search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிவாரண பொருட்கள் கொண்டுசெல்லப்பட்ட வாகனம்
    X
    நிவாரண பொருட்கள் கொண்டுசெல்லப்பட்ட வாகனம்

    காசாவுக்கு நிவாரண உதவி வரும் பாதையை அடைத்த இஸ்ரேல்

    காசா பகுதி மிக குறுகிய நிலப்பரப்பு கொண்டதாகும். இந்த நாட்டுக்கு எகிப்து மற்றும் ஜோர்டான் நாட்டில் இருந்து நிவாரண பொருட்கள் மற்றும் மருந்துகள் வந்து கொண்டிருந்தன.
    டெல்அவிவ்:

    இஸ்ரேலுக்கும், காசாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது. இரு தரப்பினரும் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று சர்வதேச நாடுகள் கேட்டுக்கொண்ட போதும் இதுவரை போரை நிறுத்தவில்லை.

    நேற்று முன்தினம் இஸ்ரேல் அடுத்தடுத்து விமானங்கள் மூலம் குண்டுகளை வீசியது. இதில் ஏராளமான கட்டிடங்கள் தகர்க்கப்பட்டன. இதைத் தொடர்ந்து ஹமாஸ் இயக்கத்தினர் காசாவில் இருந்து ஏவுகணைகளை வீசினார்கள்.

    நேற்று இதேபோல் காசாவில் இருந்து குண்டுகள் வீசப்பட்டன. அப்போது அங்கு விவசாய பண்ணையில் பணியில் ஈடுபட்டிருந்த தாய்லாந்தை சேர்ந்த 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்ட இஸ்ரேல் நாட்டினர் படுகாயம் அடைந்தனர்.

    இது இஸ்ரேலுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. எனவே மீண்டும் தாக்குதலை நடத்தியது. அத்துடன் காசாவுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் முக்கிய பாதையையும் இஸ்ரேல் அடைத்தது.

    காசா பகுதி மிக குறுகிய நிலப்பரப்பு கொண்டதாகும். இந்த நாட்டுக்கு எகிப்து மற்றும் ஜோர்டான் நாட்டில் இருந்து நிவாரண பொருட்கள் மற்றும் மருந்துகள் வந்து கொண்டிருந்தன. ஜோர்டான் நாட்டில் இருந்து இஸ்ரேலில் உள்ள கரேம் சலோன் வழியாக காசாவுக்கு நிவாரணப்பொருட்கள் செல்வது வழக்கம். அந்த பாதையை இஸ்ரேல் அடைத்து விட்டது.

    இதன் காரணமாக நிவாரண பொருட்கள் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பொருட்கள் மற்றும் மருந்துகள் தட்டுப்பாட்டால் மக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். இந்தநிலையில் முக்கிய பாதையை அடைத்து விட்டதால் மக்கள் இன்னும் மோசமாக பாதிப்பை சந்திக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×