search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீர்மூழ்கி கப்பல்
    X
    நீர்மூழ்கி கப்பல்

    53 மாலுமிகளுடன் மாயமான நீர்மூழ்கி கப்பல் கடலில் மூழ்கியதாக இந்தோனேசியா அறிவிப்பு

    இந்தோனேசியா நாட்டின் கடற்படைக்கு சொந்தமான, கே.ஆர்.ஐ. நங்கலா-402 நீர்மூழ்கிக்கப்பல் கடந்த புதன்கிழமை பாலித்தீவின் வட பகுதியில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது மாயமானது.
    ஜகார்த்தா:

    இந்தோனேசியா நாட்டின் கடற்படைக்கு சொந்தமான, கே.ஆர்.ஐ. நங்கலா-402 நீர்மூழ்கிக்கப்பல் கடந்த புதன்கிழமை பாலித்தீவின் வட பகுதியில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது மாயமானது. இந்த கப்பலில் மொத்தம் 53 மாலுமிகள் இருந்தனர். இதையடுத்து இந்தோனேசிய கடற்படை நீர்மூழ்கி கப்பல் மாயமானதாக அறிவித்து தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டது.

    6 போர்க்கப்பல்கள் உள்பட 20 கப்பல்கள், 4 விமானங்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டர் ஆகியவை தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டன. இதுதவிர ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் மீட்பு பணியில் கைகோர்த்துள்ளன.

    இந்த நிலையில் மாயமான நீர்மூழ்கி கப்பல் கடலில் மூழ்கி விட்டதாக இந்தோனேசிய கடற்படை அறிவித்துள்ளது. காணாமல் போன நீர்மூழ்கிக்கப்பல், மூழ்கியதாக கருதப்படுகிற இடத்தில் இருந்து, கப்பலின் சில பொருட்களை மீட்புக்குழுவினர் கண்டெடுத்ததை தொடர்ந்து இந்தோனேசிய கடற்படை இவ்வாறு அறிவித்துள்ளது.

    இதுகுறித்து இந்தோனேசிய கடற்படை தளபதி யூடோ மார்கோனோ நேற்று பத்திரிகையாளர்களிடம் கூறுகையில் ‘‘நீர்மூழ்கி கப்பலில் இருந்து வந்ததாக நம்பப்படும் உண்மையான ஆதாரங்கள் மூலம், மாயமான நீர்மூழ்கி கப்பல் என்ற கட்டத்தில் இருந்து கடலில் மூழ்கிய நீர்மூழ்கி கப்பல் என்ற கட்டத்துக்கு நாங்கள் சென்று விட்டோம். கப்பலில் 53 பணியாளர்களுக்கான ஆக்சிஜன் சப்ளை இன்று அதிகாலையுடன் முடிந்து விட்டதால், யாரும் உயிர் பிழைத்து இருப்பார்கள் என்கிற நம்பிக்கை இல்லை’’ என கூறினார்.
    Next Story
    ×