் இளவரசி மகோ
    X
    காதலனுடன் இளவரசி மகோ

    காதலனுக்காக ரூ.8.76 கோடியை விட்டுக் கொடுத்த ஜப்பான் இளவரசி

    அரச குடும்பத்தைச் சாராத காதலனை திருமணம் செய்வதற்காக ஜப்பான் இளவரசி மகோ, சுமார் 8.7 கோடி ரூபாயை விட்டுக் கொடுத்துள்ளார்.
    டோக்கியோ:

    ஜப்பானின் பட்டத்து இளவரசர் புமிஹிடோவின் மகளும், பேரரசர் நருஹிட்டோவின் மருமகளுமான இளவரசி மகோ, அரச குடும்பத்தைச் சாராத கெய் கொமுரோ என்பவரைக் காதலித்து வந்தார். டோக்கியோவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பயின்றபோது இவர்களுக்குள் காதல் ஏற்பட்டது.

    கடந்த 2017-ம் ஆண்டு கொமுரோ மற்றும் இளவரசி மகோ இருவரும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் நிச்சயம் செய்துகொண்டனர். 2018-ல் முறைப்படி திருமணம் செய்யவும் முடிவு எடுத்திருந்தனர். ஆனால் கொமுரோவின் முன்னாள் காதலியிடம் அவரது தாயார் கடன் வாங்கிய விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால் இவர்களின் திருமணம் தள்ளிப்போனது.

    தற்போது இளவரசியின் காதலர் கொமுரோ, அமெரிக்காவில் சட்ட மேற்படிப்பு முடித்து, அந்நாட்டு பார் கவுன்சில் தேர்வு எழுதியுள்ளார். அதில் தேர்ச்சி பெற்றதும் அமெரிக்காவிலேயே பணிபுரிய உள்ளார். இதையடுத்து இளவரசி மகோவும் அமெரிக்காவுக்குச் செல்ல முடிவெடுத்துள்ளார்.

    இந்த ஜோடி பாரம்பரிய முறையில் இல்லாமல், வழக்கமான கொண்டாட்டங்களைத் தவிர்த்து சாமான்யர்களைப் போல் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். 29 வயதான மகோ திருமணம் செய்தபின்னர் இளவரசி என்ற பட்டத்தை இழந்துவிடுவார். இந்தாண்டு இறுதிக்குள் அவர்களது திருமணத்தை பாரம்பரிய சடங்குகளின்றி நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    ஜப்பான் அரசு குடும்ப விதிப்படி சாதாரண குடும்பத்தினரை ஒருவர் திருமணம் செய்தால் அரச பட்டத்தை இழக்க நேரிடும். அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண் என்றால் அதற்காக இழப்பீடு வழங்கப்படும். அதன்படி இளவரசி மகோவிற்கு 137 மில்லியன் யென்(இந்திய மதிப்பில் சுமார் 8.76 கோடி) இழப்பீடாக கிடைக்கும் என கூறப்படுகிறது. ஆனால் மக்கள் வரிப்பணத்தில் வழங்கப்படும் இழப்பீடு தனக்கு தேவையில்லை என இளவரசி மகோ மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
    Next Story
    ×