search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
    X
    அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

    அமெரிக்காவில் ரூ.450 லட்சம் கோடி பட்ஜெட் -அதிபர் பைடன் பரிந்துரை

    டொனால்ட் டிரம்ப் ஆட்சிக் காலத்தில் குடியரசுக் கட்சியினர் நிறைவேற்றிய பெருநிறுவன வரி குறைப்பை முடிவுக்குக் கொண்டு வந்து, போதிய நிதி திரட்ட பைடன் விரும்புகிறார்.
    வாஷிங்டன்:

    உலகிலேயே மிகப்பெரிய வல்லரசு நாடாக உள்ள அமெரிக்காவில் பட்ஜெட்டுக்கு அதிக நிதி ஒதுக்குவது வழக்கம். அந்த வகையில் புதிய அதிபர் ஜோ பைடன் அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட் பரிந்துரையை வெளியிட்டுள்ளார். அதில் 6 டிரில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.450 லட்சம் கோடி) மதிப்பிலான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இது மிகப்பெரிய தொகையாகும். இதில் ராணுவம், கல்வி, சுற்றுச்சூழல் ஆகியவற்றுக்கு அதிக தொகை ஒதுக்கப்படுகிறது. மேலும், உள்கட்டமைப்பு மேம்பாடுகள், சமூகப் பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவற்றுக்கும் பட்ஜெட்டில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். 

    இந்த பட்ஜெட் முன்னோட்டத்தை அறிவித்த பைடன், தொற்றுநோய்க்கு பிந்தைய அமெரிக்கா, முன்பு இருந்த நிலைக்கு எளிதில் திரும்ப முடியாது, என்றார். மேலும், ஒரு புதிய அமெரிக்க பொருளாதாரத்தை மறுவடிவமைத்து மீண்டும் கட்டியெழுப்புவதற்கான தருணத்தை நாம் ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறினார். 

    அதிபர் பைடனின் பட்ஜெட் பரிந்துரைக்கு குடியரசுக் கட்சியினர் எதிர்ப்பு  தெரிவித்துள்ளனர். அந்தப் பரிந்துரையால் வட்டி விகிதமும் பணவீக்கமும் உயரக்கூடும் என்று கூறியுள்ளனர். இது தன் வாழ்நாளில் மிகவும் பொறுப்பற்ற பட்ஜெட் திட்டம் என்று குடியரசு கட்சி எம்பி கெவின் மெக்கர்த்தி குறிப்பட்டார். 

    அதிபர் பைடனின் ஆதரவாளர்கள் சிலர் கூட பட்ஜெட் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர். கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், புதிய பட்ஜெட்டால் பண வீக்கம் அதிகரிக்கும் என எச்சரித்துள்ளனர்.

    டொனால்ட் டிரம்ப் ஆட்சிக் காலத்தில் குடியரசுக் கட்சியினர் நிறைவேற்றிய பெருநிறுவன வரி குறைப்பை முடிவுக்குக் கொண்டு வந்து, பட்ஜெட்டுக்கான நிதியை திரட்ட பைடன் விரும்புகிறார். பெருநிறுவனங்கள் மற்றும் உச்சபட்ச வருமானம் ஈட்டுவோர் மீதான வரிகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளார். ஆனால் இந்த திட்டத்தை குடியரசு கட்சியினர் ஏற்க மறுத்துள்ளனர்.
    Next Story
    ×