search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இருவரும் முழங்கைகளை உரசி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய போது எடுத்த படம்.
    X
    இருவரும் முழங்கைகளை உரசி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய போது எடுத்த படம்.

    இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் அபுதாபி வருகை - அமீரக மந்திரி வரவேற்பு

    அபுதாபிக்கு அரசுமுறை பயணமாக இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் வருகை புரிந்தார். அவரை அமீரக வெளியுறவு மந்திரி ஷேக் அப்துல்லா பின் ஜாயித் அல் நஹ்யான் வரவேற்றார்.
    அபுதாபி:

    அமீரகத்துக்கு 3 நாள் சுற்றுப்பயணமாக கடந்த 17-ந் தேதி பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி மந்திரி ஷா மஹ்மூத் குரேசி துபாய் வந்தார். தொடர்ந்து நேற்று அவர் துபாயில் நடைபெற உள்ள எக்ஸ்போ 2020 கண்காட்சி வளாகத்தில் பார்வையிட்ட அவர், அமீரகம் சமரசம் செய்வதற்கு பாகிஸ்தான் வரவேற்பு தெரிவிப்பதாக கூறினார். இது சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில், இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் அரசு முறை பயணமாக நேற்று அபுதாபிக்கு வந்தடைந்தார். அவரை அமீரக வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகத்துக்கான மந்திரி ஷேக் அப்துல்லா பின் ஜாயித் அல் நஹ்யான் வரவேற்றார்.

    இதற்கிடையே இந்திய-பாகிஸ்தான் நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் அமீரகம் வந்திருப்பது பல்வேறு விதத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னதாக இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கடந்த ஆண்டில் நவம்பர் மாதம் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது இருதரப்பு விவகாரங்கள் குறித்து இரு வெளியுறவு மந்திரிகளும் விரிவாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி ஷா மஹ்மூத் குரேசியும் 3 நாள் சுற்றுப்பயணமாக அமீரகம் வந்துள்ளதை மேற்கோள் காட்டி, அமெரிக்காவுக்கான அமீரக தூதர் யூசெப் அல் ஒதைபா, இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பதற்றத்தை குறைப்பதிலும், இருதரப்பு உறவுகளை ஆரோக்கியமான நிலைக்கு கொண்டு செல்வதிலும் அமீரகத்திற்கு பங்கு உள்ளது என டுவிட்டரில் பதிவு செய்திருந்தார். இதற்கிடையே அமீரகம் இருநாட்டு பிரச்சினைகளில் சமரசத்தில் ஈடுபட வாய்ப்புகள் உள்ளது என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    இதனை அடுத்து இந்தியா-பாகிஸ்தான் இடையே பேச்சு வார்த்தை குறித்த கேள்விக்கு இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி நேரடி பதிலை தெரிவிக்க மறுத்துவிட்டார். இந்தியா- பாகிஸ்தானுக்கு இடையில் ஏதாவது பேச்சுவார்த்தை நடைபெறுகிறதா? என்பது முக்கியமல்ல. ஆனால் இருநாடுகளுக்கு இடையே என்ன பிரச்சினை உள்ளது? என்பது குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என கூறி முடித்துக்கொண்டார்.

    இந்தியாவில் புல்வாமா குண்டுவெடிப்பு தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் கொல்லப்பட்டனர். கூடுதலாக கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக அறிவித்ததை அடுத்து இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவுகள் மேலும் மோசமடைந்துள்ளது.

    இந்த நிலையில் அமீரகம் வந்துள்ள இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவு மந்திரிகளின் சந்திப்பு நடைபெறுமா? இதேபோல அமீரகம் சமரசம் செய்து இருதரப்பு பிரச்சினைகளை தீர்க்க முயற்சி செய்யுமா? என்பது இருநாடுகளின் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.
    Next Story
    ×