search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹீத்ரோ விமான நிலையம்
    X
    ஹீத்ரோ விமான நிலையம்

    சிவப்பு பட்டியல் நாடுகளில் இருந்து வருவோருக்கு டெர்மினலை திறக்கும் ஹீத்ரோ விமான நிலையம்

    வரும் நாட்களில் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதால் இந்த முடிவை ஹீத்ரோ விமான நிலையம் எடுத்துள்ளது.
    லண்டன்:

    கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சர்வதேச விமான போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டது. பின்னர் வைரஸ் தொற்று குறையத் தொடங்கியதும், இரு தரப்பு ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு நாடுகள் விமானங்களை இயக்குகின்றன. பாதிப்புகளுக்கு ஏற்ப விமான பயணங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படுகின்றன. 

    அவ்வகையில், கொரோனா பரவல் அதிகம் உள்ள இந்தியா உள்ளிட்ட சுமார் 40 நாடுகளை பிரிட்டன் அரசு சிவப்பு பட்டியலில் சேர்த்து, அந்த நாடுகளில் இருந்து பிரிட்டன் வருவதற்கு தடை விதித்துள்ளது.  ஆனால், அந்த நாடுகளில் தங்கியிருக்கும் பிரிட்டன், அயர்லாந்து மக்கள் மற்றும் பிரிட்டன் குடியுரிமை உள்ளவர்கள் மட்டும் பிரிட்டனுக்கு வரலாம். அவ்வாறு வருபவர்களும் அரசு அங்கீகாரம் பெற்ற குவாரண்டைன் ஓட்டலில் 10 நாட்கள் தங்களை கட்டாயம் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். அதன்படி பயணிகள் வருகை அனுமதிக்கப்படுகிறது.

    ஹீத்ரோ விமான நிலையம்

    இந்நிலையில், கொரோனாவால் அதிகம் பாதிப்புக்குள்ளான நாடுகளில் இருந்து வருபவர்கள் நாளுக்கு நாள் அதிகரிப்பதால், புதிய சர்ச்சை எழுந்தது. அந்த பயணிகளுடன் மற்ற நாடுகளில் இருந்து வந்து இறங்கும் பயணிகளும் விமான நிலையத்தில் ஒரே வரிசையில் வருவதால், கொரோனா பரவும் அபாயம் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்தனர்.

    இதையடுத்து, சிவப்பு பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து நேரடி விமானம் மூலம் வருபவர்களுக்காக லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் தனி முனையத்தை திறக்க உள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஓராண்டாக மூடப்பட்டிருந்த மூன்றாவது முனையத்தை (டெர்மினல்), இந்த பயணிகளுக்காக திறக்க உள்ளது. ஜூன் 1ம் தேதி முதல் இந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகள், மூன்றாவது முனையம் வழியாக வெளியேறுவார்கள். பின்னர், அவர்கள் அனைவரும் அங்கிருந்து நேராக 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்வதற்காக ஓட்டலுக்கு செல்வார்கள். 

    விமான போக்குவரத்து அனுமதிக்கான பச்சை பட்டியலில் மேலும் 12 நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த நாடுகளில் இருந்து திரும்பி வரும் பயணிகள் தனிமைப்படுத்த தேவையில்லை. எனவே, வரும் நாட்களில் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதால் இந்த முடிவை ஹீத்ரோ விமான நிலையம் எடுத்துள்ளது. 

    கொரோனா பெருந்தொற்று நோயால் விமான பயணத்திற்கான தேவை கடுமையாக வீழ்ச்சி அடைந்த நிலையில், ஹீத்ரோ விமான நிலையத்தின் 3 மற்றும் 4வது முனையத்தில் செயல்பட்ட விமான நிறுவனங்கள் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து அனைத்து விமானங்களும் 2 மற்றும் 5வது முனையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.

    இதுபற்றி ஹீத்ரோ விமான நிலைய செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “ஒவ்வொரு நாடும் தங்கள் மக்களுக்கு வெவ்வேறு விகிதங்களில் தடுப்பூசி போடுவதால், சிவப்பு பட்டியல் வழித்தடங்கள் எதிர்கால பயணத் திட்டத்தின் ஒரு அம்சமாக இருக்கும். சிவப்பு பட்டியல் நாடுகளில் இருந்து நேரடி விமானங்களில் வரும் பயணிகளுக்காக, ஜூன் 1 முதல் மூன்றாவது முனையத்தில் பிரத்யேக வருகை வசதியைத் திறப்பதன் மூலம் ஹீத்ரோ தனது இயல்பு நிலைக்கு திரும்புகிறது. இந்த வசதியை விரைவில் 4வது முனையத்திற்கும் கொண்டு செல்வோம்.” என்றார்.

    Next Story
    ×