search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கொரோனா பாதிப்பு அதிகரிப்பு - வெளிநாட்டினர் தைவான் வர தடை விதிப்பு

    கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடான தைவான் கொரோனா வைரஸ் பரவலை வெற்றிகரமாக கட்டுக்குள் கொண்டுவந்த நாடுகளில் ஒன்றாக இருந்து வந்தது.
    தைபே:

    கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடான தைவான் கொரோனா வைரஸ் பரவலை வெற்றிகரமாக கட்டுக்குள் கொண்டுவந்த நாடுகளில் ஒன்றாக இருந்து வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக தைவானில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளது.

    அங்கு கடந்த சனிக்கிழமை முதல் முறையாக தினசரி கொரோனா பாதிப்பு 100-க்கும் அதிகமாக பதிவானது. இந்த நிலையில் அங்கு இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் 333 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் அங்கு கொரோனா மொத்த பாதிப்பு 2,017 ஆக அதிகரித்துள்ளது.‌ அங்கு இதுவரை கொரோனாவுக்கு 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்த நிலையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் வெளிநாட்டினர் தைவான் வருவதற்கு ஒரு மாதம் தடை விதித்து அந்த நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தைவான் நோய் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று நோய் நிலைமை காரணமாக, உள்நாட்டு தொற்று நோயியல் நிலைமை மற்றும் நமது குடிமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க மே 19 முதல் பின்வரும் எல்லை கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகிறது.‌ அதன்படி அவசர மற்றும் மனிதாபிமான வழக்குகளுக்கான விதிவிலக்குகளுடன் வெளிநாட்டினர் தைவானுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்படுகிறது. தைவான் வழியாக பயணிகள் விமான போக்குவரத்து நிறுத்தப்படும்.‌ இந்த தடைகள் ஜூன் மாதம் 18-ந்தேதி வரை தொடரும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×