search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விமான நிலையத்திற்கு வெளியே காத்திருக்கும் மக்கள்
    X
    விமான நிலையத்திற்கு வெளியே காத்திருக்கும் மக்கள்

    காபூல் விமான நிலையத்தில் பயங்கரவாத அச்சுறுத்தல்... மக்கள் வெளியேற வேண்டுகோள்

    அமெரிக்கப் படைகள் வெளியேறுவதற்கான கெடுவை நீட்டிக்க மாட்டோம் என தலிபான்கள் கூறி உள்ளதால், விமான நிலைய பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.
    காபூல்:

    ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அங்கு இருக்கும் வெளிநாட்டினர் தங்கள் நாடுகளுக்கு செல்ல முயற்சித்து வருகிறார்கள். இதையடுத்து அந்தந்த நாடுகள் விமானங்களை ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு அனுப்பி தங்கள் குடிமக்களை மீட்டு வருகின்றன.

    இதேபோல் அங்கிருந்து வெளியேற விரும்பும் ஆப்கானிஸ்தான் மக்களையும் விமானங்களில் ஏற்றி அழைத்து செல்கிறார்கள். காபூல் விமான நிலையத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ள அமெரிக்க ராணுவம் மக்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறது. 

    அதேசமயம் காபூல் விமான நிலையத்தை சுற்றி உள்ள பகுதிகள் முழுவதும் தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.

    அமெரிக்க வீரர்கள்

    ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் ஆகஸ்டு 31-ம் தேதிக்குள் முழுமையாக வெளியேறும் என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் ஏற்கனவே அறிவித்துள்ளார். இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், நாட்டை விட்டு செல்வதற்காக காபூல் விமான நிலையத்தை சுற்றி உள்ள பகுதிகளில் காத்திருக்கும் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்படுவார்களா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

    அமெரிக்கப் படைகள் வெளியேறுவதற்கான கெடுவை நீட்டிக்க மாட்டோம் என தலிபான்கள் கூறி உள்ளதால், விமான நிலைய பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. விமான நிலையத்தை சுற்றி வளைத்துள்ள தலிபான்கள், ஆகஸ்ட் 31க்கு பிறகு விமான நிலையத்திற்குள் செல்ல ஆயத்தமாக உள்ளனர்.

    இந்த சூழ்நிலையில், பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக காபூல் விமான நிலைய பகுதியை விட்டு வெளியேறும்படி ஆஸ்திரேலிய மக்களை அந்நாட்டு அரசு கேட்டுக்கொண்டுள்ளது. காபூல் விமான நிலையம் அருகே பயங்கரவாத தாக்குதல் குறித்த அச்சுறுத்தல் இருப்பதாக ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் மாரிஸ் பெய்ன் கூறினார். ஆஸ்திரேலிய மக்கள் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு விசா உள்ளவர்கள் அந்த பகுதியை காலி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். 

    காபூல் விமான நிலையத்தில் இருந்து ஒரு வாரத்திற்கும் மேலாக ஆஸ்திரேலியா தனது குடிமக்கள் மற்றும் விசா வைத்திருப்பவர்களை வெளியேற்றி வருகிறது. மக்கள் போக்குவரத்திற்கு தயாராக இருக்குமாறு கூறியது. அதன்பின்னர் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படும் என்ற அச்சம் காரணமாக நேற்று இரவு தனது அறிவுறுத்தலை மாற்றியது. 

    இதேபோல் விமான நிலையத்தில் பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதால் மக்கள் விமான நிலையத்தை விட்டு வெளியேறும்படி அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளும் எச்சரித்துள்ளன.

    ஆப்கானிஸ்தானில் இருந்து இன்னும் 1500 அமெரிக்கர்கள் உள்ளிட்ட 10000 பேர் வெளியேறுவதற்காக காத்திருக்கிறார்கள். அமெரிக்க படைகள் 31ம் தேதி வெளியேற பிறகு, மக்களை வெளியேற்றுவதற்காக சில விமானங்களை இயக்க அனுமதிப்பதாக தலிபான் அமைப்பு உறுதி அளித்திருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி அந்தோணி பிளிங்கன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×