search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    சீனாவின் உகான் நகரில் ஓராண்டுக்கு பிறகு மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு

    சீனாவை தற்போது அச்சுறுத்திக் கொண்டிருக்கும் புதிய வகை கொரோனா வைரஸ் அந்த நாட்டின் கிழக்கு பிராந்தியத்தில் அமைந்துள்ள நாஞ்சிங் விமான நிலையத்தில் இருந்துதான் பரவ தொடங்கியது.
    பீஜிங்:

    ஓராண்டுக்கும் மேலாக உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா என்கிற கொடிய வைரஸ் முதன் முதலில் சீனாவின் ஹூபெய் மாகாணம் உகான் நகரில்தான் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றியது.

    அதன் பின்னர் இந்த வைரஸ் நாடு விட்டு நாடு கண்டம் விட்டு கண்டம் கடந்து தற்போது ஒட்டுமொத்த உலகத்திலும் பரவி கிடக்கிறது. உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்கா உள்பட வலுவான சுகாதார கட்டமைப்பைக் கொண்ட பல நாடுகளும் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வருகின்றன.

    ஆனால் கொரோனாவின் பிறப்பிடமான சீனா அதன் பாதிப்பில் இருந்து மிக விரைவாகவே மீண்டது. கொரோனா பரவ தொடங்கிய ஆரம்ப கால கட்டத்திலேயே முழு ஊரடங்கு, சர்வதேச பயணங்களுக்கு தடை உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் மூலம் இது சாத்தியமானதாக சீனா தரப்பில் கூறப்படுகிறது.

    இதனிடையே தொடர்ந்து பல மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு பெரிய அளவில் இல்லாததால் கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டு சீன மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர்.‌

    இந்த நிலையில், தற்போது சீனாவில் உருமாறிய டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. அந்த நாட்டில் 15 மாகாணங்களில் டெல்டா வைரஸ் கால் பதித்து பரவி விட்டது. குறிப்பாக, கொரோனா வைரஸ் முதல் முறையாக கண்டறியப்பட்ட உகான் நகரில் ஓராண்டுக்கு பிறகு, ஒரே நாளில் 7 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனைத் தொடர்ந்து அந்த நகரில் உள்ள ஒட்டுமொத்த மக்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    உகான் நகரில் தற்போது 1 கோடியே 10 லட்சத்துக்கும் அதிகமானோர் உள்ளனர். ஓரிரு நாட்களுக்குள் இவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தி முடிக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

    அதேபோல் வெளிநாட்டிலிருந்து சீனா வரும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் ஹெனான் மாகாணத்தின் ஷெங்ஜோ நகரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் ஊழியர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் மூலம் 27 பேருக்கு வைரஸ் பரவியுள்ளதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

    இதையடுத்து ஷெங்ஜோ நகரில் வசிக்கும் 1 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    முன்னதாக, சீனாவை தற்போது அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த புதிய வகை கொரோனா வைரஸ் அந்த நாட்டின் கிழக்கு பிராந்தியத்தில் அமைந்துள்ள நாஞ்சிங் விமான நிலையத்தில் இருந்துதான் பரவ தொடங்கியது.

    இதை தொடர்ந்து அந்த நகரில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்திய அதிகாரிகள் அந்த நகரின் ஒட்டுமொத்த மக்கள் தொகையான 92 லட்சம் பேருக்கு 3 முறை கொரோனா பரிசோதனை நடத்தி முடித்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×