search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பருவநிலை மாற்றத்தை தடுப்பதில் அமெரிக்கா, சீனா இடையே உடன்பாடு

    பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளும் முரண்பட்டாலும் பருவநிலை மாற்றத்துக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகள் எடுப்பதில் இரு நாடுகளும் ஒருமித்த கருத்தை கொண்டுள்ளன.
    பீஜிங்:

    பருவநிலை மாற்றத்தை தடுப்பதில் அமெரிக்கா, சீனா இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் பிற நாடுகளுடன் இணைந்து பணியாற்ற இரு நாடுகளும் உறுதி பூண்டுள்ளன.

    உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான உறவு கடந்த சில ஆண்டுகளில் மிகவும் மோசமடைந்துள்ளது. வர்த்தக போரில் தொடங்கிய பிரச்சினை படிப்படியாக வளர்ந்து மோதலாக உருவாகி நிற்கிறது.

    வர்த்தகம், கொரோனா வைரஸ் விவகாரம், உய்குர் முஸ்லிம்கள் மீதான மனித உரிமை மீறல்கள், ஹாங்காங் மற்றும் தைவான் மீதான ஆக்கிரமிப்பு போன்ற பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையில் மோதல் நிலவி வருகிறது.

    இப்படி பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளும் முரண்பட்டாலும் பருவநிலை மாற்றத்துக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகள் எடுப்பதில் இரு நாடுகளும் ஒருமித்த கருத்தை கொண்டுள்ளன.

    2015-ம் ஆண்டு கையெழுத்தான பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம் உலக நாடுகள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தன் கார்பன் உமிழ்வைக் குறைக்கும் இலக்கை அதிகரித்துக் கொள்ளவேண்டும் என்பதுதான்.

    உலகிலேயே அதிக அளவில் கார்பன் உமிழ்வை கொண்ட நாடுகளாக அமெரிக்கா மற்றும் சீனா உள்ளன. எனவே பருவநிலை மாற்ற விவகாரத்தில் இந்த இரு நாடுகளின் ஒத்துழைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

    இந்தநிலையில் பருவநிலை மாற்றம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்காவின் பருவநிலைக்கான சிறப்பு தூதர் ஜான் கெர்ரி கடந்த வாரம் சீனாவுக்கு சென்றார்.

    அங்கு அவர் ஷாங்காய் நகரில் சீனாவின் பருவநிலைக்கான சிறப்பு தூதர் ஷி ஜென்ஹூவாவை நேரில் சந்தித்து பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்தார்.

    இந்த பேச்சுவார்த்தைகளின் முடிவில் இரு நாடுகளுக்கும் இடையில் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி பருவநிலை மாற்றத்தை தடுக்க ‌ ஒருவருக்கொருவர் ஒத்துழைக்கவும், பிற நாடுகளுடன் இணைந்து செயல்படவும் இரு நாடுகளும் உறுதி பூண்டன.

    இது தொடர்பாக இரு நாடுகளின் சார்பில் நேற்று கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

    அமெரிக்கா மற்றும் சீனா காலநிலை நெருக்கடியை சமாளிக்க ஒருவருக்கொருவர் மற்றும் பிற நாடுகளுடன் ஒத்துழைக்க உறுதி பூண்டுள்ளன. இந்த பருவநிலை பிரச்சினை தீவிரத்தன்மை மற்றும் அவசரத்துடன் கவனிக்கப்பட வேண்டும். கார்பன் உமிழ்வை குறைப்பதற்கான கூடுதல் நடவடிக்கைகளுக்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன‌‌. அத்துடன் குறைந்த கார்பன் ஆற்றலுக்கு மாறுவதற்கு வளரும் நாடுகளுக்கு நிதியளிக்க இரு நாடுகளும் ஒப்புதல் தெரிவித்துள்ளன.

    இருநாடுகள் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதோடு பருவநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. சபையின் மாநாடு மற்றும் பாரிஸ் ஒப்பந்தம் உள்ளிட்ட பல தரப்பு செயல்முறைகளிலும் ஒத்துழைப்பை மேம்படுத்த அமெரிக்கா மற்றும் சீனா உறுதிபூண்டுள்ளன.

    அமெரிக்காவில் அடுத்த வாரம் நடைபெறும் பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டை இரு நாடுகளும் எதிர்நோக்குகின்றன.

    இவ்வாறு அந்த கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    இதனிடையே வருகிற 22, 23 ஆகிய தேதிகளில் பருவநிலை மாற்றம் தொடர்பாக அமெரிக்கா உச்சி மாநாட்டை நடத்துகிறது என்பதும், இதில் கலந்து கொள்ளும்படி சீன அதிபர் ஜின்பிங் உள்பட உலக தலைவர்கள் 40 பேருக்கு ஜனாதிபதி ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த மாநாட்டில் அமெரிக்காவும், பிற நாடுகளும் கார்பன் உமிழ்வை குறைப்பதற்கான கூடுதல் தேசிய இலக்குகளை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதேசமயம் இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங் கலந்து கொள்வாரா ? இல்லையா? என்பதை சீனா இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×