search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அலெக்சி நவால்னி
    X
    அலெக்சி நவால்னி

    அலெக்சி நவால்னி உயிரிழந்தால் ரஷியா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் - அமெரிக்கா எச்சரிக்கை

    ரஷியாவில் அதிபர் புதினையும், அவரது அரசையும் கடுமையாக விமர்சித்து வந்தவர் அந்த நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி.
    மாஸ்கோ:

    ரஷியாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி உயிரிழந்தால் ரஷியா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

    ரஷியாவில் அதிபர் புதினையும், அவரது அரசையும் கடுமையாக விமர்சித்து வந்தவர் அந்த நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி.

    கடந்த ஆண்டு இவரை கொலை செய்யும் நோக்கில் விமான நிலையத்தில் அவர் குடித்த டீயில் நோவிசோக் என்று ரசாயன நஞ்சை கலந்து கொடுத்ததில் அவர் கிட்டத்தட்ட இறக்கும் நிலைக்கு சென்றார்.

    இந்த சதியின் பின்னணியில் அதிபர் புதினின் அரசு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனை தொடர்ந்து இந்த விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷியாவுக்கு எதிராக ஒன்று திரண்டன.

    நவால்னி


    இதற்கிடையில் நவால்னிக்கு நஞ்சு செலுத்தப்பட்ட பின்னணியில் ரஷிய அரசாங்கம் இருப்பதாக அமெரிக்க உளவு பிரிவு ஆய்வு செய்து முடிவுக்கு வந்தது. அதன் பிறகு மூத்த ரஷிய அரசு அதிகாரிகளுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது.

    இதற்கிடையில் ரசாயன தாக்குதலுக்கு ஆளான நவால்னி ஜெர்மனியில் சிகிச்சை பெற்று கடந்த ஜனவரி மாதம் 17ந் தேதி மீண்டும் ரஷியா திரும்பியபோது விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டார்.

    பழைய பண மோசடி வழக்கில் அவரை கைது செய்ததாக ரஷிய போலீசார் கூறிய நிலையில் இந்த வழக்கில் அவருக்கு 2½ ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த பிப்ரவரி மாதம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

    இதனிடையே சிறையில் வலது கால் மரத்துப்போய், முதுகுவலியால் அவதிப்படும் நவால்னிக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் தனது மருத்துவர்களை பார்க்க அனுமதிக்க கோரி கடந்த மாதம் 31-ந் தேதி முதல் சிறையில் நவால்னி உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

    இதனால் அவரது உடலில் பொட்டாசியத்தின் அளவு தீவிரமாக அதிகரித்துள்ளதாகவும், இதற்கு உடனடியாக சிகிச்சை அளிக்காவிட்டால் எந்த நேரத்திலும் அவர் உயிரிழக்க கூடும் என்றும் அவரது டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

    ஆனால் ரஷியா இதை மறுக்கிறது. கவனம் பெறுவதற்காக நவால்னி இப்படி நடந்து கொள்வதாக அந்த நாட்டு அரசு குற்றம் சாட்டுகிறது.

    இதனிடையே இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளும் ஐரோப்பிய கூட்டமைப்பும் நவால்னி நிலை குறித்தும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் கவலை தெரிவித்துள்ளன.

    இந்த நிலையில் சிறையில் நவால்னி உயிரிழந்தால் கடுமை யான பின்விளைவுகளைசந்திக்க நேரிடும் என ரஷியாவுக்கு அமெரிக்கா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இது குறித்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜேக் சுல்லிவன் கூறுகையில் "சிறையில் அலெக்சி நவால்னி இறக்க நேர்ந்தால் கடுமையான விளைவுகள் ஏற்படும். சர்வதேச சமூகம் ரஷியாவை இதற்குப் பொறுப்பேற்க வைக்கும்" என கூறினார்.

    அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இந்த விவகாரம் குறித்து பேசுகையில் " சிறையில் நவால்னி நடத்தப்படும் விதம் மற்றும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை நியாயமற்றது முற்றிலும் பொறுப்பற்றது" என்றார்.

    அதேபோல் நவால்னி விவகாரம் குறித்து கவலை தெரிவித்து இருக்கும் ஐரோப்பிய கூட்டமைப்பு, நவால்னியின் மருத்துவர்கள் அவரை சந்திக்க உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.

    "நவால்னி சுதந்திரமான மருத்துவச் சிகிச்சை பெற உடனடியாக அனுமதிக்கப்பட வேண்டும். அரசியல் காரணங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்" என இங்கிலாந்து வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    இதனிடையே நவால்னிக்கு சிகிச்சை அளிக்க வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் நாளை (புதன்கிழமை) நாடு தழுவிய போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
    Next Story
    ×