search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மியான்மரில் சொந்த மக்கள் மீது ராணுவம் குண்டு வீச்சு - ஆயிரக்கணக்கானோர் தாய்லாந்துக்கு தப்பியோட்டம்

    மியான்மரில் கடந்த மாதம் 1-ந்தேதி முதல் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. ராணுவ ஆட்சி தொடங்கியது முதலே அந்த நாட்டு மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
    பாங்காக்:

    மியான்மரில் சொந்த மக்கள் மீது ராணுவம் குண்டு வீச்சு நடத்தியதை தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் தாய்லாந்துக்கு தப்பியோடினர்.

    மியான்மரில் கடந்த மாதம் 1-ந்தேதி முதல் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. ராணுவ ஆட்சி தொடங்கியது முதலே அந்த நாட்டு மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஜனநாயகத்தை மீட்டெடுக்க கோரும் மக்களின் இந்த தன்னெழுச்சி போராட்டம் ராணுவத்தின் அடக்குமுறையால் நசுக்கப்பட்டு வருகிறது.

    போராட்டம்


    கடந்த சனிக்கிழமை ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒரே நாளில் 114 பேர் கொல்லப்பட்டனர்.

    ராணுவ ஆட்சி தொடங்கியதற்கு பிறகு ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது இதுவே முதல் முறை. இதனால் இது உலக அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து சர்வதேச நாடுகள் மியான்மர் ராணுவத்தை வன்மையாக கண்டித்தன.

    இந்தநிலையில் மியான்மர் ராணுவம் சொந்த நாட்டு மக்கள் மீதே குண்டு வீச்சு நடத்தியதை தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் தாய்லாந்துக்கு தப்பி ஓடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மியான்மரின் தென்கிழக்கு பகுதியில் உள்ள கெய்ன் மாகாணத்தில் கரேன் என்ற இனத்தைச் சேர்ந்த மக்கள் பெருவாரியாக வசித்து வருகின்றனர். இவர்கள் 70 ஆண்டுகளுக்கும் மேலாக சுயாட்சி கோரி மியான்மர் அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர்.

    இந்த நிலையில் மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்துவிட்டு ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியதைத் தொடர்ந்து கரேன் இன மக்கள் தங்களின் போராட்டங்களை தீவிரப்படுத்தினர்.

    அதேவேளையில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி ராணுவத்துடன் ஆயுத மோதலில் ஈடுபட்டு வரும் ‘கரேன் தேசிய விடுதலை ராணுவம்' என்கிற கொரில்லாப் படை ராணுவத்துக்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில் ஏற்கனவே ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி வரும் ராணுவம் அதே பாணியில் கரேன் இன மக்களை ஒடுக்க முடிவு செய்தது.

    அதன்படி கெய்ன் மாகாணத்தில் தாய்லாந்து நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள முட்ரா மாவட்டத்தில் ராணுவ விமானங்கள் கடந்த சனிக்கிழமை மாலை வான் தாக்குதல் நடத்தின.

    இதன் தொடர்ச்சியாக மியான்மர் தாய்லாந்து எல்லையில் சால்வீன் ஆறு பகுதியில் உள்ள கிராமங்கள் மீது நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று காலை வரை போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன.

    எனினும் ராணுவத்தின் இந்த குண்டு வீச்சில் உயிர் இழப்புகள் எதுவும் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் இல்லை.

    அதேவேளையில் குண்டு வீச்சு குறித்த அச்சம் காரணமாக ஆயிரக்கணக்கான கிராமவாசிகள் சால்வீன் ஆற்றை கடந்து தாய்லாந்துக்கு தப்பிச்சென்றனர். தாய்லாந்தின் வடக்கு பகுதியில் உள்ள மே ஹாங் சான் மாகாணத்தில் அவர்கள் தஞ்சம் புகுந்துள்ளனர்.

    இதுவரை 3 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் மியான்மரில் இருந்து தங்கள் நாட்டுக்கு வந்துள்ளதாக தாய்லாந்து தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×