search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மத நிந்தனை விவகாரம் - பாகிஸ்தானில் போலீஸ் நிலையம் சூறையாடல்

    மத நிந்தனை விவகாரத்தில் பாகிஸ்தானில் போலீஸ் நிலையம் சூறையாடப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள கோல்ரா என்ற கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவர் முஸ்லிம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசியதாக அங்குள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் மத நிந்தனை சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து அந்த நபரை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

    இதனிடையே அந்த நபர் முஸ்லிம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசியது அந்த கிராமத்தில் காட்டு தீ போல பரவியது.

    இதையடுத்து அந்த நபரை அடித்து கொலை செய்யும் நோக்கில் நூற்றுக்கணக்கான கிராம மக்கள் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். கிராம மக்கள் போலீசாரிடம் அந்த நபரை தங்களிடம் ஒப்படைக்கும்படி கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.‌ போலீசார் அவர்களை கலைந்து செல்லும்படி எச்சரித்தனர்.

    இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் இரும்பு கம்பிகள், உருட்டுக் கட்டைகள் உள்ளிட்டவற்றால் போலீஸ் நிலையத்தை அடித்து நொறுக்கினர்.

    எனினும் போலீசார் தங்களையும், கைது செய்து வைக்கப்பட்டுள்ள அந்த நபரையும் பாதுகாப்பதற்காக போலீஸ் நிலையத்தை உள்பக்கமாக பூட்டிக் கொண்டனர்.

    பின்னர் அருகிலுள்ள மற்றொரு போலீஸ் நிலையத்தை தொடர்பு கொண்டு தங்களுக்கு உதவும்படி கேட்டுக்கொண்டனர். அதன்பேரில் பயங்கரவாத தடுப்பு பிரிவு படையினர் மற்றும் கலவர தடுப்பு போலீசார் அங்கு விரைந்தனர். அவர்கள் போலீஸ் நிலையத்துக்குள் இருந்த சக போலீசாரையும், கைது செய்யப்பட்ட அந்த நபரையும் பத்திரமாக மீட்டனர். அதன் பின்னர் தடியடி நடத்தி கிராம மக்களை அங்கிருந்து விரட்டியடித்தனர். மத நிந்தனை விவகாரத்தில் போலீஸ் நிலையம் சூறையாடப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×