search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆங் சான் சூகி
    X
    ஆங் சான் சூகி

    ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்ட பின் முதல்முறையாக ஆங் சான் சூகி கோர்ட்டில் ஆஜர்

    மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    நைபிடா:

    மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ம் தேதி முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் ஆங் சான் சூகி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களை ராணுவம் கைது செய்து தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அவர் வீட்டுக்காவலில் உள்ளார்.

    ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் மீது மியான்மர் ராணுவத்தினர் கடுமையான ஒடுக்குமுறைகளைப் பின்பற்றி வருகின்றனர். மியான்மரில் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை பொதுமக்கள் 800- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    இதற்கிடையே, ராணுவ கட்டுப்பாட்டில் வீட்டுக்காவலில் உள்ள ஆங் சான் சூகி விரைவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் என அந்நாட்டு ராணுவ தளபதி மின் அங் ஹலிங் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், 16 வாரங்கள் வீட்டுச்சிறையில் உள்ள ஆங் சான் சூகி முதல்முறையாக பொதுவெளியில் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

    தேசிய பாதுகாப்பு சட்டத்தை மீறியதாக கடந்த பிப்ரவரி 1-ம் தேதி முதல் சூகி கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் இருந்து வருகிறார். கைது செய்யப்பட்ட பின்னர் ஆங் சான் சூகியின் நிலை என்ன ஆனது என்று பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தன.

    ஆனால், கைது செய்யப்பட்ட பின் முதல்முறையாக கோர்ட் விசாரணைக்கு காணொலி காட்சி மூலம் ஆஜரான  ஆங் சான் சூகி, 'மக்களின் ஆதரவு உள்ளவரை தனது தேசிய லீக் ஜனநாயக கட்சியும் இருக்கும்’ என தெரிவித்தார். இந்த சம்பவம் மியான்மர் அரசியலில் பரபரப்பாகியுள்ளது.
    Next Story
    ×