search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆண்டனி பிளிங்கன்
    X
    ஆண்டனி பிளிங்கன்

    அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி இஸ்ரேல் பயணம்

    அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி வரும் புதன்கிழமை இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் மேற்குகரை பகுதிக்கு செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
    வாஷிங்டன்:

    இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. காசா முனை மற்றும் மேற்கு கரை என்று மொத்தம் இரண்டு பகுதிகளாக பாலஸ்தீனம் உள்ளது.

    காசா முனையை ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாகக் கருதுகிறது. மேற்குகரை பகுதியின் பாலஸ்தீன அதிபராக முகமது அப்பாஸ் செயல்பட்டு வருகிறார். மேற்குகரையின் சில பகுதிகளை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

    இதற்கிடையில், ஜெருசலேமில் உள்ள அல்-அக்‌ஷா மத வழிபாட்டு தளத்தில் கடந்த 10-ம் தேதி இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.

    இதனை தொடர்ந்து காசா முனையில் இருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலையடுத்து காசா முனை மீது இஸ்ரேலிய பாதுகாப்பு படை பதிலடி தாக்குதல் நடத்தியது. இரு தரப்பும் மாறிமாறி நூற்றுக்கணக்கான ராக்கெட் தாக்குதலை நடத்தினர்.

    காசா முனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலை கண்டித்து மேற்குகரை பகுதியிலும் பாலஸ்தீனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தின் போது ஏற்பட்ட மோதலை கட்டுப்படுத்த இஸ்ரேல் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பாலஸ்தீனர்கள் பலர் உயிரிழந்தனர்.

    எகிப்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் முயற்சியால் கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேல் - ஹமாஸ் இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் 11 நாட்களாக நடைபெற்ற சண்டை முடிவுக்கு வந்துள்ளது.

    ஆனாலும், இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலில் 296 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் காசா முனையில் குழந்தைகள், பெண்கள் உள்பட 257 பேரும், மேற்குகரை பகுதியில் 27 பேரும், இஸ்ரேலில் 12 பேரும் (கேரளாவைச் சேர்ந்த சௌமியா என்ற பெண் உள்பட) உயிரிழந்துள்ளனர். இரு தரப்புக்கும் இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளபோதும் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் வரும் புதன்கிழை இஸ்ரேல் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்பின், வியாழக்கிழமை பாலஸ்தீனத்தின் மேற்குகரை பகுதிக்குச் செல்கிறார்.

    இந்தப் பயணத்தின்போது இரு தரப்பு தலைவர்களையும் சந்தித்து பதற்றத்தைக் குறைக்க பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பயணத்தின் போது ஆண்டனி பிளிங்கன் எகிப்து மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ளலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான மோதல் கடந்த சில நாட்களுக்கு முன் முடிவுக்கு வந்துள்ள நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறையின் இந்தப் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருத்தப்படுகிறது. 
    Next Story
    ×