search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப் படம்
    X
    கோப்புப் படம்

    கொரோனா பரவல் எதிரொலி - இலங்கையில் 10 நாள் ஊரடங்கு அமலுக்கு வந்தது

    இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையைத் தடுக்க 10 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
    கொழும்பு:

    இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 3,800 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகினர். 186 பேர் உயிரிழந்தனர். இதுவரை அங்கு 3 லட்சத்து 73 ஆயிரத்து 165 பேர் தொற்று பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். 6,790 பேர் இறந்தும் உள்ளனர்.

    கொழும்பு மாவட்டத்தை உள்ளடக்கிய மேற்கு மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நகரில் 75 சதவீத பாதிப்பு, வேகமாகப் பரவுகிற டெல்டா வகை வைரசை சேர்ந்தவை என தகவல்கள் கூறுகின்றன.

    இதற்கிடையே, அங்கு மூன்றாவது அலையைத் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் கேட்டுக் கொண்டார்கள். ஆனாலும் ஊரடங்கு போட்டால் அது பலவீனமாக உள்ள பொருளாதாரத்தை மேலும் பாதிக்கும் என்று அதிபர் கோத்தபய ராஜபக்சே கூறி ஊரடங்கு போட மறுத்து விட்டார்.

    ஆனால் புத்த மத குருமார்களும், அவரது சொந்த கூட்டணிக் கட்சி உறுப்பினர்களும், நாட்டின் மோசமான கொரோனா நிலையைக் கருத்தில் கொண்டு, ஊரடங்கு போட வேண்டும் என்று இலங்கை அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தனர். அதற்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே இறுதியில் அடிபணிந்தார்.

    இந்நிலையில், இலங்கையில் ஆகஸ்டு 30-ம் தேதி காலை 4 மணி வரையில் 10 நாள் தேசிய ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இது நேற்று இரவு அமலுக்கு வந்துள்ளது.
    Next Story
    ×