search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பெலாரஸ் வான்வழியை பயன்படுத்த வேண்டாம்- விமான நிறுவனங்களுக்கு கனடா அரசு அறிவுறுத்தல்

    கனடாவின் விமான நிறுவனங்கள் பெலாரஸ் நாட்டின் வான்வழியை பயன்படுத்த வேண்டாம் என கனடா அரசு அறிவுறுத்தியுள்ளது.
    மின்ஸ்க்:

    பெலாரஸ் நாட்டின் அதிபர் பதவியில் கடந்த 27 ஆண்டுகளாக அலெக்சாண்டர் லுகாசெங்கோ இருந்து வருகிறார். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நடந்த தேர்தலில் அவர் முறைகேடுகள் செய்து வெற்றி பெற்றதாக சர்ச்சை எழுந்தது. அதைத்தொடர்ந்து, தன்னை விமர்சிப்பவர்களை அவர் ஒடுக்கி வருகிறார். 

    இதனால், பெரும்பாலான அரசியல் எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சிலர் வெளிநாடுகளுக்குத் தப்பி விட்டனர். அதுபோல் பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த ரோமன் புரோட்டசெவிச் என்ற பத்திரிகையாளர், பெலாரஸ் அதிபர் குறித்து தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார். 

    அதிபரின் அத்துமீறல் அதிகரித்ததால், பத்திரிக்கையாளர் புரோட்டசெவிச், லிதுவேனியா நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளார். அங்கிருந்தபடி, அதிபர் தேர்தலில் உண்மையிலேயே வெற்றி பெற்றதாக கருதப்படும் எதிர்க்கட்சி தலைவருக்கு ஆதரவாக எழுதி வருகிறார்.

    இதற்கிடையே, கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸ் நகரில் எதிர்க்கட்சி தலைவருடன் இணைந்து நிகழ்ச்சி ஒன்றில் ரோமன் புரோட்டசெவிச் பங்கேற்றார். பின்னர், அவர் லிதுவேனியா தலைநகர் வில்னியசுக்கு திரும்புவதற்காக ரியான்ஏர் நிறுவன விமானத்தில் புறப்பட்டார். அந்த விமானத்தில் அவருடன் 171 பயணிகள் இருந்தனர்.

    விமானம் பெலாரஸ் நாட்டு வான் மண்டலம் வழியாக சென்று கொண்டிருந்தபோது, திடீரென பெலாரஸ் விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமானிக்கு ஒரு அழைப்பு வந்தது. விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாகவும், எனவே, பெலாரஸ் தலைநகர் மின்ஸ்க் விமான நிலையத்தில் அவசரமாக விமானத்தை தரை இறக்குமாறும் அதில் பேசிய அதிகாரி கூறினார்.

    அதே சமயத்தில், பெலாரஸ் நாட்டு போர் விமானம் ஒன்று, அந்த பயணிகள் விமானத்தை வழிமறித்து அரவணைத்து கூட்டிச் சென்றது. இதனால், வேறு வழியின்றி மின்ஸ்க் விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்டது. அதில் இருந்த பயணிகள் வெளியேற்றப்பட்டனர். 

    இதனை தொடர்ந்து பத்திரிகையாளர் ரோமன் புரோட்டசெவிச்சை பெலாரஸ் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவருடன் வந்த பெண்ணும் கைது செய்யப்பட்டார். அப்போது, தனக்கு மரண தண்டனை விதித்து விடுவார்கள் என்று புரோட்டசெவிச் கூச்சலிட்டார். அதிபர் அலெக்சாண்டர் லுகாசெங்கோ நேரடி உத்தரவின்பேரில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பெலாரஸ் அரசாங்க ஊடகம் தெரிவித்தது.

    இந்த செயலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இது ஒரு அதிர்ச்சிகரமான நடவடிக்கை என்று அமெரிக்க வெளியுறவுத்துறை கூறியுள்ளது. ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வோன்டெர் லியன், இந்த சட்டவிரோத செயலுக்கு பெலாரஸ் பலத்த பின்விளைவுகளை சந்திக்கும் என கூறினார். இத்தாலி, சைப்ரஸ், லாட்வியா ஆகிய நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

    இந்நிலையில், பத்திரிகையாளர் கைது செய்யப்பட்ட விவகாரம் பற்றி, கனடா நாட்டு அரசு தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. மேலும் கனடாவின் விமான நிறுவனங்கள் பெலாரஸ் வான்வழியை பயன்படுத்த வேண்டாம் எனவும் கனடா அரசு அறிவுறுத்தியுள்ளது.
    Next Story
    ×