search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்ரீஷா பாண்ட்லா
    X
    ஸ்ரீஷா பாண்ட்லா

    விண்வெளியில் இருந்து பூமியை பார்த்தது வியப்பூட்டும் அனுபவம்- ஸ்ரீஷா பாண்ட்லா

    விண்வெளிக்கு செல்வது சிறுவயது முதலே எனது கனவு. தற்போது அந்த கனவு நனவாகி இருக்கிறது என்று விண்வெளிக்கு பயணம் மேற்கொண்ட இந்திய வீராங்கனை ஸ்ரீஷா பாண்ட்லா கூறினார்.
    ஹூஸ்டன்:


    ஆந்திர மாநிலம் குண்டூரை பூர்வீகமாக கொண்ட ஸ்ரீஷா பாண்ட்லா, விர்ஜின் கேலக்டிக் நிறுவனத்தின் வி.எஸ்.எஸ். யூனிட்டி என்ற விண்வெளி விமானத்தில் நேற்று முன்தினம் விண்வெளிக்கு பறந்தார். அவருடன் இந்த நிறுவனத்தின் நிறுவனர் ரிச்சர்ட் பிரான்சன் உள்பட 5 பேர் பயணித்தனர்.

    அமெரிக்காவின் நியூ மெக்சிகோ பாலைவனத்துக்கு மேலாக 88 கிலோமீட்டர் தூரத்தை அடைந்த அவர்களால் பூமியின் வளைவை காண முடிந்தது. மீண்டும் பூமிக்கு திரும்பும் முன்பு சில நிமிடங்களுக்கு அவர்கள் எடையற்ற நிலையையும் உணர்ந்தனர்.

    மறுபடி தரையைத் தொட்ட ஸ்ரீஷா சிலிர்ப்பு மாறாமல் அளித்த பேட்டியில், ‘நான் இன்னும் விண்வெளியில் இருப்பதைப் போல உணர்கிறேன். ஆனால் மீண்டும் பூமிக்கு திரும்பியிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதை வியப்பூட்டும் அனுபவம் என்பதற்கு மாற்றாக வேறு வார்த்தை இருக்கிறதா என்று தேடுகிறேன். ஆனால் இந்த வார்த்தைதான் என் ஞாபகத்துக்கு வருகிறது. விண்வெளியில் இருந்து பூமியைப் பார்த்தது வியப்பூட்டியதோடு, வாழ்வை மாற்றும் அனுபவமாக இருந்தது. இந்த முழு விண்வெளி பயணமும் அற்புதம்.

    விண்வெளிக்கு செல்வது சிறுவயது முதலே எனது கனவு. தற்போது அந்த கனவு நனவாகி இருக்கிறது.

    நாசா

    நான் ஒரு விண்வெளி வீராங்கனையாக விரும்பினேன். ஆனால் மரபுசார்ந்த முறையில், அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘நாசா’ மூலம் என்னால் விண்வெளிக்கு செல்ல முடியவில்லை. எனவேதான் மரபுசாராத முறையில் இப்பயணத்தை மேற்கொண்டேன். வருங்காலத்தில் இன்னும் நிறையப்பேர் இந்த விண்வெளி அனுபவத்தைப் பெறுவார்கள் என்று நம்புகிறேன்’ என்று கூறினார்.

    விண்வெளி பயணம் என்பது பெரும் பணக்காரர்களுக்கான உல்லாசப் பயணமாக இருக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த ஸ்ரீஷா, ‘எங்கள் நிறுவனத்தின் சார்பில் நாங்கள் மேலும் இரு விண்வெளி விமானங்களை உருவாக்குகிறோம். எதிர்காலத்தில் விண்வெளி பயணம் மேற்கொள்வதற்கான கட்டணமும் குறையும் என்று நம்புகிறோம்’ என்றார்.



    Next Story
    ×