search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    காங்கோ நாட்டில் ரம்ஜான் நாளில் கலவரத்தில் ஈடுபட்ட 29 பேருக்கு மரண தண்டனை

    காங்கோ நாட்டில் 2003-ம் ஆண்டு முதல் மரண தண்டனைக்கு தடை இருப்பதால், மரண தண்டனை விதிக்கப்படும் குற்றவாளிகள் அதற்கு பதிலாக ஆயுள் தண்டனையை அனுபவிப்பார்கள்.
    கின்ஷாசா:

    மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கடந்த வியாழக்கிழமை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி தலைநகர் கின்ஷாசாவில் உள்ள மிகப்பெரிய மைதானம் ஒன்றில் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    அப்போது இந்த நிகழ்ச்சிக்கு யார் தலைமை தாங்கி வழி நடத்துவது என்பது தொடர்பாக முஸ்லிம்களின் இரு பிரிவினரிடையே தகராறு ஏற்பட்டது.‌ பின்னர் இது பெரும் கலவரமாக வெடித்தது.‌கலவரத்தை தடுக்க முயன்ற போலீசார் மீது இரு தரப்பினரும் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். போலீஸ் வாகனங்களை தீவைத்து எரித்தனர். இதில் ஒரு போலீஸ் அதிகாரி கொல்லப்பட்டார். மேலும் பல போலீசார் படுகாயமடைந்தனர்.

    இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.‌ இந்த கலவரம் தொடர்பாக 31 பேர் கைது செய்யப்பட்டனர்.இது தொடர்பான வழக்கு ஒரே நாளில் விசாரித்து முடிக்கப்பட்டது.‌ அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இந்த வழக்கில் நீதிபதி தனது தீர்ப்பை வழங்கினார்.

    அப்போது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 31 பேரில் 29 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மற்ற இருவருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். காங்கோ நாட்டில் 2003-ம் ஆண்டு முதல் மரண தண்டனைக்கு தடை இருப்பதால், மரண தண்டனை விதிக்கப்படும் குற்றவாளிகள் அதற்கு பதிலாக ஆயுள் தண்டனையை அனுபவிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×