search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊடக அலுவலகங்கள் உள்ள கட்டிடம் தீப்பற்றி எரியும் காட்சி
    X
    ஊடக அலுவலகங்கள் உள்ள கட்டிடம் தீப்பற்றி எரியும் காட்சி

    6வது நாளாக நீடிக்கும் சண்டை... இஸ்ரேல் தாக்குதலில் பற்றி எரியும் காசா முனை

    இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான் தாக்குதலில், காசா முனையில் உள்ள மிகப்பெரிய கட்டிடம் ஒன்று கடுமையாக சேதமடைந்தது.
    டெல்அவிவ்:

    இஸ்ரேலுக்கும், காசாமுனையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான மோதல் முன்னெப்போதும் இல்லாத அளவில் கடுமையாக உள்ளது. ஜெருசலேமில் உள்ள அல்-அக்‌ஷா மத வழிபாட்டு தளத்தில் கடந்த திங்கட்கிழமை இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலே தற்போதைய உக்கிரமான சண்டைக்கு வழிவகுத்தது. 

    பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மீது காசா முனையில் இருந்து ஹமாஸ் அமைப்பு ராக்கெட் தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேலியர்கள் பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதலையடுத்து காசா முனை மீது இஸ்ரேலிய பாதுகாப்பு படை அதிரடியாக வான் தாக்குதலை நடத்தி வருகிறது. இரு தரப்பும் மாறிமாறி நடத்தி வரும் இந்த தாக்குதல்களில் ஏராளமானோர் உயிரிந்துள்ளனர். காசா முனையில்தான் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. 

    தாக்குதலுக்கு இலக்கான கட்டிடங்கள்

    இந்நிலையில் 6வது நாளாக இன்றும்  தாக்குதல் நீடித்தது. இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான் தாக்குதலில், காசா முனையில் உள்ள மிகப்பெரிய கட்டிடம் ஒன்று கடுமையாக சேதமடைந்தது. பல்வேறு ஊடக அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் வீடுகள் அமைந்துள்ள இந்த கட்டிடம் தகர்க்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ஆனால் மிகப்பெரிய கட்டிடங்களை குறிவைத்து தாக்கப்போவதாகவும், அதனால் கட்டிடங்களில் உள்ளவர்கள் வெளியேற வேண்டும் என்றும் இஸ்ரேல் ராணுவம் எச்சரித்தது. இதனால் அனைவரும் கட்டிடத்தை காலி செய்து வெளியேறிவிட்டனர். இந்த எச்சரிக்கை விடுத்த ஒரு மணி நேரத்தில் ஊடக அலுவலகங்கள் அமைந்துள்ள கட்டிடம் தகர்க்கப்பட்டுள்ளது.

    இது ஒருபுறமிருக்க மேற்கு கரையில் போராட்டம் நடத்தி வரும் பாலஸ்தீனர்களுக்கும், இஸ்ரேல் படைகளுக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்படுகிறது. 

    இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே பதற்றத்தை தணித்து போர் நிறுத்த உடன்படிக்கை கொண்டு வரும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் தூதரும் இஸ்ரேல், பாலஸ்தீன விவகாரங்களுக்கான துணை செயலாளரமான ஹாடி அமர் இஸ்ரேல் விரைந்தார். இரு நாடுகளின் தலைவர்களையும் அவர் சந்தித்து பேச உள்ளார்.
    Next Story
    ×